‘ட்விட்டரில் மீண்டும் ட்ரம்ப்?’: எலான் மஸ்க் வாக்கெடுப்பின் பின்னணி

ட்ரம்ப் - எலான்
ட்ரம்ப் - எலான்

அமெரிக்க அதிபர் தேர்தலில் நிற்கப்போவதாக அறிவித்திருக்கும் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அதற்கு முன்னதாக ஒரு விசித்திர வாக்கெடுப்பை எதிர்கொண்டுள்ளார்.

’ட்விட்டரை வாங்கியதும் இதையெல்லாம் செய்யப்போகிறேன்..’ என நிறுவனத்தை கையகப்படுத்தும் முன்னரே சில வாக்குறுதிகளை வழங்கியிருந்தார் எலான் மஸ்க். ட்விட்டரில் தடைக்கு ஆளான ட்ரம்பின் கணக்கை மீட்டுத் தருவதும் அவற்றில் ஒன்று.

ட்ரம்ப் தொடர்ந்து வன்முறையை தூண்டும் விதமாக பதிவிடுவதாக குற்றம்சாட்டிய முன்னாள் ட்விட்டர் நிர்வாகம், அதன்படி அவரது கணக்கை நிரந்தமாக முடக்கியிருந்தது.

எலான் மஸ்க்கின் ’மீட்பர்’ வாக்குறுதிகளில் ட்ரம்ப் மட்டுமன்றி வேறு பலரும் இருந்தனர். சர்ச்சைக்குரிய வகையில் பதிவுகள் மேற்கொண்டதாக ட்விட்டரில் தடைக்கு ஆளான அந்த நபர்களின் கணக்குகளுக்கு அடுத்தடுத்து புத்துயிர் தந்த எலான், ட்ரம்ப் விவகாரத்தில் ஏனோ அமைதியாக இருந்தார். திடீரென்று சனி(நவ.19) காலை ட்ரம்ப் கணக்கை மீட்பது தொடர்பாக பயனர்களின் விருப்பத்தை அறியும் வகையில் ட்விட்டர் வாக்கெடுப்பு ஒன்றை தொடங்கி இருக்கிறார்.

2024 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான அரசியல் மீள் பிரவேசத்தை அறிவித்ததில் 24 மணி நேரமும் லைம் லைட்டில் இருக்கும் ட்ரம்ப் மீது தற்போது கூடுதல் வெளிச்சம் பாய்ந்திருக்கிறது. இன்று மதிய நிலவரப்படி இந்த வாக்கெடுப்பில் 75 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

எலான் மஸ்க்கின் இந்த தடாலடியை, ட்விட்டர் நிர்வாகத்தில் அரங்கேறும் பல்வேறு குளறுபடிகள் மற்றும் தனக்கு எதிரான சர்ச்சைகளில் இருந்து திசை திருப்பும் முயற்சி என்பதாக சக ட்விட்டர் சமூகத்தினர் வர்ணிக்கின்றனர். அவற்றில் முக்கியமாக, ட்விட்டர் நிறுவன ஊழியர்களுக்கு எலான் அளிக்கும் அதிகப்படியான பணிச்சுமை மற்றும் அவை தொடர்பான பொதுவெளி அதிருப்திகளை மழுங்கடிக்கும் முயற்சி என்றெல்லாம் குற்றம் சாட்டுகின்றனர்.

ட்விட்டர் நிறுவனத்தின் பாதிக்கும் மேலானோரை வேலையை விட்டு வெளியே அனுப்பிய எலான் மஸ்க், மிஞ்சி இருப்போரை கசக்கிப் பிழிந்து வருகிறாராம். அலுவலக நேரத்தையும் தாண்டி உழைக்குமாறு கட்டாயப்படுத்துகிறார் என்கிறார்கள். வாரத்துக்கு 156 மணி நேரத்துக்கு தான் உழைப்பதாகவும், டெஸ்லா தொழிற்சாலையின் தரையில் தூக்கத்தை தொடர்வதாகவும் பொதுவெளியில் விளக்கும் எலான், ஊழியர்களிடமும் அதற்கு நிகரான உழைப்பைக் கோருகிறார்.

ட்ரம்ப் வாக்கெடுப்பின் இழையில் ’மக்கள் கருத்தே மகேசன் கருத்து’ என்பதற்கு இணையான லத்தீன் சொல்வழக்கையும்(Vox Populi, Vox Dei) பதிவிட்டிருக்கிறார் எலான் மஸ்க். ’பணியாளர்களின் கருத்தையும், உரிமையையும் மதிக்காத எலான் மஸ்க்கின் வறட்டு பீற்றல்’ என்ற பெயரில் மேற்படி லத்தீன் வழக்கையும் ட்விட்டரில் வைரலாக்கி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in