ட்விட்டரை பின்தொடரும் ஃபேஸ்புக்: ஒரே வாரத்தில் ஆயிரக்கணக்கானோர் பணி இழக்கிறார்கள்!

ட்விட்டரை பின்தொடரும் ஃபேஸ்புக்: ஒரே வாரத்தில் ஆயிரக்கணக்கானோர் பணி இழக்கிறார்கள்!

சமூக ஊடக சாம்ராஜ்ஜியத்தில் கோலோச்சும் நிறுவனங்கள் அடுத்தடுத்து ஆட்குறைப்பில் இறங்கி வருகின்றன. ட்விட்டரை தொடர்ந்து ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் மிகப்பெரும் ஆட்குறைப்பை அறிவிக்க உள்ளது.

ஊணுறக்கம் பாராது சமூக ஊடகங்களே கதியென கிடப்பவர்கள் நம்மில் ஏராளம். அந்தளவுக்கு அவர்களை கட்டிபோட்டிருப்பதன் பின்னணியில் அந்த சமூக ஊடக நிரலாக்கங்களை இயக்கும் மூளைகளின் உழைப்பு மறைந்திருக்கிறது. தற்போது அந்த மூளைக்காரர்கள் தத்தம் முதலாளிகளால் வீட்டுக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள்.

எலான் மஸ்கை எள்ளும் மீம்
எலான் மஸ்கை எள்ளும் மீம்

கரோனா பெருந்தொற்று பரவல், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர், சர்வதேசளவிலான பொருளாதார மந்தம் உள்ளிட்ட காரணங்கள் உலகம் முழுக்கவே வேலையில்லாத் திண்டாட்டத்தை அதிகரித்து வருகின்றன. பணியில் இருப்போர் தலைக்கு மேல் அவை கத்தியை கட்டித் தொங்கவிட்டுள்ளன. எப்போது வேலை பறிபோகுமோ என்ற அச்சத்தில் பணியாளர்கள் சதா அலைபாய்கிறார்கள். சராசரி நிறுவனங்கள் என்றில்லாது, உலகளவில் ஜாம்வான்களான பெரும்நிறுவனங்களும் பணியாளர்களை அகற்றி வருகின்றன.

அண்மையில் அப்படி அதிகம் பேசப்பட்டது, ட்விட்டர் முன்னெடுத்த அதிரடி ஆட்குறைப்பு. எலான் மஸ்க் ட்விட்டரை வாங்குவதாக அறிவித்தது முதலே ஆட்குறைப்புக்கான எதிர்பார்ப்புகள் நிலவின. ஆனால் எதிர்பார்த்ததைவிட அதிகமான ஆட்குறைக்கு ட்விட்டர் பணியாளர்கள் ஆளானார்கள். நட்டத்தில் இயங்கும் ட்விட்டர் நிறுவனத்தை தூக்கி நிறுத்த இது அவசியம் என வசையாளர்களின் வாயடைத்திருக்கிறார் எலான் மஸ்க். சமூக ஊடக பாட்டையில் ட்விட்டருக்கு நிகராக நடைபோடும் ஃபேஸ்புக்கும் இந்த ஆட்குறைப்பு தொற்றுக்கு தற்போது ஆளாகி இருக்கிறது.

ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா தனது ஆட்குறைப்பு ஏற்பாட்டை உறுதி செய்தியிருக்கிறது. இந்த வாரம் முதலே செயல்பாட்டில் வரவுள்ள இந்த ஆட்குறைப்பில், முதல் கட்டமாக ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வெளியேற்றப்பட உள்ளன. மெட்டா தலைமை நிர்வாகியான மார்க் சர்க்கர்பெர்க் தரப்பில், ஆட்குறைப்புக்கான காரணங்களை பட்டியலிட ஆரம்பித்துவிட்டார்கள். பயனர்கள் மத்தியில் வரவேற்பிழந்து வரும் ஃபேஸ்புக் டிக்டாக் போன்ற போட்டியாளர்களை எதிர்கொள்ள முடியாது தடுமாறி வருவது அவற்றில் முதன்மையானது. ஃபேஸ்புக்கின் ஆயுளை அறிந்துகொண்ட மார்க் எப்போதோ அதிலிருந்து தனது முனைப்புகளை மெட்டாவுக்கு மடைமாற்றி விட்டார். இனி உலகம் மெட்டாவெர்ஸ் கையில் என்பதால் அதில் திடமாய் காலூன்ற முயற்சிக்கிறார். ஆனால் மெட்டாவில் இப்போது போடும் முதலீட்டை திரும்ப எடுக்க குறைந்தது 10 வருடமேனும் ஆகும் என்பதால், ஃபேஸ்புக் வாயிலான செலவினங்களை குறைக்க முடிவு செய்தார்.

முதல்கட்டமாக ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை உள்ளடக்கிய மெட்டா தாய் நிறுவனத்துக்கு புதிதாய் ஆளெடுப்பதை நிறுத்தினார். தொடர்ந்து இருக்கும் பணியாளர்களை கழித்துக்கட்டவும் ஆரம்பித்தார். இந்த வகையில் முதல் கட்டமாக வாரக்கடைசியில் எதிர்பார்க்கப்படும் மெட்டா அறிவிப்பில் ஃபேஸ்புக்கின் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பணி இழக்க உள்ளனர்.

பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இப்படி பணியாளர்களை நீக்குவது, உலகளவில் வேலைவாய்ப்புச் சந்தையின் சமநிலையை பாதிக்கவும் செய்யும். அனுபவம் மிக்கவர்களின் போட்டியால் புதிய வேலை நாடுநர்களின் பணிவாய்ப்பு கைக்கெட்டாது தட்டிப் போக நேரிடும். அனுபவம் வாய்ந்தவர்களுக்கு அதிக ஊதியம் வழங்குவதை தவிர்க்க புதியவர்களை அடிமாட்டு ஊதியத்துக்கு நிறுவனங்கள் பணியில் அமர்த்த முயலும். இப்படி ஒட்டுமொத்தமாய் எழும் தடுமாற்றம் மந்தம் கண்டிருக்கும் உலக பொருளாதாரத்தை மேலும் சரித்து ஏனைய நிறுவனங்களும், பணியாளர்களுக்கும் சங்கடம் தரலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in