இணையவாசிகளான கிராமவாசிகள்; ஊரெல்லாம் யூடியூபர்கள்: சத்தமின்றி சம்பாதிக்கும் யூடியூப் கிராமம்!

இணையவாசிகளான கிராமவாசிகள்; ஊரெல்லாம் யூடியூபர்கள்: சத்தமின்றி சம்பாதிக்கும் யூடியூப் கிராமம்!

சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூருக்கு அருகே உள்ள துல்சி கிராமமே யூடியூப் கிராமமாக மாறியுள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் 3,000 பேரில் பெரும்பாலானோர் யூடியூபில் பங்களித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் 40க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் இயங்குகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள துல்சி கிராமம் இப்போது யுடியூப் வீடியோக்கள் மூலம் அதிக அளவில் பணம் சம்பாதித்து வருகிறது. இந்த கிராமத்திற்கு பாரம்பரிய தொழில்களை விடவும் அதிகளவில் வருமானம் தரும் தொழிலாக யூடியூப் மாறியுள்ளது. இக்கிராமத்தை சேர்ந்த பலர் தங்கள் வேலையை விட்டுவிட்டு இப்போது யூடியூப் சேனல்களின் மூலம் பலமடங்கு அதிகமாக சம்பாதிக்கிறார்கள்.

இவர்களின் வீடியோக்களில் பொழுதுபோக்கு மட்டுமல்லாமல், கல்வி தொடர்பான தலைப்புகளும் அதிகம் இடம்பெறுகின்றன. இதனால் உள்ளூர்வாசிகள் பல புதிய ஐடியாக்களுடன் யுடியூபில் ஆர்வமுடன் பங்கேற்கின்றனர்.

10 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு நண்பர்கள் தொடங்கிய இந்த யூடியூப் பயணத்தில் இப்போது கிராமவாசிகள் பெரும்பாலானோரும் உற்சாகத்துடன் இணைந்துள்ளனர்.

ஞானேந்திர சுக்லா என்ற எஸ்பிஐ வங்கி நெட்வொர்க் இன்ஜினியர் மற்றும் ஆசிரியர் ஜெய் வர்மா இருவரும்தான் இந்த கிராமத்தில் முதன்முதலாக யூடியூப் பயணத்தை தொடங்குவதற்காக தங்கள் வேலையை விட்டார்கள். இது தொடர்பாக பேசிய ஞானேந்திர சுக்லா, "நான் முன்பு எஸ்பிஐயில் நெட்வொர்க் இன்ஜினியராகப் பணிபுரிந்தேன். எனது அலுவலகத்தில் அதிவேக இணையம் இருந்தது, அங்கு யூடியூப் வீடியோக்களை பார்ப்பது வழக்கம். யூடியூபில் அப்போது மிகக் குறைவான சேனல்களே இருந்தன. எனக்கு 9 மணி முதல் 5 மணி வரையிலான வேலையில் திருப்தி இல்லை. அதனால் அந்த வேலையை விட்டுவிட்டு யூடியூப்பில் சேனல் தொடங்கினேன். இதுவரை சுமார் 250 வீடியோக்களை உருவாக்கி 1.15 லட்சம் சந்தாதாரர்களை வைத்துள்ளேன்" என்று கூறினார்

இந்த கிராமத்தை சேர்ந்த மற்றொரு யூடியூபரான ஜெய் வர்மா, “எங்களைப் பார்த்ததும் எங்கள் கிராமவாசிகள் யூடியூப்பிலும், பின்னர் டிக்டாக்கிலும், இப்போது ரீல்களிலும் வீடியோக்களை உருவாக்கத் தொடங்கினர். நான் வேதியியலில் எம்எஸ்சி பட்டம் பெற்றுள்ளேன். பகுதி நேர ஆசிரியராக முன்பு மாதம் ரூ.15,000 சம்பாதித்தேன்.இப்போது, ​​மாதம் ரூ 35,000 சம்பாதிக்கிறேன்” என்றார்

கிராமத்தில் அனைவருமே யூடியூபில் இருப்பதால், இவர்களுக்கு மேடை தயக்கம் என்பதே இல்லாமல் போய்விட்டது. இதனால் இன்று இந்த ஊர் மக்கள் அனைவரும் யூடியூப்பில் வீடியோ தயாரித்து நிறைய சம்பாதிக்கிறார்கள். இந்த கிராமத்தில் சுமார் 3,000 பேர் உள்ளனர். அதில் 40 சதவீதம் பேர் யூடியூப்பில் பங்கேற்கிறார்கள். ஒரு வீட்டில் உள்ள சிலராவது நிச்சயம் யூடியூபில் இருப்பார்கள் என்பதுதான் ஆச்சர்யம்.

யூடியூபில் சேனல் வைத்துள்ள இந்த கிராமத்தை சேர்ந்த பெண் பிங்கி சாஹு, “ யூடியூப் இப்போது கிராமத்தில் உள்ள பெண்களுக்கு அதிகாரமளிக்கும் ஆதாரமாக மாறியுள்ளது. நக்சல்களால் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் பெண்களை மேம்படுத்துவதற்கான ஒரு வழியாக இது உள்ளது. நான் சேனல் ஆரம்பித்து 1.5 வருடங்கள் ஆகிவிட்டது. இங்குள்ள பெண்கள் பொதுவாக வீட்டை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் யூடியூப் சேனல் மூலம் பெண்களும் ஏதாவது செய்ய முடியும் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு வழங்கியுள்ளோம்” என தெரிவித்தார்.

நாட்டில் உள்ள பல கிராமங்களில் ஏதேனும் ஒரு தொழில் விஷேசமாக செய்யப்படுவது வழக்கம். ஆனால் இந்த துல்சி கிராமமே யூடியூப் சேனல்கள் மூலம் பெரிய அளவில் சம்பாதிப்பது என்பது அனைவராலும் ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in