
ட்விட்டர் நிறுவனத்தை பழித்த இருவரை அழைத்து, ட்விட்டரில் வேலை அளித்திருப்பதாக அறிவித்திருக்கிறார் எலான் மஸ்க்.
ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் அதிபரும் உலகின் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது முதலே அதிரடிகள் தொடர்ந்து வருகின்றன. அவற்றில் முக்கியமானதாக சுமார் 50% பணியாளர்களை ட்விட்டரை விட்டு வெளியேற்றி இருக்கிறார். பொதுவெளியில் கொந்தளிப்பை ஏற்படுத்திய போதும், எலான் மஸ்க் தனது முடிவில் உறுதியாக இருந்தார். ட்விட்டர் நிறுவனத்தை சீரமைக்கவும், கடன்களில் இருந்து நிறுவனத்தை மீட்கவும் இந்த நடவடிக்கைகள் தேவை என வாதிட்டார். ஆனபோதும் உலகளவில் பணியாளர் சமூகத்தினர் மத்தியில் கடும் பழிக்கு ஆளாகி வருகிறார். எலானுக்கு எதிரான எள்ளல்களும் அவற்றில் அடங்கும். அப்படி ‘பிராங்க்’ செய்யப் போய், ராகுல் லிக்மா, டேனியல் ஜான்சன் என இருவர் எலான் மஸ்க் வசம் சிக்கியுள்ளனர்.
ட்விட்டர் நிறுவனத்தின் ஊழியர்கள் கொத்துக்கொத்தாய் வெளியேற்றப்படுவதற்கு எதிராக கோபம் கொண்டிருந்த இவர்கள் இருவரும் பிராங்க் ஷோ ஒன்றினை நிகழ்த்தினர். நம்மூர் யூட்யூபர்கள் சிலர், சாலையில் தேமே என்று செல்பவர்களை வழி மறித்து கலாட்டா வீடியோ பதிவு செய்வதை ’பிராங்க்’ வரிசையில் ரசிக்கிறோம். இந்த வகையில் ராகுல், டேனியல் இருவரும் சற்று மாற்றி யோசித்தனர். ட்விட்டர் நிறுவனத்தின் சான்பிரான்சிஸ்கோ தலைமையகத்திலிருந்து வெளியேறும், வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் அங்கமாக தங்களை வலிய சித்தரித்து அவற்றை பதிவும் செய்தனர். அந்த புகைப்படங்கள் உலகின் முக்கிய ஊடகங்களில் வெளியானது போலவும் நகாசு வேலைகளை செய்தனர். இந்த புகைப்படங்கள் மற்றும் ட்விட்டருக்கு எதிரான இருவரின் கருத்துக்கள் சமூக ஊடகங்களில் சூறாவளியாக மாறின. எலான் மஸ்க் கவனத்துக்கும் அவை வந்தன.
அடுத்த நாளே ராகுல், டேனியல் இருவரின் தோளிலும் கைபோட்டவாறு, ‘இவர்களை பணி நீக்கம் செய்தது எனது பெரும் தவறுகளில் ஒன்று. இருவரையும் மீண்டும் பணியமர்த்தி விட்டேன்’ என்று ட்விட் செய்திருந்தார் எலான் மஸ்க். வழக்கம் போல எலான் மஸ்கின் இந்த பதிவு ட்விட்டருக்கு அப்பாலும் சகல சமூக ஊடகங்களின் டிரெண்டிங்கில் இடம்பிடித்திருக்கிறது. ஆனால் இன்னொரு களேபரத்தை மறைக்கவே எலான் மஸ்க் இம்மாதிரி நாடகம் அரங்கேற்றுகிறார் என்றும் சிலர் தங்கள் பதிவுகளில் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
அண்மையில் சில நாடுகளில் ட்விட்டர் தளம் ஸ்தம்பித்து போனதற்கு வருத்தம் தெரிவித்து எலான் மஸ்க் பதிவிட்டிருந்தார். ஆனால் அந்த விவகாரங்களை கண்காணிக்கும் ட்விட்டர் நிறுவன பணியாளரான எரிக் என்பவர், எலான் பதிவிட்டிருக்கும் தகவல் தவறு என்று எடுத்துரைத்தார். கடுப்பான எலான் மஸ்க் அங்கேயே எரிக் பணி நீக்கத்தை ஆன்லைனில் அறிவித்து சாந்தியடைந்தார். ட்விட்டர் பயனர்கள் மத்தியில் இது கொதிப்பை உருவாக்கவே, பின்னர் அந்த பதிவை எலான் நீக்கிவிட்டார்.
ஆனபோதும் பணியாளர்களை தொடர்ந்து நசுக்கும் ட்விட்டர் முதலாளிக்கு எதிராக ட்விட்டர் தளத்திலேயே பிரச்சாரங்கள் சூடுபிடித்தன. இந்த எதிர்ப்பலையை நீர்த்துப்போகவே ப்ராங்க் பேர்வழிகளை எலான் மஸ்க் பயன்படுத்தி இருப்பதாக எலான் எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். புகைப்படத்தில் எலான் மஸ்க் முகத்தில் தெறிக்கும் மலர்ச்சி, புதிய பணியாளர்களான இளைஞர்கள் முகத்தில் தென்படாததை இதற்கு சாட்சியமாகவும் முன்வைத்திருக்கிறார்கள்.