‘மம்தா பானர்ஜி மருமகனா?’: சமூக ஊடகங்களில் தெறிக்கும் அபிஷேக்!

அரசியல்வாதி அபிஷேக் - நடிகர் அபிஷேக்
அரசியல்வாதி அபிஷேக் - நடிகர் அபிஷேக்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி அண்மைக்காலமாக செய்திகளில் அதிகம் அடிபட்டு வருகிறார். அபிஷேக்கின் இந்த பிரபல்யத்தால் இன்னொரு அபிஷேக் பானர்ஜி பாலிவுட்டில் வாழ்வு பெற்றிருக்கிறார்.

அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் என்ற பொறுப்பில் இருப்பவர் அபிஷேக் பானர்ஜி. மம்தா பானர்ஜியின் நெருங்கிய உறவினரான இவர் கட்சியில் இளம் ரத்தம் பாய்ச்சவும், தலைமைக்கு வலதுகரமாகவும் செயல்பட்டு வருகிறார். மக்களவை உறுப்பினராக உள்ள அபிஷேக் பானர்ஜி, சமூக ஊடகங்களில் தீவிரமாக களமாடியும் வருகிறார். பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக பதிவிடுவது முதல், கட்சியின் இளம் தொண்டர்களை வசீகரிப்பது வரை இவரது பங்களிப்பு அதிகம்.

அபிஷேக் பானர்ஜி என்ற பெயரில் பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர் ஒருவரும் இருக்கிறார். பல்வேறு இந்தி திரைப்படங்கள் மற்றும் ஓடிடி படைப்புகளில் நடித்து வரும் இந்த அபிஷேக் பானர்ஜி, மக்கள் அபிமானத்தை பெறவும் திரைத்துறையில் உயரிய வாய்ப்புகள் கிடைக்கவும் மெனக்கிட்டு வருகிறார். அதற்காக, இதர திரைக்கலைஞர்கள் பாணியில் அபிஷேக்கும் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடக தளங்களில் தொடர்ந்து பங்களித்து வருகிறார்.

அண்மைக்காலமாக திடீரென பாலிவுட் நடிகர் அபிஷேக் பானர்ஜியை சமூக ஊடகங்களில் பின்தொடர்வோர் அதிகரித்துள்ளனர். அவர்களில் சிலர் அபிஷேக்கை திட்டியும் ‘டேக்’ செய்த பிறகே, அவருக்கு உண்மை தெரிந்தது. மம்தா பானர்ஜி மருமகன் அபிஷேக் என்றே, நடிகர் அபிஷேக் அடையாளம் காணப்பட்ட விவரமும் புரிந்தது. ஆனால் அதற்குள் இன்ஸ்டாவில் 5 லட்சத்தை கடந்தும், ட்விட்டரில் 36 ஆயிரத்தை கடந்தும் நடிகர் அபிஷேக்கை பின்தொடர்வோர் எகிறி விட்டனர்.

பதிவுகளை பார்த்து ’இவர் அவரில்லை..’ என பின்தொடர்வோர் தெளிவுற்ற பின்னரும், அவர்களில் பெரும்பாலானோர் நடிகர் அபிஷேக்கை பின்தொடரவே செய்கின்றனர். வெகுஜன வெளிச்சத்துக்காக ஏங்கும் திரைக்கலைஞர்களின் வரிசையில் நடிகர் அபிஷேக்கும் இப்போது உற்சாகம் அடைந்திருக்கிறார். இவற்றின் மத்தியில் தனக்கான புதிய திரைவாய்ப்புகளும் அதிகரித்திருப்பதாக நடிகர் அபிஷேக் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in