உள்ளத்திலும் ஆசிரியராக திகழ்வோம்!: சர்வதேச ஆசிரியர் தினம்

உள்ளத்திலும் ஆசிரியராக திகழ்வோம்!: சர்வதேச ஆசிரியர் தினம்

இந்தியாவின் ஆசிரியர் தினத்தை (செப்டம்பர் 5) நாம் கொண்டாடுவதிலேயே, மிகப்பெரிய பொறுப்புகளும் நம்முடன் இணைந்தே உடன் பயணிக்கின்றன. இந்நிலையில் சர்வதேச ஆசிரியர் தினத்தில் (அக்டோபர் 5) கூடுதல் பொறுப்புகளை எடுத்துக்கொள்ளும் கட்டாயத்தில் உள்ளோம்.

ஏதோ ஒருநாள் வாழ்த்துச் சொல்வதில் இல்லை இந்த தினம் என்பதை, மற்ற ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிகமாக உணர்த்துகிறது. வகுப்பறை மாற்றங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டு இருந்தாலும் சமூக மாற்றத்தின் தேவையை வலிமையுடன் எடுத்துச் செல்லாத சூழலே உள்ளது. நம்மைச் சுற்றி நிகழும் அன்றாட சம்பவங்கள் நமக்கு இதை இடித்துரைக்கின்றன என்பது கண்கூடு.

யுனெஸ்கோவின் அறிவிப்புப்படி, 1994 -ல் இருந்து சர்வதேச ஆசிரியர் தினத்தை இந்நாளில் கொண்டாடி வருகிறோம். இருப்பினும் ஏன் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் கல்வியில் இவ்வளவு பின்னடைவு, ஆசிரியர்களது சமூக மாற்றம் நோக்கிய பார்வையில் இவ்வளவு இடைவெளி எனப் புரியவில்லை.

பின்னடைவு என்றவுடன் ஒரு சாரார் மனதில் தோன்றுவது , ”ஸ்மார்ட் க்ளாஸ் ரூம் எல்லாம் இருக்கே! க்ரேடு சிஸ்டம் எல்லாம் இருக்கே!” என்பது.

அதுவல்ல! தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் வாசிப்புத் திறனில் மாணவரிடையே பெருமளவு சறுக்கல், அரசுப் பள்ளிகள் ஆண்டுக்கு ஆண்டு இழுத்து மூடப்படும் நிலை... இவற்றையே நான் குறிப்பிடுகிறேன். கடந்த கல்வி ஆண்டு முதல் இந்தப் பள்ளிகளை மூடுதல் குறைந்துள்ளது.

இந்நிலையில், ’கல்வியை மீட்டெடுக்கும் பணியில் இதயமாக ஆசிரியர்கள் திகழ வேண்டும்’ என்பதே, இந்த ஆண்டின் சர்வதேச ஆசிரியர் தின கருப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா காலக் கல்விச் சூழலை மனதில் வைத்து கல்வியை மீட்டெடுப்பது என்பது, ஆசிரியர்களால் மட்டுமே இயலும் என்ற கருத்தை இது வலியுறுத்துகிறது.

ஏற்கெனவே நமக்கு இருக்கும் பல்வேறு சவாலான கல்விச் சூழலுடன், இந்த கரோனா கால கற்றல் இடைவெளியும் இணைந்து ஒட்டுமொத்த சமூகத்தையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது. கல்வியை மீட்டெடுப்பதில் எல்லோருக்கும் பங்கு உண்டு என்றாலும் ஆசிரியர்களே மையமானவர்கள். அதைத்தான் யுனெஸ்கோவும் குறிப்பிட்டுள்ளது. ஆசிரியர்களால் மட்டுமே கற்றல் இடைவெளியை முழுமையாக மீட்டெடுக்க இயலும். அதை நோக்கி நாம் நகர வேண்டும்.

கல்வித் துறையும் ஆசிரியர்களை வெறும் பதிவேடுகள் தயாரிக்கும் எந்திரங்களாக மாற்றாமல், அவர்களுக்கான சுதந்திரத்தை அளிக்க வேண்டும். கரோனா காலக் கல்விச் சூழ்நிலையை மீட்டெடுக்க அவர்களை வழி நடத்த வேண்டும். இவற்றை எல்லாம் மனதில் கொள்வதோடு, ஆசிரியர்கள் மற்ற இடர்களைக் களையவும் கை கொடுக்க வேண்டும்.

தாய்மொழி வழிக் கல்வியின் அவசியத்தை சமூகத்துக்கு உணர்த்துதல், சமூகத்தில் நிலவும் ஆண் - பெண் பாகுபாடு, சாதி, மதம் இவற்றின் காரணமாக மாணவர் சமூகம் எதிர்கொள்ளும் சிக்கல்களைக் களைதல் அல்லது களை பிடுங்க உதவுதல் உள்ளிட்ட கடமைகள் ஆசிரியர்களுக்கு உள்ளது. அதிலும் மற்றெல்லோரையும் விட ஆசிரியர்களுக்கு இந்தப் பொறுப்பு கூடுதலாக உள்ளது என்பதை உணர வேண்டிய நாளாக அவற்றுக்கான செயல்களை வகுப்பறை, பள்ளி மற்றும் நம்மைச் சுற்றியுள்ள சமூகம் இங்கெல்லாம் விதைக்கச் சிந்திக்கும் ஒரு நாளாக அமைய சக ஆசிரியத் தோழமைகள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றேன்.

பள்ளி ஆசிரியரும் கல்விச் செயற்பாட்டாளருமான உமா மகேஸ்வரி முகநூலில் எழுதிய பதிவு இது.

Related Stories

No stories found.