சமூக ஊடகங்களில் பெருக்கெடுக்கும் தேனிசை!

சமூக ஊடகங்களில் பெருக்கெடுக்கும் தேனிசை!

இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா சமூக ஊடகங்களில் அதிகாரபூர்வமாக அடியெடுத்து வைத்திருக்கிறார். இதனையடுத்து தேவாவையும், அவரது இசையில் வெளியான பாடல்களை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் பங்கேற்காத கலைஞர்கள் குறைவு. திரைக்கு முன்னே மற்றும் பின்னே என்று தங்களின் பங்களிப்பு எதுவாக இருந்தபோதும், ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பதை அவர்கள் விரும்பியே வருகின்றனர். கலைஞர்கள் மட்டுமன்றி அவர்களையும் அவர்களின் படைப்புகளையும் விதந்தோதும் ரசிகர்களுக்கு அந்த கலைஞர்களின் இருப்பும் அவர்களுடனான ஊடாட்டமும் அவசியமாகிறது.

சமூக ஊடகங்களில் இதுவரை இடம்பெறாதிருந்த தேனிசைத் தென்றல் தேவாவும் தனது இருப்பை உறுதி செய்துள்ளார். நவ.20, தேனிசைத் தென்றலின் பிறந்தநாள். இதையொட்டி சமூக ஊடகங்களில் தனது அதிகாரபூர்வமான வருகையை அன்றைய தினம் தேவா உறுதி செய்தார். ஒரே நேரத்தில் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என பிரதான சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கினார். வீடியோ துணுக்குகளை வெளியிட்டு ரசிகர்களுடன் உரையாடவும் தொடங்கியிருக்கிறார். மேலும் தனது இன்னிசை நிகழ்ச்சிகள் குறித்தும் அப்டேட் செய்து வருகிறார் தேவா.

பெரும்பாலான இசையமைப்பாளர்கள் தத்தம் ரசிகர்களுடன் சமூக ஊடகங்கள் சதா தொடர்பிலிருக்க, அவற்றின் மத்தியில் இதுவரை ஏக்கத்துடன் காத்திருந்த தேனிசை தென்றலின் ரசிகர்கள் இந்த வாய்ப்பில் அவரை கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள். தேவா மற்றும் அவரது பாடல்கள் தொடர்பான சுவாரசியமான தகவல்கள், இசைப் பாடல்கள் சமூக வலைதளங்களில் வலம் வரத்தொடங்கியுள்ளன. சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கும் பல இசை ரசிகர்களின் பதிவுகளில் தேனிசை பெருக்கெடுத்துள்ளது. 90களின் கோலிவுட் படங்களில் கோலோச்சிய தேவாவின், கானா மற்றும் மெல்லிசைப் பாடல்கள் அந்த பதிவுகளில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in