திருமணங்கள் இனி மெட்டாவெர்சில் நிச்சயிக்கப்படும்!

3 டி-ல் தினேஷ் - ஜனகநந்தினி
3 டி-ல் தினேஷ் - ஜனகநந்தினி

நம்முடைய பாரம்பரிய பழக்கவழக்கங்களையெல்லாம் கரோனாவுக்கு முன் (க.மு.), கரோனாவுக்குப் பின் (க.பி.) என்கிற ரீதியில்தான் இனி அணுக வேண்டும்போல. அதிலும் திருமண விழாவின் நடைமுறைகளில், கரோனா காலம் ஏகப்பட்ட மாற்றங்களைச் சத்தமில்லாமல் சாத்தியப்படுத்திவிட்டது.

காலை 6 மணி முகூர்த்தமென்றால் 4 மணிக்கே நாமும் எழுந்து புதுமணத் தம்பதிகளுக்கு இணையாக, பரபரப்பாக அலங்காரம் செய்து தயாராகி கல்யாண மண்டபத்தில் 5 மணிக்கே ஆஜராவதெல்லாம் க.மு. காலம். க.பி.யில் 5:55-க்கு தூக்கம் கலையாமலே வீட்டு மெத்தையில் படுத்தபடி, மடிக்கணினியை ஆன் செய்து ஆன்லைனில் இணைந்தால்போதும்.

மொய்கூட ஆன்லைன் வழியாக அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. நீங்கள் வைக்கும் மொய்க்குத் தகுந்தவாறு கல்யாண விருந்து ஸ்விக்கி, ஸொமோட்டோ வழியாக ‘ஹோம் டெலிவெரி’ செய்யப்பட்டுவிடுகிறது. இதில், 1000 ரூபாய் வைத்தால், செயலி வழியாகவே கும்பிடு போட்டு முடித்துக் கொள்கிறார்கள். 2 ஆயிரம் ரூபாய் வைத்தவர்களுக்கு சுமாரான சைவ விருந்து, 3 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வைத்தால் சூப்பர் அசைவ விருந்து என விருந்திலும் வித்தியாசம் காட்டுகிறார்கள் சிலர்.

மெட்டாவெர்ஸ் அழைப்பிதழ்
மெட்டாவெர்ஸ் அழைப்பிதழ்

மொய் ஒருபுறம் இருக்கட்டும், மெய்நிகராக நம்முடைய திருமண நிகழ்ச்சியை ஆன்லைனில் நேரலை செய்தால் எப்படியிருக்கும் என்று யோசித்தது தினேஷ்-ஜனகநந்தினி ஜோடி. அதிலும் வெறும் ஆன்லைன் நேரலையாக அல்லாமல் அதன் அடுத்தகட்ட தொழில்நுட்பப் பாய்ச்சலான ‘மெட்டாவெர்ஸ்’ எனும் 3டி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, திருமண நிகழ்ச்சியை ஒளிபரப்ப முதன்முறையாக முடிவெடுத்தது இந்த ஜோடி.

ஆசியாவின் இந்த முதல் மெட்டாவெர்ஸ் 3டி திருமண வரவேற்பு நிகழ்ச்சி எங்கு நடைபெற்றது தெரியுமா? தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிவலிங்கபுரம் கிராமத்தில், பிப்ரவரி 6-ம் தேதி நடைபெற்றது. இதன் பின்னணியில் செயல்பட்டது மாப்பிளை தினேஷின் ஹைடெக் தொழில்நுட்ப மூளைதான். இவர் சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் உள்ள துளிர் நிறுவனம் ஒன்றில் ப்ராஜெக்ட் அசோசியேட்டாக பணியாற்றுகிறார். பிளாக்செயின், என்.எஃப்.டீஸ், கிரிப்டோ போன்ற தொழிற்புரட்சி 4.0 இவருக்குக் கைவந்த கலை. இந்த தொழில்நுட்ப கில்லாடிக்கு அவரது லேடியும் கிரீன் சிக்னல் காட்டினார். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள டர்டிவெர்ஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இவர்களுக்கான மெய்நிகர் திருமண மேடையை அமைத்துக் கொடுக்க, ஆசியாவின் முதல் மெட்டாவெர்ஸ் திருமண விழா நடந்து முடிந்திருக்கிறது.

திருமண அழைப்பிதழையும் டிஜிட்டலாகவே வடிவமைத்தார் தினேஷ். ’ஹாரிபாட்டர்’ நாவல் மற்றும் திரைப்படங்களின் ரசிகர் என்பது இவரது திருமண அழைப்பிதழாக வடிவமைக்கப்பட்ட குட்டி கிராஃபிக்ஸ் படத்திலேயே தெரிந்தது. உலகின் எந்த மூலையிலும் இருந்து திருமணத்தை கண்டுகளிக்க பிரத்தியேக லிங்க் பகிரப்பட்டது. இதில் விசேஷம் என்னவென்றால் மெட்டாவெர்ஸ் என்பது முப்பரிமாண தோற்றத்துடன் காட்சிப்படுத்தும் தொழில்நுட்பம். ஆகையால், திருமண வரவேற்பு விழாவை எங்கிருந்தோ கண்டவர்களுக்குக்கூட நேரடியாகக் கல்யாண மண்டபத்தில் முன்வரிசையில் அமர்ந்து விழாவில் கலந்து கொண்ட உணர்வு ஏற்பட்டதாம்.

மெய்நிகராக நடத்தினாலும் மொய் விருந்தின்றி நிறைவாகுமா! கல்யாண கொண்டாட்டத்தில் முப்பரிமாணமாக கலந்து கொண்ட பிறகு அன்பளிப்பும் அதேபோல வழங்க தொழில்நுட்ப ஏற்பாடுகள் இந்த திருமணத்திலும் செய்யப்பட்டது. இணையம் வழியாக கலந்து கொண்ட 200 விருந்தினருக்கு சுடச்சுட விருந்தும் ‘ஹோம் டெலிவரி’ செய்யப்பட்டது. இனி திருமணங்கள் மெட்டாவெர்ஸில்தான் நிச்சயிக்கப்படுமோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in