பச்சைத்துரோகம் செய்த பாக்யராஜ்: கெளதமன் விளாசல்!

பச்சைத்துரோகம் செய்த பாக்யராஜ்: கெளதமன் விளாசல்!
கே.பாக்யராஜ்

பிரதமர் மோடியை பாராட்டும் நோக்கத்தில் கமலாலயத்தில் நடைபெற்ற புத்தக வெளியிட்டுவிழாவில் நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் முன்வைத்த கருத்துகள் கலவையான விமர்சனத்தைப் பெற்றுள்ளது. இந்நிலையில், திரைப்பட இயக்குநரும் தமிழ்ப்பேரரசு கட்சியின் பொதுச் செயலாளருமான வ.கெளதமன் பாக்யராஜின் பேச்சுக்கு தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

சென்னை பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற ’பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள்- புதிய இந்தியா 2022’ என்னும் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய பாக்யராஜ், “பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என நினைத்துக்கொள்ளுங்கள்” என பேசினார். இந்த புத்தகத்தை அண்ணாமலை வெளியிட, பாக்யராஜே பெற்றுக்கொண்டு சிறப்புரை ஆற்றினார். பாக்யராஜின் இந்தக் கருத்தை வரவேற்று பாஜக வலுவாக இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் பாஜகவினர் அவரைக் கொண்டாடித் தீர்த்துவருகின்றனர்.

இந்நிலையில், இயக்குநர் வ.கெளதமன் தன் முகநூல் பக்கத்தில், `திரு பாக்யராஜ் இப்படி பேசியிருப்பது உண்மை என்றால் தனக்கு வாழ்வளித்த தமிழ்நாட்டிற்கு பச்சை துரோகம் செய்ததாகத்தான் அர்த்தம். தமிழர்களை கொச்சைப்படுத்தும் இத்தகைய வாசகத்தை உடனடியாக பாக்யராஜ் திரும்பப் பெற வேண்டும்' என காட்டமாக கூறியுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் தரப்பில், ‘கருத்துரிமை என்பது ஒருதரப்பினருக்கு மட்டும்தானா?’ என எதிர்கேள்வி எழுப்பிவருகின்றனர்.

Related Stories

No stories found.