ட்விட்டரில் புளூடிக் பெறுவதற்கு 8 டாலர் மாதாந்திர கட்டணம்: எலான் மஸ்க் அதிரடி!

ட்விட்டரில் புளூடிக் பெறுவதற்கு 8 டாலர் மாதாந்திர கட்டணம்: எலான் மஸ்க் அதிரடி!

முன்னணி சமூக ஊடகத் தளமான ட்விட்டரின் புதிய உரிமையாளர் எலான் மஸ்க், ‘புளூ டிக்’ ட்விட்டர் கணக்குகளுக்கு 8 டாலர் மாதாந்திரக் கட்டணத்தை அறிவித்துள்ளார்.

நேற்று இரவு ட்விட்டரின் உரிமையாளர் எலான் மஸ்க் வெளியிட்ட தொடர்ச்சியான ட்வீட்களில், சரிபார்க்கப்பட்ட ‘புளூ டிக்’ கணக்குகள், பதில்கள், குறிப்புகள் மற்றும் தேடலில் முன்னுரிமை பெறும் என்றும், நீண்ட வீடியோ மற்றும் ஆடியோவை இடுகையிடும் திறனைப் பெறும் என்றும், விளம்பரங்களின் எண்ணிக்கையும் கட்டுப்படுத்தப்படும் என்று மஸ்க் கூறினார். நாட்டின் வாங்கும் திறனுக்கு ஏற்ப இந்த கட்டணம் நிர்ணயிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும், "எங்களுடன் பணிபுரிய விரும்பும் வெளியீட்டாளர்களுக்கு" பணம் செலுத்துவதைத் தவிர்க்கும் திறனையும் பயனர்கள் பெற்றிருப்பார்கள் என தெரிவித்துள்ளார். தற்போது, ​​ட்விட்டரில் ‘புளூ டிக்’ பயனர்கள் கட்டணம் எதுவும் செலுத்துவதில்லை.

முன்னதாக, ட்விட்டர் புளூ டிக் வசதிக்கு 20 டாலர் கட்டணம் விதிக்கப்படவுள்ளதாக வெளியானது. இணையத்தில் பரவும் வதந்திகள் குறித்து அதிருப்தி தெரிவித்த எழுத்தாளர் ஸ்டீபன் கிங்கின் ட்வீட்டிற்கு பதிலளித்த எலான் மஸ்க், "நிறுவனம் அதன் கட்டணத்தை செலுத்த வேண்டும். விளம்பரதாரர்களை மட்டுமே நம்பிக்கொண்டிருக்க முடியாது" என்று கூறியிருந்தார்.

சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரில் ஏற்கனவே ‘ட்விட்டர் ப்ளூ’ என்ற சந்தா சேவை உள்ளது. இது கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. இந்தச் சேவைக்கு தற்போது மாதத்திற்கு 4.99 டாலர் வசூலிக்கப்படுகிறது.

கடுமையான சட்டப் போருக்குப் பிறகு கடந்த வெள்ளிக்கிழமை எலான் மஸ்க் ட்விட்டரை கைப்பற்றினார். அவர் பொறுப்பேற்ற உடனேயே, அவர் ட்விட்டர் தலைமை நிர்வாகி பராக் அகர்வால், தலைமை நிதி அதிகாரி நெட் செகல் மற்றும் நிறுவனத்தின் சட்ட விவகாரங்கள் மற்றும் கொள்கைத் தலைவர் விஜயா காடே ஆகியோரை அதிரடியாக பணியிலிருந்து நீக்கினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in