எக்ஸ் தளத்தில் யூத எதிர்ப்பு பதிவுகளுக்கு ஆதரவளிப்பதாகவும், உடன்படுவதாகவும், எலான் மஸ்குக்கு எதிராக புகார்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் அவரது டெஸ்லா, எக்ஸ்(ட்விட்டர்), ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் நெருக்கடியை சந்திக்கத் தொடங்கியுள்ளன.
ட்விட்டரில் யூத விரோத மற்றும் எதிர்ப்பு பதிவுகளை எலான் மஸ்க் தொடர்ந்து ஆதரித்து வருவதாக அவர் மீது பழைய குற்றச்சாட்டு ஒன்று உண்டு. இஸ்ரேல் - ஹமாஸ் மோதலின் மத்தியில் இந்த குற்றச்சாட்டு எலான் மஸ்க் நிறுவனங்களை பாதிக்கும் அளவுக்கு திரும்பியிருக்கின்றன. ”வெள்ளையர்கள் மீது யூதர்களுக்கு ’இயங்கியல் வெறுப்பு’ உண்டு” என்று வெளியான ட்விட்டர் பதிவை, எலான் மஸ்க் ஆமோதித்தது பெரும் சர்ச்சைக்கு வித்திட்டது.
யூத விரோதத்தின் அடிப்படையிலான அந்த பதிவுக்கு ‘உண்மையை உரக்கச் சொன்னீர்கள்’ என்பதாக எலான் பதிவிட்டதை, அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வரை கண்டித்துள்ளனர். ’மஸ்க்கின் பதில் யூத சமூகங்களுக்கு ஆபத்தை விளைவிக்குபடியான, ஏற்றுக்கொள்ள முடியாத செயல்’ என்று வெள்ளை மாளிகை எதிர்வினையாற்றி உள்ளது.
இதற்கிடையே, மின்சார கார்களை தயாரிக்கும் ‘டெஸ்லா’வின் பங்குதாரர்கள், நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்கிற்கு எதிராக கொந்தளித்து வருகின்றனர். சிலர் அவர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும் என்றும் பேட்டியளித்தனர்.
ஆப்பிள், டிஸ்னி, ஆரக்கிள் உள்ளிட்ட பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள், ட்விட்டருக்கான தங்களது விளம்பரங்களை அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளன. ஆப்பிள் நிறுவனத்துக்கும் ட்விட்டருக்கும் இடையே ஏற்கனவே முட்டிக்கொண்டு இருந்ததில், தற்போதைய விளம்பர நிறுத்த விவகாரம் பெரிதாய் வெடித்துள்ளது.
ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியது முதலே நிர்வாக சீர்திருத்ததின் பெயரில் பல்வேறு தடாலடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். பாதிக்கும் மேலான ஊழியர்களை பணியிலிருந்து நீக்கினார். எலானின் சார்பு நிலைப்பாடுகளால் விளம்பரங்கள் 60 சதவீதத்துக்கும் மேலாக குறைந்தது. தற்போது தனது தலையில் தானே மண்ணள்ளிப் போட்டுக்கொள்ளும் விதமாக புதிய சர்ச்சைக்கு ஆளாகி இருக்கிறார் எலான் மஸ்க்.
இதையும் வாசிக்கலாமே...
HBD Nayanthara | சின்னத்திரை தொகுப்பாளர் டூ லேடி சூப்பர் ஸ்டார்! டயானா... நயன்தாராவாக மாறிய கதை!
சோகம்… பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவனின் கால்கள் அகற்றம்!
அதிர்ச்சி… 28 வயது மருத்துவர் மாரடைப்பால் உயிரிழப்பு!
இன்று தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு முகாம்... கையோட ஆதார் எடுத்துட்டு போங்க!
குட்நியூஸ்... எஸ்பிஐ வங்கியில் 8,283 காலிப்பணியிடங்கள்; உடனே விண்ணப்பியுங்கள்!