சூப்பர் அப்பாவும் டிஆர்பி சர்ச்சைகளும்

மேலோட்டமான புரிதல் கொண்ட விவாதங்களின் விபரீதங்கள்
சூப்பர் அப்பாவும் டிஆர்பி சர்ச்சைகளும்
Twitter

அதிகம் படிக்காத, வேலைக்குச் செல்லாத கணவனைப் பொதுவெளியில் இகழ்ந்ததாக, அவரது மனைவியை இணையவாசிகள் தாளித்து எடுத்ததுதான் இவ்வாரத்தின் சமூக ஊடக டிரெண்டிங்கில் முன்னிலை வகித்தது. இதன் பின்னணியில் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் எளிய மக்களைக் குறிவைக்கும் டிஆர்பி பொறியும் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

விஜய் டிவியின் வெற்றிகரமான ஷோக்களில் ஒன்று ‘நீயா நானா’. இதனையொற்றி பல்வேறு விவாத நிகழ்ச்சிகள் இதர தொலைக்காட்சிகளில் வெளியானபோதும் டிஆர்பியில் ‘நீயா நானா’வை அடித்துக்கொள்ள ஆளில்லை. நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் கோபிநாத்தின் திறமைக்கு அப்பால் திரைக்குப் பின்னே உழைக்கும் மற்ற கலைஞர்களின் உழைப்பும், நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் முன்னரே அது குறித்த எதிர்பார்ப்புகளை விதைக்கும் விளம்பர முனைப்புக்கும் இந்த வெற்றியில் பங்குண்டு. அந்த வகையில் இவ்வாரம் வெளியான ‘நீயா நானா’ நிகழ்ச்சியின் கூறுகளை வெட்டியும் ஒட்டியும் எழுந்த விவாதங்களால் சமூக ஊடக உலகம் ரெண்டுபட்டது.

’அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் மற்றும் அவர்களின் கணவர்களை’ எதிரெதிரே அமரவைத்து வழக்கம்போல பற்ற வைத்தார் கோபிநாத். தலைமுறை மாற்றங்களின் அங்கமாக பெண்கள் அதிகளவில் பணிக்குச் செல்வதை முன்னிறுத்தி மனைவி - கணவன் இடையே எழும் தடுமாற்றங்களைக் கூறாய்வதும் நிகழ்ச்சியின் பிரதான நோக்கமாக இருந்தது. தங்களைவிட அதிகம் சம்பாதிக்கும் மனைவியின் ஊதியத்தை ஆதாயமாக ஆராதிக்கும் கணவர்கள், மறுபுறம் ஈகோ முனைப்பிலும் கிடந்து அல்லாடுவதை அவர்களின் அங்கலாய்ப்புகள் வெட்டவெளிச்சமாக்கின.

பணி நிமித்தம் தினசரி 200 கிமீ பயணிக்கும் ஆசிரிய மனைவியால் வீட்டில் பாத்திரம் கழுவ நேரிடுவதாக ஒரு கணவர் வெகுவாய் அலுத்துக்கொண்டார். ரம்மி விளையாட செல்போன் தராத மனைவிக்கு எதிராக இன்னொரு கணவர் புகார் வாசித்தார். மனைவியின் வாயடைக்கும் அஸ்திரமாக ’வேலைக்குப் போகும் திமிர்’ என்ற வாசகத்தை ஏவும் வழக்கத்தை ஒரு கணவர் பகிரங்கமாக ஒத்துக்கொண்டார். இந்த வரிசையில் சீனி ராஜா - பாரதி என்ற தம்பதி தங்களது வெள்ளந்தி பேச்சால் நிகழ்ச்சியின் போக்கையே திருப்பிப் போட்டார்கள்.

சீனி ராஜா
சீனி ராஜா

சீனி ராஜா ஒன்பதாம் வகுப்போடு படிப்புக்கு முழுக்குபோட்டவர். திருமணத்துக்குப் பின்னர் அவர் தொடங்கிய தொழில் முயற்சிகள் அனைத்துமே தோல்வியில் முடிய, பணிக்குச் செல்லும் மனைவியை முழுவதுமாகச் சார்ந்திருக்கிறார். ஒன்பது வயதாகும் மகள் குணாஷினியின் மருத்துவக் கனவை நிறைவேற்றுவதை வாழ்நாள் லட்சியமாகவும் கொண்டிருக்கிறார். இந்த அப்பாவி அப்பா மீது பார்வையாளர்களின் அனுதாபம் அதிகரிக்கும் வகையில் நிகழ்ச்சியின் கோணம் குவிந்ததை அறிந்திராத அவரது மனைவி பாரதி, வேடிக்கையாக சிலவற்றைப் பேசியது அதன் பின்னரான சர்ச்சைகளுக்கு தூபமானது.

