‘டென்த்ல என்ன மார்க்?’

‘டாக்டர்’ படம் முன்வைக்கும் அபத்தக் கேள்வி
‘டென்த்ல என்ன மார்க்?’

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருக்கும் 'டாக்டர்' படத்தில், பந்தயத்தில் தோற்றுப்போன ஒருவனுக்குக் கனகாம்பரம் சூட்டிப் பெண்ணாக்குவதுபோல் ஒரு காட்சி வரும். அதற்குப் பலரும் எதிர்வினை புரிந்திருந்தனர். அதே படத்தில் வரும் காட்சியும் வசனமும் பலரும் கவனிக்காத ஒரு அபத்தம். படத்தின் நாயகன், நாயகியை ஒரு காட்சியில் மட்டம் தட்டும் தோரணையில் பேசும்போது, "டென்த்ல என்ன மார்க்?" என்பான். நாயகியும் சட்டென முகம் சுருங்கி சுருண்டுகொள்வாள்.

15 வயது கடந்தவனிடம் இறந்தாலும் எழுப்பிக் கேட்கும் நிலை. "டென்த்ல என்ன மார்க்?" என்ற இந்தக் கேள்வி, காலத்தில் எத்தனை முறை உருண்ட பின்னும் இளைக்காதுபோல.

ஒருவன் பள்ளி வயதில் முதலில் சந்திக்கும் பொதுத்தேர்வு 10-ம் வகுப்பு. அதுதான், அவனது எதிர்காலத்துக்குள் நுழைவதற்கான நுழைவுச் சீட்டு என்று சமூகம் மிரட்டிவைத்துள்ளது. 15 ஆண்டுகளாக அவன் கற்ற கல்விக்கான, ஒட்டுமொத்த முதற்கட்ட மதிப்பீடு அதுவே என்று அறிவிக்கிறது. அவனது முதுகிலும் நெற்றியிலும் காலம் ஒரு அரூப முத்திரையை வழங்குகிறது.

இதை எதிர்கொள்ள அச்சப்பட்டு, எதிர்கொண்டு துயரப்பட்டு எத்தனை உயிர்கள் முடித்துக்கொள்ளப்பட்டன? இன்னும் அதன் நாக்கு ஓய்வுக்குத் திரும்பவில்லை. முதன்முதலாக அதன் பிடறியைப் பிடித்து உட்கார வைத்தது, கோவிட் பெருந்தொற்றுதான். அப்போதும்கூட10-ம் வகுப்பு தேர்வெழுதாமல், 11-ம் வகுப்புக்குக் கரைசேர்ந்த மாணவர்களைப் பலவாறு விமர்சித்தனர். தனியார் பள்ளிகள், தங்கள் கூண்டுகளுக்கு ஏற்ற கிளிகளைப் பிடிக்க முடியாமல் தடுமாறின. கோவிட் காலத்தில் 10-ம் வகுப்பு மாநிலத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டாலும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் கடந்தகால 10-ம் வகுப்பு மதிப்பெண்களே மதிப்பை நிர்ணயித்தன.

ஒருவன் 10-ம் வகுப்புக்குள் வந்தவுடன் அந்தக் குடும்பமே பதற்றத்துக்குள்ளாகிறது. முன்பெல்லாம் கேபிளைத் துண்டித்தார்கள். இப்போது டிஷ் ரீசார்ஜை நிறுத்திக்கொள்கிறார்கள். காலத்தின் மாற்றம் அவ்வளவே. பதற்றம் குறையவில்லை.

பள்ளித் தேர்வுகளிலும் அதன் மதிப்பீடுகளிலும் எத்தனையோ ஓட்டைகள் உள்ள நிலையில், அதையே ஒரு சமூகம் வேதவாக்காக எடுத்துக்கொண்டு, அறிவை அதில் எடைபோட்டு மகிழ்வதை எப்படிப் புரிந்துகொள்வது?

ஏன், டென்த் மார்க் காலமெல்லாம் நம் தோளைத் தொற்றிக்கொண்ட விக்கிரமாதித்தியன் வேதாளம் கதையாகிறது!?

