ஜூம் அழைப்பில் 900 பேர் பணி நீக்கம்: வருத்தம் தெரிவித்தார் விஷால் கார்க்

பணியாளர் நீக்கத்தைக் கையாண்ட விதத்துக்காக வருத்தம் தெரிவித்தார்
விஷால் கார்க்
விஷால் கார்க்

ஒரு ஜூம் அழைப்பில் 900 பணியாளர்களை வேலையை விட்டு நீக்கிய ‘பெட்டர்.காம்’ நிறுவனத்தின் சிஇஓ விஷால் கார்க், ஆட்குறைப்பை கையாண்ட விதத்துக்காக வருத்தம் தெரிவித்துள்ளார்.

‘பெட்டர்.காம்’ என்ற ஆன்லைன் சேவை நிறுவனம் நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. வீட்டு வசதி கடன் மற்றும் காப்பீட்டை புரோக்கர் இன்றி நேரடியாக வழங்கும் சேவையை இந்நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இந்திய வம்சாவளியை சேர்ந்த விஷால் கார்க் என்பவர் இதன் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்நிறுவனத்தில் அமெரிக்கா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பல்லாயிரம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த ‘பெட்டர்.காம்’ கடந்த வாரம் இணையத்தில் புயலைக் கிளப்பியது. நிறுவன சிஇஓ மேற்கொண்ட ஒரு அலுவலக நடவடிக்கை, அதுவரை அந்த நிறுவனத்தை கேள்விப்பட்டிராதவர்களைக் கூட விசாரிக்கச் செய்தது. தனது பணியாளர்களில் 900 நபர்களை ஜூம் இணைய வழி வீடியோ சந்திப்பில் அழைத்த விஷால் கார்க், எடுத்த எடுப்பில் அனைவரையும் பணியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார். சுமார் 3 நிமிடங்களுக்குள் முடிந்துபோன அந்த ஜூம் சந்திப்பின் வீடியோ, இணையத்தில் பரபரப்பாக வலம் வந்தது.

பெருந்தொற்று பரவல் காரணமாக பணியிழப்பும், ஊதியக் குறைவும் பணியாளர்களை அதிகம் பாதிக்கக்கூடியதாக இருந்தது. இந்த பாதிப்பிலிருந்து கடந்த சில மாதங்களாகத்தான் உலகம் மீண்டு வருகிறது. இச்சூழலில், ‘பெட்டர்.காம்’ பெரும் எண்ணிக்கையில் நிறுவனத்தின் பணியாளர்களை பணிநீக்கம் செய்ததும், அதை அலட்சியமாகக் கையாண்டதும் விமர்சனங்களை அதிகம் பெற்றது.

ஜூம் சந்திப்பில் விஷால் கார்க்
ஜூம் சந்திப்பில் விஷால் கார்க்

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகைக் கால விடுமுறை மற்றும் செலவினங்களில் பணியாளர்கள் தடுமாறிக்கொண்டிருந்தபோது, ‘பெட்டர்.காம்‘ மேற்கொண்ட நடவடிக்கை முறையற்றது என பல சர்வதேச நிறுவனங்களின் சிஇஓக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் நிறுவனம் நட்டத்தில் இயங்குவதாக விஷால் கார்க் கூறியது பொய் என்றும், அண்மையில் சாஃப்ட் பேங்க் என்ற வங்கி நிறுவனத்தின் பெரும் நிதியுதவியை அவர் மறைத்திருக்கிறார் என்றும் சாடி வருகிறார்கள்.

இதையடுத்து, தனது தற்போதைய ஊழியர்களுக்கு விஷால் கார்க் அனுப்பியுள்ள மெயிலில், 900 பணியாளர்களின் பணிநீக்கத்தை கையாண்ட விதத்துக்காக வருத்தம் தெரிவித்திருக்கிறார். இதற்கு முன்பாகவும் இம்மாதிரியான பணிநீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும் விஷால் கார்க், இம்முறை இணைய வெளியில் எழுந்த அதிருப்தியை சமாளிக்கவே வருத்தம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in