இணையத்தை கலக்கும் 80களின் நட்சத்திரங்கள்

இணையத்தை கலக்கும் 80களின் நட்சத்திரங்கள்

80களின் நட்சத்திரங்கள் தங்கள் மும்பை கூடுகையை ஒட்டி, அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களால் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் வசீகரமூட்டி வருகின்றனர்.

இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று எண்பதுகளின் இந்திய சினிமாவை கோலோச்சிய நட்சத்திரங்கள் ஆண்டுதோறும் ஓரிடத்தில் கூடி கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். பத்தாண்டுக்கும் மேலாகத் தொடரும் இந்த நிகழ்வு, பெருந்தொற்று பொதுமுடக்கம் காரணமாக இடையில் 2 வருடங்கள் விடுபட்டுப்போனது. ஹைதராபாத்தில் டோலிவுட் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி இல்லத்தில் விமரிசையாக நடைபெற்ற இந்த கொண்டாட்டம், 2 வருட இடைவெளிக்கு பின்னர் தற்போது மும்பை ஜாக்கி ஷெராஃப் இல்லத்தில் கூடியது. சனி மாலையில் கூடியவர்கள் பல்வேறு கேளிக்கைகளுடன் விடிய விடிய களித்திருந்தனர். நிகழ்வில் பங்கேற்ற நட்சத்திரங்கள் அந்த கொண்டாட்ட தருணங்களின் புகைப்படங்களால் தங்களது ரசிகர்களையும் மகிழ்வித்து வருகின்றனர்.

சிரஞ்சீவி, வெங்கடேஷ், குஷ்பூ, அர்ஜுன், பாக்யராஜ், சரத்குமார், ரம்யா கிருஷ்ணன், பானுச்சந்தர், சுஹாசினி, ராதா, அம்பிகா, சரிதா, பூர்ணிமா, லிஸி என முப்பதுக்கும் மேலானோர் நிகழ்வில் பங்கேற்றனர். மலரும் நினைவுகள், குடும்ப பகிரல்கள், தற்போதைய திரைவாழ்க்கை என தங்கள் நட்பை புதுப்பித்துக்கொண்டனர். நிகழ்வு முடிந்த பிறகும் அவை தொடர்பான புகைப்படங்களை தங்களது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பலரும் பரிமாறி வருகின்றனர். தங்களது இளமைக்காலத்தை ஆக்கிரமித்திருந்த 80களின் நட்சத்திர கூடுகையை அந்த வயதொத்த ரசிகர்களும் மகிழ்வுடன் நினைவுகூர்ந்து வருகின்றனர். ’80’ஸ் ரீயூனியன்’ என்ற தலைப்பிலான 11வது வருட கூடுகை இதுவாகும். நடப்பாண்டு கோலிவுட்டிலிருந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் ஏனோ பங்கேற்கவில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in