2021-ல் ட்விட்டரை தெறிக்கவிட்ட விஜய்

இந்திய சினிமாவில் அதிக அளவில் லைக்ஸ், ரீ-ட்வீட் பெற்ற விஜய் பதிவு
நடிகர் விஜய்
நடிகர் விஜய்

நடிகர் விஜய் மேற்கொண்ட ட்விட்டர் பதிவு, 2021-ம் ஆண்டின் இந்திய சினிமாவில் அதிகம் பேசப்பட்ட பதிவாக சாதனை படைத்திருக்கிறது.

இந்த வருடத்தில் அதிகம் சிலாகிக்கப்பட்ட ட்விட்டர் பதிவுகளை ட்விட்டர் இந்தியா பட்டியலிட்டுள்ளது. அதில் நடிகர் விஜய் தனது பீஸ்ட் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் தொடர்பாக மேற்கொண்ட ஒரு பதிவு, அதிகமான லைக்ஸ் மற்றும் ரீ-ட்வீட்டுகள் மூலம் சாதனை படைத்துள்ளது.

ட்விட்டரில் களமாடும் பல்வேறு திரைத் துறையினரின் வரிசையில் நடிகர் விஜய்யும் @actorvijay என்ற பெயரில் அதிகாரபூர்வ கணக்கு வைத்துள்ளார். விஜய்யின் அலுவலகத்தால் பராமரிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள இந்த ட்விட்டர் பக்கத்தை, 33 லட்சத்துக்கு மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர்.

2021-ம் ஆண்டில் ஓரிரு பதிவுகள் மட்டுமே விஜய்யின் ட்விட்டர் கணக்கில் இடம்பெற்றிருக்கின்றன. புத்தாண்டு அன்று பெயரளவில் ஒரு பதிவும், ஜூன் 21, 22 தேதிகளில் ’பீஸ்ட்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்களும் பதிவுகளாக வெளியாகி உள்ளன. இவற்றில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தொடர்பான பதிவுக்கு சுமார் மூன்றரை லட்சம் லைக்ஸ் மற்றும் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட ரீ-ட்விட்டுகள் குவிந்துள்ளன.

இந்தப் பதிவே இந்திய சினிமா அளவில் ட்விட்டரில் முதலிடம் பிடித்திருக்கிறது. கடந்த வருடமும் இதேபோல விஜய் பகிர்ந்த நெய்வேலி ரசிகர்களுடனான செல்ஃபி பதிவு சிலாகிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதேபோல, ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட திரைப்படங்களின் வரிசையிலும், நடிகர் விஜய்யின் மாஸ்டர் மற்றும் பீஸ்ட் திரைப்படங்களே முதலிடம் பிடித்திருக்கின்றன. அடுத்தடுத்த இடங்களில் அஜித்குமாரின் வலிமை, சூர்யாவின் ஜெய் பீம், பவன் கல்யாணின் வக்கீல் சாப்(தெலுங்கு) ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in