கணவர் படிக்காதவர், உலக நடப்புக்கு ஒத்துவராதவர் என்றெல்லாம் அந்த வெகுளி மனைவி கிண்டல் செய்தது கோபிநாத்தையும் சீண்டியது. நிகழ்ச்சியின் நிறைவாகப் பரிசு வழங்கப்படும் நடைமுறைக்கு மாறாக, நிகழ்ச்சிக்கு இடையிலேயே ‘சூப்பர் அப்பாவுக்கு மகள் கையால் பரிசு’ என்று சீனி ராஜாவை கெளரவித்து திருப்தியானார். இதன் மூலம் மனைவியால் ஏளனம் செய்யப்பட்ட கணவனுக்கு நிகழ்ச்சியில் நீதி கிடைத்ததாக பார்வையாளர்களின் பொதுப்புத்தி சமாதானமாகவும் வழி செய்தார்கள்.

இதையொட்டிய முன்னோட்ட விளம்பரங்கள் வெளியானதுமே, சமூக ஊடக நீதிமான்கள் விழித்துக்கொண்டனர். தங்களது நெற்றிக்கண் திறந்தவர்கள், ’அப்பாவி கணவரை இடித்துரைத்த ஆணவ மனைவியை’ தங்களது மீம்ஸ் மற்றும் ஏளன வாதங்களால் பஸ்பமாக்கினர். அந்த மனைவிக்கு எதிராக ’படித்த திமிர், பணிக்குச் செல்வதும் சம்பாதிப்பதுமாக சேர்த்த ஆணவம்’ என்றெல்லாம் அவரவர் கசடுகளைப் பொதுவெளியில் கக்கினார்கள்.

’வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு வழங்கப்படும் முன்னுரிமை சமூகச் சீரழிவுக்கு வித்திடுவதாக’ ஆண்களில் ஒருசிலர் உள்நோக்குடன் கவலை பாவித்தனர். ’பொதுவெளியில் கணவரை இளக்காரமாகப் பேசுவது குடும்பப் பெண்ணுக்கு ஆகாது’ என்று பெண்களும் களத்தில் குதித்தனர். இதற்கென்றே இருக்கும் இணைய நாட்டாமைகள் சிலர், ’இம்மாதிரி பெண்களை கணவர்கள் விவாகரத்து செய்ய வேண்டும்’ என்று பல குடும்பங்களிலும் கலவர குண்டுகளை வீசினர்.

பாரதி
பாரதி

ஆனால் 24 மணி நேரத்தில் இந்த சமூக ஊடக விவாதங்களின் காலநிலை அடியோடு மாறியது. ‘நீயா நானா’ நிகழ்ச்சியின் மூலம் பேசுபொருளான தம்பதியை யூட்யூப் சேனல்கள் போட்டியிட்டு பேட்டி கண்டதில் அந்தக் குடும்பத்தின் உண்மை நிலைமையும், தம்பதியர் இடையிலான பாசப் பிணைப்பும் வெளியுலகம் அறிய நேரிட்டது. சீனி ராஜா படிக்காதது மட்டுமன்றி வணிக உலகின் நெளிவு சுளிவுகளை உள்வாங்காத போக்கால், தொடங்கிய தொழில் முயற்சிகள் அனைத்திலும் நொடித்திருக்கிறார்.

இந்த வகையில் மனைவியின் நகைகளைப் பாதி அழிக்கவும் மீதி அடகிலும் சேர்த்திருக்கிறார். மேலும் உடல்நலம் குன்றி அவரது சிறுநீரகங்கள் இரண்டுமே செயலிழந்துபோக, வாரம் இருமுறை டயாலிசிஸ் சிகிச்சை மூலம் உயிர் பிழைத்து வருகிறார். இத்தனையும் மனைவியின் அன்பான அரவணைப்பு மற்றும் வருமானத்தால் மட்டுமே சாத்தியமாகி வருகிறது.

