இவற்றை வைத்து என்ன செய்வது? – தவிப்பில் தமிழ்நாடு போலீஸ்

இவற்றை வைத்து என்ன செய்வது? – தவிப்பில் தமிழ்நாடு போலீஸ்

‘தற்காப்புக்காக துப்பாக்கியைப் பயன்படுத்தலாம் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஊக்கம் அளித்தாலும் தங்கள் துறையில் இருக்கும் பழைய ஆயுதங்கள், சாதனங்கள், வாகனங்கள் ஆகியவற்றை வைத்துக்கொண்டு பெரிதாக என்ன செய்துவிட முடியும்’ என்று வருந்துகிறார்கள் தமிழக காவல் துறையினர்.

இதுகுறித்து காவல் துறையைச் சேர்ந்த பலரும் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல், சமூக ஊடகங்களில் பலவிதமான ஆதங்கங்களை பதிவுசெய்து வருகின்றனர். அவை, அப்பட்டமான பல உண்மைகளை தோலுரித்துக் காட்டுவதாகவும், காவல் துறையின் அவலங்களைச் சுட்டிக்காட்டுவதாகவும் இருக்கின்றன.

அவற்றின் தொகுப்பு இது.

சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் விவகாரத்தையே எடுத்துக்கொள்வோம். அவர் தனது பணியை செவ்வனே செய்யும்போது கொல்லப்பட்டுள்ளார். ஒரு ஆடு தானே திருடுபோகிறது போனால் போகட்டும் என்று அவர் கடந்து சென்றிருந்தால், மறுநாள் புகார் வராமல்கூட போயிருக்கலாம். அவரும் உயிரோடு இருந்திருப்பார்.

மற்றொரு கோணத்தில் பார்த்தோமானால், அதே சம்பவத்தில் அவர் கொஞ்சம் வேகமாகச் செயல்பட்டு அதனால் ஆடு திருடர்களில் ஒருவனுக்கு ஏதேனும் ஆகியிருந்தால், அவன் குறிப்பிட்ட மதத்தையோ சாதியையோ சேர்ந்தவனாக இருந்திருந்தால் என்னவாகி இருக்கும்? இன்றைய நடுநிலை மீடியாக்களும், சாதிய இயக்கங்களும், மத அமைப்புகளும் காவல் துறையை, குறிப்பாக அந்த உதவி ஆய்வாளரை ஒரு வழியாக்கியிருப்பார்கள்.

இதுபோன்ற சம்பவங்கள் காவல் துறையில் நாள்தோறும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இவைகளைக் கடந்துதான் காவலர்கள் பணியில் தொடர்கிறார்கள்.

காவல் துறையில் வெளியே தெரியாத உண்மைகள் பலவும் இருக்கின்றன.

காவல் துறை என்றவுடன், சினிமாவில் வருவதுபோல் பட்டனை தட்டியதும் மிகப்பெரிய திரையில் சென்னை போன்ற மாநகரங்களின் வரைபடங்கள் வந்துவிடும். காவலர்கள் யாரை தேடுகிறார்களோ அவர்கள் இருக்குமிடம் அதில் தெரிந்துவிடும். உடனே, வயர்லெஸ் கருவி மூலம் தகவல் சொன்னவுடன் ஆங்காங்கே இருக்கும் காவலர்கள் விரைந்து சென்று பிடித்து விடுவார்கள் என்று மக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், உண்மையில் தமிழக காவல் துறையின் நிலையோ மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது. அப்படி எந்தவிதமான வரைபடங்களோ, தொடர்பு சாதனங்களோ, நவீன ஆயுதங்களோ, வாகனங்களோ தமிழக காவல் துறையில் இல்லை என்பதுதான் உண்மை.

காவல் துறை வாகனங்கள்

காவல் துறையில் ஆய்வாளர்கள் உபயோகப்படுத்தும் வாகனங்கள் 15 முதல் 20 வருடங்கள் பழமையானவை. அது, ஏற்கெனவே பல அதிகாரிகளின் வீடுகளில் சில காலங்களும், அலுவலகங்களில் பல காலங்களும் ஓடி முடித்துக்கொண்டுதான் மக்களைக் காப்பாற்றும் பணிக்கு வந்துள்ளன. அவற்றை ஓட்டுவதற்கு ஓட்டுநருக்கு தனித்திறமை வேண்டும்.

