இணைய உலகம்: நெப்போட்டிசம் முதல் மொக்கை ஜோக் வரை: அதிதியும் அதீத ஒளிவட்டமும்!

இணைய உலகம்:
நெப்போட்டிசம் முதல் மொக்கை ஜோக் வரை: அதிதியும் அதீத ஒளிவட்டமும்!

அதிதி ஷங்கர் நடித்த விருமன் திரைப்படம் திரையரங்குகளில் ஒரு சுற்று ஓட்டம் முடித்து ஓடிடியில் கரையேற இருக்கிறது. ஆனபோதும் கடந்த சில வாரங்களாக சமூக வலைதளங்களில் கலகலத்த அதிதி ஜோக்ஸ் அலப்பறைகள் ஓய்ந்தபாடில்லை. ’நெப்போட்டிசம்’ குற்றச்சாட்டுகள் முதல் மொக்கை ஜோக் பிரதாபங்கள் வரை பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதியைச் சுற்றும் ஒளிவட்டம் அதீதமாக தொனிக்கவும் செய்கிறது.

ஷங்கர் மகள்

திரைப்பட உருவாக்கத்தில் மட்டுமன்றி அதன் வசூலிலும் பிரம்மாண்டத்தை சாதிப்பவர் இயக்குநர் ஷங்கர். ஜென்டில்மேன் தொடங்கி இந்தியன்-2 வரை அவரது படைப்புகள் அனைத்துமே எதிர்பார்ப்புக்கு உரியவை. ஹாலிவுட்டுக்கு பதில் சொல்ல முயற்சிக்கும் இவரது இயக்குநர் அவதாரத்தின் தொடக்கம் நடிப்பாகவே இருந்தது. துண்டு துக்கடா நகைச்சுவை வேடங்களில் சங்கர் தலைகாட்டிய திரைப்படங்கள் வெகு சொற்பம். திரையில் நடிகராக ஜொலிக்கும் சங்கரின் கனவு பலிக்காததில் திரைக்கு பின்னே சென்றார். கடின உழைப்பும், அர்பணிப்புமாக திடமான இயக்குநராக பின்னர் வெளிப்பட்டார். தந்தையரின் நிறைவேறாத கனவுகளுக்கு வாரிசுகள் உயிர் கொடுப்பதன் வரிசையில், ஷங்கரின் மகள் அதிதி தனது முதல் திரைப்படத்தின் மூலமாகவே பிரபலமானார். பாட்டு, நடனம் என கலையுலகில் கால்வைக்கும் கனவோடு வளர்ந்த அதிதி, பெற்றோரின் ஆசைக்காக மருத்துவ படிப்பு முடித்து, தன்னுடைய ஆசைப்படி சினிமாவில் குதித்திருக்கிறார். ஆனால், பிரபல இயக்குநரின் வாரிசு என்பதற்காக வரவேற்புக்கு இணையாக சர்ச்சைகளையும் அவர் அதிகம் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று.

நெப்போட்டிசம் நெருடல்

இதர துறைகளைப் போலவே சினிமா வர்த்தகத்திலும் வாரிசு பிரவேசங்கள் தவிர்க்க இயலாது அரங்கேறுகின்றன. திரைக்கலைஞர்களின் வசீகர திறமைகள் எட்டி நிற்கும் ரசிகர்களை கட்டிப்போடும்போது, அந்த கலைஞர்களை ஒட்டி வாழும் வாரிசுகளுக்கு கலைமோகம் பிறப்பது இயல்பாக நடந்தேறுகிறது. கலைக்குடும்ப வாரிசு என்ற அடையாளம் விசிட்டிங் கார்டாக உதவினாலும், சொந்தச் சரக்கு மட்டுமே தங்களை தக்கவைத்துக் கொள்ள அவர்களுக்கு உதவும். ஆனபோதும் இந்த வாரிசுகளால் வாய்ப்புகள் பறிக்கப்படுவதாக திரையுலகில் புகார்கள் எதிரொலித்தபடியே உள்ளன.

