ஐடி விதிகளைப் பின்பற்ற ட்விட்டருக்கு கடைசி வாய்ப்பு: காலக்கெடு நிர்ணயித்து மத்திய அரசு எச்சரிக்கை

ட்விட்டர்
ட்விட்டர்

நாட்டில் உள்ள புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளைப் பின்பற்ற ட்விட்டர் இந்தியா சமூக வலைத்தள நிறுவனத்துக்கு மத்திய அரசு ஒரு கடைசி வாய்ப்பை வழங்கியுள்ளது.

தகவல் தொழில்நுட்ப விதிககளை முழுமையாக பின்பற்ற டிவிட்டர் நிறுவனத்துக்கு புதிய காலக்கெடு ஜூலை 4-ம் தேதி ஆகும். அதற்குள் விதிகளுக்கு கட்டுப்பட தவறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் உத்தரவுகளை பின்பற்றாவிட்டால் ட்விட்டர் நிறுவனம் சட்டப்பாதுகாப்பை இழக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ட்விட்டர் இந்தியா நிறுவனம் ஐடி சட்டத்தின் 69 ஏ பிரிவின் கீழ் அனுப்பப்பட்ட உள்ளடக்கத்தை அகற்றும் அறிவிப்புகள் மீது மீண்டும் மீண்டும் செயல்படத் தவறிவிட்டது. மேலும், உள்ளடக்கத்தை அகற்றாததற்காக வழங்கப்பட்ட நோட்டீஸ்களுக்கும் பதிலளிக்கவில்லை. ஜூன் 6 மற்றும் 9 தேதிகளில் ட்விட்டருக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்களில் வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறியதை சுட்டிக்காட்டி அரசாங்கம் சார்பில் ஜூன் 27 அன்று நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது, இந்த நோட்டீஸ் ட்விட்டரின் தலைமை அதிகாரியிடம் வழங்கப்பட்டது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் போலி செய்திகள் பரவுவதை தடுக்கவும், இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துகள் பகிர்வதை தடுக்கும் நோக்கிலும் புதிய ஐடி விதிமுறைகளை கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்தது. இந்த விதியின் படி சமூக ஊடக நிறுவனங்கள் இந்தியாவில் தனியாக ஒரு குறைதீர்ப்பு அதிகாரியை நியமிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டது. இந்த விதிகளை பேஸ்புக், வாட்ஸ்அப் நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டன, ஆனால் இவ்விதிகள் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என தெரிவித்து ஆரம்பம் முதலே ட்விட்டர் நிறுவனம் கடுமையாக எதிர்த்து வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in