பள்ளிகளை மூடவைக்க முனையாதீர்கள்!

பள்ளிக் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த அக்கறைப் பதிவு
பள்ளிகளை மூடவைக்க முனையாதீர்கள்!

செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அதைப் பற்றிய செய்திகளைவிட ‘அந்தப் பள்ளியில் ஆசிரியருக்குக் கரோனா’, ‘இந்தப் பள்ளியில் மாணவர்களுக்குக் கரோனா’ என்பதான செய்திகளே முக்கியத்துவம் பெறுகின்றன. இன்றுகூட(செப்டம்பர் 11), புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 11 மாணவர்களுக்கு கரோனா என்ற செய்தி ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. இதனால் பள்ளிகள் தொடர்ந்து நடக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ’பள்ளி திறந்தாச்சு, கட்ட வேண்டிய பணமெல்லாம் கட்டியாச்சு, அப்புறம் என்ன... பள்ளிகளை மூடிவிட வேண்டியதுதானே!’ என்ற மீம்ஸ்களுக்கும் குறைவில்லை.

இந்த நிலையில் இதுகுறித்து சமூக வலைதளங்களில் வலம்வரும் ஒரு பதிவு, பள்ளி மாணவர்களின் நலன் குறித்து அக்கறையுடன் பேசுகிறது. ‘பள்ளி மாணவர்களின் படிப்பில் விளையாடும் சமூக ஊடகங்கள்’, ‘கல்வியில் பேரழிவைச் சந்திக்க இருக்கும் குழந்தைகள்’ எனும் தலைப்புகளுடன் எழுதப்பட்டிருக்கும் அந்தப் பதிவை, பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிர்ந்து வருகிறார்கள். வாட்ஸ் -அப், டெலகிராம், ஃபேஸ்புக் என எதைத் திறந்தாலும் குறைந்தது 10 பேராவது அதைப் பகிர்ந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.

அந்தப் பதிவு இங்கே:

பள்ளிகள் திறந்து ஒரு வாரம்கூட ஆகவில்லை. ஆனால் பள்ளியை மூடவைப்பதற்கு மொத்த ஊடகமும் கங்கணம் கட்டி வேலை செய்கிறது. மற்ற துறைகள் எல்லாம் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஜூலை மாதத்தில் இருந்து இயங்கிக்கொண்டிருக்கின்றன. அப்போதெல்லாம் எந்தத் துறையிலும் மாவட்ட வாரியாக கரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை என்று எந்த ஒரு ஊடகமும் புள்ளிவிவரம் சொல்லவில்லை.

தொழிற்பயிற்சி கூடங்கள் அனைத்தும் திறந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. அங்கும் தொற்றுக்குள்ளானவர்கள் என்று எந்த ஒரு ஊடகமும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கவில்லை. ஆனால் பள்ளி ஆரம்பித்து 2-வது நாளே ஆசிரியருக்குக் கரோனா, மாணவருக்க்கு கரோனா என்று செய்திகள் வெளியாகின்றன. இது எப்படி சாத்தியம் என்றே தெரியவில்லை.

கடந்த 45 நாட்களாகப் பேருந்துகளும் ரயில்களும் இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. பேருந்து வாரியாக ரயில் நிலையம் வாரியாகக் கரோனா புள்ளிவிவரங்களை எந்த ஊடகமும், சமூக ஊடகமும் தெரிவிக்கவில்லை. அனைத்துத் தொழில் நிறுவனங்களும் இயங்கிக்கொண்டிருக்கின்றன. அதிலும் மாவட்ட வாரியாக கரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை என்று எந்த ஒரு ஊடகமும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கவில்லை.

திருவிழாக்கள், கோயில் உற்சவங்கள், திருமணங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகளில் ஏராளமானவர்கள் பங்கேற்கிறார்கள். அதில் கரோனாவால் மாவட்ட வாரியாகப் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய எந்தப் புள்ளிவிவரங்களையும் எந்த சமூக ஊடகங்களும் தெரிவிக்கவில்லை. ஆனால் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்குப் பாதிப்பு என்று மாவட்ட வாரியாக மட்டுமில்லை. பள்ளி வாரியாகக்கூட தெரிவிக்கிறார்கள்.

கேட்டால் குழந்தைகளுக்குக் கரோனா பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற எண்ணத்தில்தான் கூறுகிறோம் என்பார்கள். கரோனா பாதிப்பைவிட, பள்ளிக்கூடம் செல்லாமல் கல்வியை இழப்பதால் இன்றைய குழந்தைகள் பேரழிவைச் சந்திக்க காத்திருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. அதனால் தங்கள் குழந்தைகளின் படிப்பில் அக்கறை உள்ள அனைத்து பெற்றோர்களும் ஒன்றாம் வகுப்பு முதல் அனைத்து குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பிக்கொண்டுதான் உள்ளனர்.

கடந்த 18 மாதங்களாக மிகப்பெரிய அளவில் கல்வியை இழந்து, வேறு வேறு வழிகளில் சென்றுகொண்டிருக்கிறார்கள் இன்றைய மாணவர்கள். அதைப் பற்றிய புள்ளிவிவரங்களைத் தெரிவிக்கலாமே இந்த ஊடகங்கள் அனைத்தும்!? சமூக ஊடகங்கள் என்ற பெயரில் இயங்கும் ஒரு யூடியூப் சேனல் ஒன்றை நான் பார்த்தேன். அந்த வீடியோவில் உச்ச நீதிமன்றம் பள்ளி, கல்லூரிகளை மூடச்சொல்லி மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்திருக்கிறது என்று ஒரு பொய்யான செய்தி சொல்லப்படுகிறது. அதை நடத்துபவர், பிரீபயர் விளையாட்டில் பள்ளிக் குழந்தைகளை அடிமையாக்கிக்கொண்டிருக்கும் ஒரு சமூக விரோதி.

கரோனாவில் இருந்துகூட 7 நாட்களில் குழந்தைகள் மீண்டு வர முடியும். ஆனால் உங்கள் குழந்தைகள் நேரடி வகுப்பின் மூலம் இழந்த கல்வியை மீட்டெடுப்பது என்பது வருடக்கணக்கில்கூட ஆகலாம். குழந்தைகளின் கல்வி அறிவை அழித்துக்கொண்டிருக்கும் கூட்டத்திடமிருந்து உங்கள் குழந்தைகளைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள் பெற்றோர்களே” என்று நீள்கிறது அந்தப் பதிவு.

சிந்திக்க வேண்டிய விஷயம்தான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in