அதிலும் பாலிவுட்டில் சுஷாந்த் சிங் தற்கொலையை அடுத்து, அங்கே சினிமா வாரிசுகளின் தலையீட்டுக்கு எதிராக குமுறல்கள் வெடித்தன. குறிப்பிட்ட குடும்பத்தினர் மட்டுமே பாலிவுட்டில் ஆதிக்கம் செலுத்துவதாகவும், எந்தப் பின்னணியும் இல்லாது தனித்திறமையோடு முன்னேறுபவர்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும் எழுந்த புகார்கள் இன்று வரை தொடர்கின்றன. ’கபூர்’கள் முதல் ’கான்’கள் வரை அவை ஆதாரத்தோடு அம்பலப்பட்டும் வருகின்றன. அதிதியின் திரைப்பிரவேசத்தின் போதும் இந்த நெப்போட்டிசம் குறித்த புகார்கள் எழுந்தன.

அதிதி புகழ்

விருமன் திரைப்படத்தின் ‘மதுரை வீரன்’ பாடலை முதலில் பாடிய ராஜலட்சுமி புறக்கணிக்கப்பட்டதும், அந்த இடத்தை அதிதியின் குரல் நிரப்பியதும் சர்ச்சையானது. அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே அதிதியை குறிவைத்து ’கோலிவுட்டில் நெப்போட்டிசம்’ குறித்த விவாதங்கள் எழுந்தன. செல்வாக்கான இயக்குநரின் வாரிசு என்பதாலே அதீதமான வரவேற்பு அதிதிக்கு சாத்தியமாவதாகச் சொன்னார்கள். விருமன் ஆடியோ வெளியீட்டு விழாவில் வழக்கமாக விதந்தோதலுக்கு ஆளாகும் திரைப்படம் மற்றும் கதாநாயகன் இடங்களை அதிதிக்கான புகழ் பாடல் தட்டிப் பறித்தது. ’ஷங்கர் சார்’ மகளுக்கான இந்த பீடத்துக்கு அதிதி தகுதியானவரா என்ற கேள்வியும் அங்கே எழுந்தது.

மொக்கை ஜோக்

அந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் அதிதி பாடியது மற்றும் ஆடியதைவிட அவர் உதிர்த்த மொக்கை ஜோக்குகளுக்கும் அதிகப்படி அங்கீகாரம் கிடைத்தன. ’சண்டே அன்னிக்கு சண்டை போடலாம்; மண்டே அன்னிக்கு மண்டையைப் போட முடியுமா?’, ’தீபாவளிக்கு பொங்கலுக்கும் என்ன வித்தியாசம்? தீபாவளிக்கு பொங்கல் சாப்பிடலாம்; பொங்கலுக்கு தீபாவளி சாப்பிட முடியுமா?’ இவையெல்லாம் அதிதியின் தனித்துவ கண்டுபிடிப்புகளாக வலம்வந்தன. தந்தை ஷங்கரின் காலத்திலேயே சரத்திழந்த இந்த மொக்கை ஜோக்குகளை அதிதி செல்லும் இடமெல்லாம் உதிர்க்க ஆரம்பித்தார்.

ஆனால், புத்தாயிரம் மற்றும் அதற்குப் பின்னால் பிறந்தவர்களுக்கு அதிதியின் சேட்டைகளும் அவரது ஜோக்குகள் புதிதாக இருந்ததோ என்னவோ, திடீரென அதிதி சமூக ஊடகங்களில் வைரலானர். #அதிதிஜோக்ஸ் என்ற ஹேஷ்டேக் உருவாகி அதிதி பாணியிலான மொக்கை ஜோக்குகள் வரிசை கட்டத் தொடங்கின. விஜய் டிவி ’பழைய ஜோக் தங்கதுரை’க்கு அக்காவாக மொக்கைகளை உதிர்த்ததில் ’அதிதி ஜோக்ஸ்’ அடையாளமும் பிரபலமானது. வடக்கின் சர்தார்ஜி ஜோக்குகளுக்கு போட்டியாக தெற்கின் ரஜினிகாந்த் ஜோக்குகளை சொல்வார்கள். கடந்த ஒரு மாத காலமாக அதிதி பெயரிலான மொக்கை ஜோக்குகள் அந்த இடத்தை பிடித்திருக்கின்றன.