சுய வருமானம் இழந்தது, குடும்பத்துக்கு பாரமானது என தாழ்வுணர்ச்சியிலும், தோல்வி மனப்பான்மையாலும் துவண்டிருக்கும் கணவரை தேற்ற, அவரை எப்போதும் போலவே சராசரியாக நடத்துவதன் மூலம் சமாளித்து வந்திருக்கிறார் மனைவி பாரதி. பரிதாப உணர்ச்சியும், கழிவிரக்கவும் மேலும் கணவனைக் காயப்படுத்தும் என்பதால், பரஸ்பரம் குறையாத கேலியும் கிண்டலுமாக அவர்களின் இல்லறம் தடம்புரளாது சென்றிருக்கிறது. அப்படி வீட்டில் உரையாடும் அதே மனநிலையில் ’நீயா நானா’ அரங்கிலும் அந்த அப்பாவி மனைவி எதார்த்தமாக பேசியதுதான் வினையாயிற்று. யூட்யூப் சேனல்களில் அடுத்தடுத்து வெளியான தம்பதியரின் நெகிழ்ச்சியான பேட்டிகள் இந்த உண்மையை வெளியுலகுக்குத் தெரிவித்தன.

கோபிநாத்
கோபிநாத்

பார்வையாளர்களின் சுவாரசியத்துக்காக வெட்டி ஒட்டி வெளியாகும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் சிறு துணுக்கை அடிப்படையாக வைத்து, அவரசப்பட்டு முடிவெடுத்த நெட்டிசன்கள் அதே வேகத்தில் பின்வாங்கவும் நேரிட்டிருக்கிறது. பாரதியை கரித்துக்கொட்டி வந்த நெட்டிசன்கள் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். நிதர்சன உலகில் நாம் நெருங்கிப் பழகும் மனிதர்களிடத்தும், ஒரு சில தருணங்களின் அனுபவ அடிப்படையில் அவர் குறித்த திடமான முடிவுக்கு வர இயலாது என்பதே எதார்த்தம். அப்படியிருக்கையில் டிவியில் வெளியாகும் சிறு உரையாடல் துணுக்கை முன்னிறுத்தி ஒரு பெண்ணுக்கு எதிராகத் தீர்ப்பெழுதியவர்கள் அதற்காக பின்னர் நாண வேண்டியதானது. மேலும் பலர் தங்களது தப்பித்தல் உபாயமாக, டிஆர்பி ரேட்டிங்-காக சாமானியர்களின் இயல்பு வாழ்க்கையைப் பணயம் வைப்பதாகத் தொலைக்காட்சிகள் மீது பாய ஆரம்பித்தனர்.

டிஆர்பி என்னும் மாயாஜாலத்துக்காக வெள்ளந்தி மக்களின் எளிய வாழ்க்கை பொதுவெளியில் சீரழிவது குறித்தும் சமூக ஊடக விவாதம் அதன் பின்னர் மடை மாறியுள்ளது. வெகுளித்தனம் நிறைந்த, சுலபத்தில் உடையக்கூடிய, கணத்தில் கண்ணீர் உகுக்கும் எளிய மனிதர்களைக் குறிவைத்து இம்மாதிரி நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் மீண்டும் எழுந்துள்ளன. ஆடல் பாடல் போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்கும் குழந்தைகளை தோல்விமுகத்தில் நிறுத்தி அழ வைப்பது, பேச்சரங்கம் என்ற பெயரில் வரம்பற்ற சீண்டலுக்குத் தூண்டிவிடுவது என்ற திரைமறைவு வியூக ஏற்பாடுகளும் கண்டனத்துக்கு ஆளாகின. எளிய மக்களின் அந்தரங்க அவலங்களை ஊராருக்கு பந்தி வைக்கும் ’சொல்வெதெல்லாம் உண்மை’ பாணியிலான நிகழ்ச்சிகள் இவற்றின் உச்சம்!

மாற்று ஊடகங்களின் உபயத்தால் சீனி ராஜா - பாரதி தம்பதியின் இல்லறம் இன்று தப்பிப் பிழைத்திருக்கிறது. நீயா நானாவை மட்டுமே முன்னிறுத்தி கணவர் சீனி ராஜா மீது பரிதாபமும், மனைவி பாரதி மீது சீற்றமும் கொண்டிருந்த இணையவாசிகள் அடுத்த நாளே அந்தத் தம்பதியரின் அந்நியோன்யத்தை வியந்து வருகிறார்கள். சீண்டலாய் எழுந்த விவாதங்கள் தற்போது ’சூப்பர் அப்பா’ சீனி ராஜாவின் மருத்துவம் மற்றும் மகள் குணவாஷினி படிப்புக்கான உதவிகளை ஒருங்கிணைப்பது என்ற ஆரோக்கியமான பாதையில் அடியெடுத்திருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in