இருசக்கர வாகனங்களை பெரும்பாலும் வெளிச்சந்தையில் குறைந்த விலைக்கு வாங்கி, அதில் சிலவற்றை மாற்றி உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களுக்கு ரோந்து செல்ல கொடுக்கப்படுகிறது. அந்த வண்டியை குறிப்பிட்ட காலத்தில் மாற்றவும் மாட்டார்கள்.

வாக்கிடாக்கிகளின் வருத்தம்

ஒரு காலத்தில் காவல் துறையினர் மட்டுமே வாக்கி டாக்கி வைத்திருந்தனர். ஆனால் இன்று, கார்ப்பரேஷன் கிளீனர், ஷாப்பிங் மால் வாட்ச்மேன், பைப் ரிப்பேர் செய்பவர், ஈவன்ட் மேனேஜ்மென்ட் நடத்துபவர் என பலரும் வாக்கிடாக்கி வைத்துள்ளனர். அவை புதுவகையான கையடக்கமான செயல்திறன் அதிகம்கொண்டவை. ஆனால் 1980-களில் உபயோகப்படுத்திய மாடல் வாக்கிடாக்கிகளையே இன்றும் பிளாஸ்டர் போட்டு ஒட்டி காவல் துறையினர் உபயோகப்படுத்தி வருகின்றனர். அதுகூட போதிய எண்ணிக்கையில் இல்லை என்பதுதான் கொடுமை.

துயர நிலையில் துப்பாக்கிகள்

ஆய்வாளர், உதவி ஆய்வாளர் இருவருக்கு மட்டும்தான் காவல் நிலையத்தில் கையடக்க பிஸ்டல் எனப்படும் சிறிய துப்பாக்கி கொடுக்கப்பட்டுள்ளது. அதை அவர்கள் பயிற்சியில் சுட்டதோடு சரி, அதற்குப் பின்பு அதை துடைத்து வைக்க எடுத்தால்தான் உண்டு.

காவலர்கள் பயன்படுத்துவதற்கு காவல் நிலையங்களில் உள்ளவை, ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்தபோது அவர்கள் உபயோகப்படுத்திய ‘போர் 10 மஸ்கட்’ எனப்படும் பழைய துப்பாக்கிகள். அதை எடுத்து அதற்குள் குண்டுகளை செலுத்திச் சுட வேண்டும் என்றால், குறைந்தது 3-லிருந்து 4 நிமிடங்கள் ஆகும். அதன் வெயிட்டே சுமார் 6 முதல் 7 கிலோ வரை இருக்கும். மூன்றடி உயரம் இருக்கும் அதைத் தூக்கிக்கொண்டு இரவு ரோந்துக்கு காவலர் சென்றால், என்ன ஆகும்? அவர் துப்பாக்கியைப் பிடிப்பாரா இல்லை திருடனைப் பிடிப்பாரா ?

காவல் கட்டுப்பாட்டு அறை

சென்னை போன்ற ஒரு சில மாநகரங்களில் மட்டுமே காவல் துறை கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. உள் மாவட்டங்களில் பகல் நேரங்களில் கூட காவல் கட்டுப்பாட்டு அறை இயங்குவதில்லை. இது பல அதிகாரிகளுக்கு தெரிவதே இல்லை. பல நேரங்களில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசினால், காவல் கட்டுப்பாட்டு அறையில் இருப்பவர்கள் குறிப்பிட்ட காவல் நிலையத்துக்கு நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள் என பேசுபவருக்கு அறிவுரை கூறுகின்றனர்.

இதுபோன்று சில பதிவுகள் பதிவிடுவதால் காவல் துறையில் உள்ள குறைகள் அனைத்தும் களையப்பட்டு விடுமா என்று கேட்டால் தெரியாது. காவல் துறை என்பது ஒரு கடினமான துறை. இத்துறையில் பணிக்கு சேர்ந்தவர்கள் துன்பங்களையும், துயரங்களையும் அனுபவித்தே ஆகவேண்டும்.

சற்றும் மிகையில்லாத உண்மைகளைச் சுட்டிக்காட்டும் இந்தப் பதிவுகளில் உள்ளவை அனைத்தும் உடனடியாக செவிமடுக்கவும், பரிசீலிக்கப்படவும் வேண்டியவை. காவலர்களின் இந்த ஆதங்கம் சரிசெய்யப்பட்டால் தமிழக காவல் துறையினரின் செயல்பாடுகள் இன்னும் செம்மையாகும், வேகமெடுக்கும், விவேமாகும்.

தமிழக அரசு முன்வருமா?

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in