அதீதத்தின் பின்னே

சினிமாவில் தலைகாட்டும் இளம்நடிகையரை ’கிரஷ்’ஆக வரிந்துகொள்ளும் இளைஞர்கள், வழக்கத்துக்கு மாறாக அதிதியை ’கிறிஞ்ச்’ஆக கேலி செய்தனர். நஸ்ரியாவை நகலெடுக்கிறார், நடிப்பு போதாது என்றெல்லாம் குறை கண்ட ரசிகர்களின் நெகட்டிவ் விமர்சனங்கள் ஒரு கட்டத்தில் பாஸிடிவ் பக்கம் தாவியது. அந்த வயது ரசிகக் கண்மணிகளின் பிரதிநிதியாகவே அதிதியும் வலம்வந்ததில் அவர்களின் கொண்டாட்டங்களுக்கும் ஆளானார். விருமனில் அதிதி போட்ட ஆட்டத்துக்கும், பின்னணி குரலுக்கும் தனி ரசிகர்கள் சேர ஆரம்பித்தனர். பெரிதாய் பேசப்படாத விருமன் கதை மட்டுமன்றி கதாநாயகன் கார்த்தியும் பின்தள்ளப்பட்டு அதிதி அதிகம் சிலாகிக்கப்பட்டதும் நடந்தது.

ஒரே படத்தில் ஒளிவட்டம்

இந்த வகையில் சமூக ஊடகங்களில் உரிமையுடன் ட்ரோல் செய்யப்படும் நடிகையாக அதிதி மாறிப்போனார். ஒரு நட்சத்திரமாக அன்றி, பக்கத்து வீட்டுப் பெண் போன்ற அவரது தோற்றமும், பழகும் விதமும், ஒளிக்காது மனதில் பட்டதை பேசும் பேட்டிகளும் இளசுகளை கொள்ளை கொள்ள ஆரம்பித்தன. தலைக்கனம் இல்லாதவர், வெள்ளந்தி பெண் என்றெல்லாம் அதிதிக்கு புகழ் சேரவும் ஆரம்பித்தன. அவருக்கு எதிராக கூர்திட்டப்பட்ட மீம்ஸ், ட்ரால் வீடியோக்கள், மொக்கை ஜோக்குகள் அனைத்துமே அதிதிக்கு ஆதரவாக மடை மாறின. இவற்றை பார்க்கும்போது அனைத்துமே அதிதிக்கான திட்டமிட்ட விளம்பர உத்திகளோ என்று ஐயப்படும் அளவுக்கு அவை திடமாக வளர்ந்திருக்கின்றன.

விருமனை தொடர்ந்து சிம்பு, சிவகார்த்திகேயன் என இளம் நாயகர்களுக்கு இணையாக அடுத்தடுத்த படங்களில் அதிதியும் ஒப்பந்தமாகி வருகிறார். நெப்போட்டிசமும், மொக்கை ஜோக்குகளும் பின்சென்று, அதிதியின் அழகான அபிநயங்கள் நிறைந்த ’ஷார்ட்ஸ்’ வீடியோக்கள் அதிகம் வலம் வரத் தொடங்கியிருக்கின்றன. ஒரே படத்தில் ’கோலிவுட்டின் ஆலியா பட்’ என்றும் அடுத்த நயன்தாரா என்றும் பெயர் பெற்றிருக்கிறார் அதிதி. நாளை மறுநாள் (செப். 11) விருமன் திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாக இருப்பதை அடுத்து சமூக ஊடகங்களில் சற்றே ஓய்ந்திருந்த அதிதி புயல் மீண்டும் மையங்கொண்டிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in