எனக்குத் தெரிந்து 10-ம் வகுப்பில் மதிப்பெண் குவித்த பலரும் பள்ளி ஆசியர்களாகவும் க்ளார்க்குகளாகவும் இருக்கின்றனர். சுமாரான மதிப்பெண்கள் பெற்ற பலரும் வெவ்வேறு துறைகளில் கொடிகட்டிப் பறக்கின்றனர். இரண்டிலும் விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால், 10-ம் வகுப்பு மார்க் என்பது வாழ்வின் முத்திரை அல்ல என்பதே உண்மை.

பள்ளித் தேர்வுகளிலும் அதன் மதிப்பீடுகளிலும் எத்தனையோ ஓட்டைகள் உள்ள நிலையில், அதையே ஒரு சமூகம் வேதவாக்காக எடுத்துக்கொண்டு, அறிவை அதில் எடைபோட்டு மகிழ்வதை எப்படிப் புரிந்துகொள்வது?

இன்னுமொரு தரப்பினரோ அதையே பெருமிதமாகக் கருதுகின்றனர். ‘ஜென்டில்மேன்’ படத்தில் கவுண்டமணியைப் பார்த்து செந்தில் சொல்வார்: “நான் எட்டாங்கிளாஸ் பாஸ்ணே... நீங்க எஸ்.எஸ்.எல்.சி ஃபெயில்ணே" என்று. அதேபோல், “நானெல்லாம் டென்த்ல அப்பவே நானூறுக்கு மேல" என்று பழைய வயலினைக் கம்பி அறுக இழுத்துக்கொண்டு இருக்கிறார்கள் பலரும்.

10-ம் வகுப்புத் தேர்வு என்பது அந்த ஆண்டில், சூழலில், மாணவர்கள் கற்றுக்கொண்டதைச் சோதித்துப் பார்க்கும் ஒரு தேர்வே. அந்த மதிப்பெண் சான்றிதழை 11-ம் வகுப்புப் படியேறி கால்வைத்ததும் கிழித்தெறியக் கூடிய காலமொன்று வராதா? "டென்த்ல என்ன மார்க்?" என்று கேள்வி கேட்பவர்களின் நாக்கும் துண்டாகப் போகாதா?

‘டாக்டர்’ படத்தில் வரும் நாயகன் ராணுவத்தில் பணிபுரியும் ஒருவர். முதல் காட்சியில் அவரிடம் சிகிச்சைக்காகக் காயம்பட்ட இருவர் அனுமதிக்கப்படுவர். ஒருவர் ராணுவ அதிகாரி, இன்னொருவர் தீவிரவாதி. நாயகன், ராணுவ அதிகாரியை அப்படியே விட்டுவிட்டு தீவிரவாதிக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்குவார். அதைப் பார்த்துக் கோபப்படும் மற்றொரு அதிகாரியிடம், மிகுந்த பக்குவத்தோடு நாயகன் பதில் அளிப்பார். "அடிபட்ட ராணுவ அதிகாரி, எவ்வளவு சிகிச்சை அளித்தாலும் உயிர் பிழைக்க வாய்ப்பு மிகக் குறைவாக இருக்கிறார். ஆனால், தீவிரவாதி உடனடி சிகிச்சை பெற்றால் நிச்சயமாக உயிர் பிழைப்பார். எதிர்காலத்தில் உங்களது விசாரணைக்கும் அவர் பயன்படுவார்.”

இவ்வளவு அறிவுபூர்வமாக, நிதானமாக, பக்குவமாக இருக்கும் நாயகன்தான் நாயகியை மட்டம்தட்டி, “டென்த்ல என்ன மார்க்?" என்கிறார். சிவகார்த்திகேயனின் முந்தைய படமான ‘ஹீரோ’, நமது கல்வித்திட்டத்தின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா நாயகர்களின் பாத்திரப் படைப்பு, பொதுவாக முரண்கள் நிறைந்தது என்ற தேய்ந்துபோன குற்றச்சாட்டுக்கு ‘டாக்டர்’ படத்தின் இந்த ஒற்றை வரி வசனம் கூடுதல் சிகிச்சை அளித்து உயிர்ப்பித்திருக்கிறது.

கட்டுரையாளர்: கவிஞர், எழுத்தாளர்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in