கோயிலில் இருந்து வெளியேறிய தெய்வம்... வரலாறு திரும்புகிறதா?

எழுத்தாளர் நக்கீரன்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

ஒரு முதியவர், கடவுளை கோயிலிலிருந்து ஆவாஹனம் செய்ய வேண்டும் என்று கூறிய காணொலியைப் பார்த்தேன். அதாவது, கடவுளின் ஆற்றலை சிலையிலிருந்து மந்திரங்கள் மூலம் அகற்றி எடுத்துச்சென்று வீட்டில் வைத்து வழிபடவேண்டும் என்கிறார். இதனால், நாட்டின் நிலைமை மோசமாகி கொடியவர்களின் ஆதிக்கம் ஒழியும் என்கிறார்.

கடந்த காலத்தில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இதுபோன்ற ஆவாஹனம் நடந்து அர்ச்சகர்கள் தோற்றுப்போன வரலாறு அவருக்குத் தெரியாது என்பதை நான் நம்பவில்லை. தெரிந்தும் தெரியாதது போல அவர் நடிக்கிறார் என்றே கூறவேண்டும். இருப்பினும் அதை மீண்டும் நினைவூட்டும் வாய்ப்பை தந்தமைக்கு அம்முதியவருக்கு நன்றி.

கடந்த 1939-ம் ஆண்டு மதுரையில் வைத்தியநாதய்யர் தலைமையில், அரிசன ஆலயப் பிரவேசம் நடந்த நிகழ்ச்சியின் மறைக்கப்பட்ட வரலாற்றுப் பகுதியை தொ.பரமசிவம் அவர்கள் ‘மதுரைக்கோயில் அரிசன ஆலய பிரவேசம் 1939’ என்கிற கட்டுரையாகத் தந்துள்ளார். அதிலிருந்து, இந்த ‘ஆவாஹனம்’ பகுதி மட்டும் இங்குச் சுருக்கித் தரப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், ஒடுக்கப்பட்ட மக்கள் 6 பேருடன் 10.7.1939 அன்று ஆலயப் பிரவேசம் செய்யத் திட்டமிட்டதை ஆலய அர்ச்சகர்களும் வேதம் ஓதும் ‘அத்யயன பட்டர்’ என்ற பிரிவினரும் கடுமையாக எதிர்த்தனர். இவர்கள் முதல்நாள் இரவே கோயிலைப் பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு சென்றும் விட்டனர். ஆனால், பத்தாம் தேதி அன்று பூசை செய்ய வேண்டிய சுவாமிநாத பட்டர் மட்டும் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. அவரை வைத்துக் கோயில் நிர்வாகத் தலைமையில் கோயில் திறக்கப்பட்டுக் கோயில் நுழைவு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

எதிர்ப்பாளர்களுக்கும் இதர அர்ச்சகர்களுக்கும் ஒரு வழக்கறிஞரான ஆறுபாதி நடேசய்யர் என்பவர் தலைமை தாங்கினார். இவர் அப்போது ‘வர்ணாஸ்ரம ஸ்வராஜ்ய சங்க’த்தின் மதுரை நகரத் தலைவராக இருந்தார். (பெயரை கவனியுங்கள், சுயராஜ்யம் கிடைத்தால் அது வர்ணாஸ்ரமத்தின்படி இயங்குமாம்) நடேச அய்யரும் இதர சனாதனிகளும் மீனாட்சியம்மன் கோயிலுக்கு விரைந்து ஒரு பொற்குடத்துக்கு ஏராளமான சடங்காச்சாரங்களைச் செய்து, பூசையும் நடத்தி அதனுடன் நடேச அய்யர் வீட்டுக்குச் சென்றனர். அத்துடன் மீனாட்சி அம்மன் கோயிலைவிட்டு வெளியேறி ‘மங்கள விலாசம்’ என்ற பங்களாவில் தங்கிவிட்டாள் என்றும் அறிவித்தனர். அதைத் தொடர்ந்து பார்ப்பனர்கள் அங்குச் சென்று வழிபாடு செய்யத் தொடங்கினர். இதற்கிடையே அரசின் மீது வழக்கும் தொடுக்கப்பட்டது.

சில நாட்களுக்குப் பிறகு நடேசய்யர் வீட்டு முன்பிருந்த காலி மனையில் ஒரு புதிய மீனாட்சியம்மன் கோயிலைக் கட்டி அங்கு வழிபாடு தொடரப்பட்டது. 1945 வரை இக்கோயில் நீடித்திருந்தது. பின்னர், ஆறாண்டுகள் கழித்துத் தங்கள் முயற்சிகள் அனைத்தும் தோற்ற பிறகு அந்த அர்ச்சகர்கள் மீண்டும் பழைய கோயில் பணிக்கே திரும்பிவிட்டனர். அர்ச்சகர்களின் மந்திரங்களால் சக்தியூட்டப்பட்டிருந்த புதிய மீனாட்சி அம்மன் கோயில், பின்னர்ச் சுவடு தெரியாமல் இடிக்கப்பட்டும் விட்டது. அர்ச்சகர்களால் சக்தியை இழந்து வெறும் சிலையாகிப் போன அசல் மீனாட்சி அம்மன்தான் இறுதியில் வெற்றி பெற்றார்.

வரலாறு தெரிந்தும் ஆவாஹனமா? உங்கள் பரிதாபக் கதையை மீண்டும் நீங்கள் தொடர விரும்பினால், அதை யார்தான் தடுக்க முடியும்?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in