
தமிழக முதல்வரின் கான்வாயில் சென்னை மேயர் பிரியா ராஜன் தொற்றிச் சென்றது பொதுவெளியில் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டதன் வரிசையில் பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலையும் தற்போது சேர்ந்திருக்கிறார்.
மேன்டூஸ் புயல் காரணமாக சென்னையின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேற்று(டிச.10) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காசிமேடு பகுதியில் முதல்வரின் கான்வாயில் சென்னை மேயர் பிரியா மற்றும் ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆகியோர் தொற்றிச் சென்றனர். இது தொடர்பான வீடியோ வெளியானதில் சமூக ஊடகங்களில் பலவாறாக விமர்சனங்கள் வெளியாகின.
சென்னை மேயரின் செயலை வரவேற்று பதிவிட்டோர், ’துடிப்பான மேயர் சென்னை மாநகர மக்களுக்கு கிடைத்திருக்கிறார். மழை நிவாரணப் பணிகளில் இரவு பகலாக ஈடுபடும் அவரது உழைப்பும் ஆர்வமும் பாராட்டத்தக்கது. ஆண்களுக்கு நிகராக பெண்களும் களத்தில் இறங்கி சேவையாற்றுவது வரவேற்புக்குரியது’ என்றெல்லாம் சிலாகித்து உள்ளனர்.
மாற்றுக்கருத்து கொண்டோர் இதனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ’கான்வாயில் பிரியா பயத்துடன் செல்கிறார். மதிப்புமிக்க பணியில் உள்ள மேய்ரையும் முதல்வரின் காருக்குள் அனுமதித்திருக்கலாம்’ என்றவர்கள், அதன் உச்சமாக, ‘பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதாலே மேயர் பிரியா இப்படி நடத்தப்பட்டார்’ என்றெல்லாம் கடுமை காட்டினார்கள்.
இதே அலைவரிசையில் பாஜக தலைவர் அண்ணாமலையும் சீற்றம் காட்டியுள்ளார். ’சுயமரியாதை இயக்கம். சமூகநீதி இயக்கம். சாமானியர்களுக்கான கட்சி. இந்த போலி புனைவுகள் அனைத்தும் செத்து, புதைக்கப்பட்டு பலகாலம் ஆகிறது. சென்னை மேயரும், மூத்த ஐஏஎஸ் அதிகாரியும் முதல்வரின் கான்வாயில் தொற்றிச் சென்ற காட்சியும் இதையே வெளிப்படுத்துகிறது’ என தனது ட்விட்டர் பதிவில் அண்ணாமலை காட்டம் காட்டியுள்ளார்.
அண்ணாமலைக்கு விளக்கம் தெரிவிப்போர், ‘இளம்பெண்ணான மேயர் பிரியா தன்னை வீடியோ எடுப்பதை உணர்ந்து வெட்கத்தில் முகத்தை திருப்பியிருக்கிறார். அதனை பயம் என சொல்வது அபத்தம்’ என விளக்குகின்றனர். மேலும் பதில் தாக்குதலாக குஜராத் தேர்தல் பிரச்சார களத்தில், பிரதமர் மோடி ஓடும் காரில் திறந்த கதவோரம் நின்றபடி பயணித்ததையும், முதல்வர் பூபேந்திர படேலை காரில் அனுமதிக்காது நடக்க விட்டதாகவும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.