அஜித் - விஜய் ரசிகர்களின் ஞாயிறு அலப்பறைகள்

'துணிவில்லா வாரிசு' Vs 'வாரிசிடம் குனிவு’
அஜித் - விஜய் ரசிகர்களின் ஞாயிறு அலப்பறைகள்

சமூக ஊடகங்களில் சாதாரண நாளிலேயே அஜித் - விஜய் ரசிகர்களிடையே மோதல் அனல் பறக்கும். இன்று ஞாயிறு விடுமுறை தினம்; சொல்லவா வேண்டும். பொங்கலுக்கு பரஸ்பரம் படங்கள் வெளியாவதை முன்வைத்து இருதரப்பினரும் இன்று ஆன்லைன் அடிதடியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு என இரு நட்சத்திரங்களின் படங்களும் வரும் பொங்கலுக்கு நேருக்கு நேர் மோதுகின்றன. இதனையொட்டி இருதரப்பினரும் இப்போதிருந்தே இணையத்தில் கச்சை கட்டி திரிகின்றனர். ஞாயிறு ஓய்வு நாளென்பதால், இந்த மோதல் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முன்நிற்கும் அளவுக்கு வைரலாகி வருகிறது.

அஜித்தின் துணிவு படத்துக்கான ’சில்லா சில்லா’ பாடல் வெளியானதை முன்வைத்து கச்சேரி களைகட்டியது. யூட்யூபில் இந்த பாடல் 24 மணி நேர பார்வைகளின் கீழ் புதிய சாதனை படைத்திருப்பதாக அஜித் ரசிகர்கள் பெருமிதம் காட்டினர். மேலும் விஜய்யின் வாரிசு படத்தின் ’ரஞ்சிதமே’ பாடலுக்கான லைக்ஸ் எண்ணிக்கையில் பெரும்பாலானவை ராஷ்மிகாவுக்கே சேரும் என்றும், இரண்டாவது பாடலான ’தீ’ பாடலுக்கு ஒப்பீட்டளவில் லைக்ஸ் இல்லாதது இந்த உண்மையை உடைத்துச் சொல்லும் என்றும் வாதிட ஆரம்பித்தனர்.

மேலும் விஜய் ரசிகர்கள் போலி கணக்குகளை ஆரம்பித்து பார்வைகள் மற்றும் லைக்ஸ் எண்ணிக்கையை கூட்டுவதாக அரிய கண்டுபிடிப்பையும் அஜித் ரசிகர்கள் முன்வைத்தனர். தங்கள் தரப்பின் ட்ரெண்டிங்காக ’துணிவில்லா வாரிசு’ என்ற தலைப்பில் வாதங்களை பரப்பி வருகின்றனர். இதனால் பற்றிக்கொண்ட விஜய் ரசிகர்கள் பதிலுக்கு ’வாரிசிடம் குனிவு’ என்ற தலைப்பில் அஜித் ரசிகர்களை அட்டாக் செய்து வருகின்றனர்.

இருதரப்பு மோதலின் பல கட்டங்கள் சுவாரசியமூட்டினாலும், சில ஆர்வக்கோளாறு ரசிகர்கள் தரம் தாழ்ந்த தாக்குதலிலும் ஈடுபட்டு வருகின்றனர். மாலை வரையிலான நிலவரப்படி இந்த மோதலில் அஜித் ரசிகர்களின் ’துணிவில்லா வாரிசு’ இந்திய அளவில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in