சாப்பிட்ட காச சத்தமா 
கேக்க மாட்டேந் தம்பி!

சாப்பிட்ட காச சத்தமா கேக்க மாட்டேந் தம்பி!

உணவளிக்கும் இதயங்களின் உதவிகள்

காலை 6 மணியிலிருந்து ஏதோ ஒரு மொழிபெயர்ப்பு வேலையில் மூழ்கிப் போயிருந்ததில், இயல்பான நேரம் தவறி விட்டிருந்தது.11.15 மணிக்குப் பசிக்க ஆரம்பித்தது, வழக்கமாக சாப்பிடும் கடைகளில் போய்ப் பார்த்தால், கூட்டித் துடைத்துக் கொண்டிருந்தார்கள்.

சாலையோர மூலைக்கடைப் பெரியவரிடம், இரண்டு மூன்று பேர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ஏதாவது கிடைக்கும் என்று போய்ப் பார்த்தால் எல்லாம் இருந்தது. 4 இட்லிகளை வாங்கி சாப்பிடத் தொடங்கியபோது தான் நினைவுக்கு வந்தது, கையில் சுத்தமாகப் பணமில்லை என்கிற விஷயம்.

யுபிஐ (UPI) எதுவும் இருக்கிற மாதிரித் தெரியவில்லை. கை கழுவிவிட்டு மொபைல் போனை அவரிடம் நீட்டி, “இதை வைத்திருங்கள், ஏடிஎம்-ல் பணம் எடுத்து வருகிறேன்” என்று நகரப் போனவனிடம் கடுமையான கோபத்தோடு, "தம்பி, மொதல்ல மொபைலக் கைல எடுங்க, சாப்பிட்டதுக்குப் போயி இப்பிடி அசிங்கப்படுத்துறீங்களே என்னைய" என்றார். நான் செய்ததை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, தானாகவே புலம்பினார். எனக்கே குற்ற உணர்வாகி விட்டது.

பணம் எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தபோதும், "4 இட்லிலயா தம்பி, நான் பெரிய தொரையாகப் போறேன். 30 வருஷமா தொழில் பண்றேன், சாப்பிட்ட காச யாருகிட்டயும் சத்தமாக் கூடக் கேட்டதில்லப்பா". அவருடைய இதயத்திலிருந்து வந்த சொற்கள் அவை.

அலுவலகப் பணிகளுக்காக பெருநகரங்களின் 5 நட்சத்திர விடுதிகளில் எத்தனையோ முறை தங்கியிருக்கிறேன். ஆனால், சாப்பிடுவதற்கு மிகச் சிறிய சாலையோரக் கடைகளே என்னுடைய தேர்வு, அந்தக் கடைகளில் டை கட்டியவர்கள் பவ்யமாகக் குனிந்து பரிமாறுவதில்லை. இந்தப் பெரியவரைப் போல மனிதர்களையும், பசியையும் புரிந்து கொண்ட மானுட நாகரிகத்தை அவர்களே உணர்த்தி இருக்கிறார்கள்.

மனிதர்களை அடிப்படையில் வழிநடத்தும் 2 காரணிகளில் முதன்மையானது பசி. சாலையோரக் கடைகளில் பசிக்காக சாப்பிடுகிறவர்களே அதிகம். இருக்கிற பணத்தை மனதுக்குள் கணக்கிட்டு என்ன சாப்பிடுவது என்று முடிவு செய்பவர்களே அதிகம். அங்கு சாப்பிடுகிற மனிதர்களிடம் சத்தம் போட்டுக் காசு கேட்கக் கூடாது என்று நினைக்கிற மனதை அடைவதுதான் சவால்.

காசில்லாமல் சாப்பிடுகிற யாரும் காயமடைந்து விடுவார்களோ என்று நினைப்பதற்கு, மனதிற்குள்ளாகவே ஒரு பெரிய இயக்கம் நடத்தி இருக்க வேண்டும். பசித்தவனின் துயரத்தை அறிந்து கொண்டிருக்க வேண்டும். அவருடைய உடை அழுக்காக இருந்தது. ஆனால், சக மானுடனின் இதயத்தைப் பார்க்கிற அவரது கண்களில் இருந்துதான் தூய்மையான அகண்ட பிரபஞ்சத்தின் விளிம்பு தொடங்குகிறது.

ஊரடங்கு காலத்தில் ஒரு இளைஞனைப் பார்த்தேன். ஒரு பெரிய காரில் இருந்து கை நிறைய உணவுப் பொட்டலங்களோடு இறங்குவான். சாலையோரங்களில், குடிசையில் வசிப்பவர்களிடத்தில் ஒவ்வொன்றாகக் கொடுத்துவிட்டு ஓடுவான். யாரிடத்திலும் நின்று அவர்களிடம் ஒரு சொல் கூடப் பேசிப் பார்த்ததில்லை.

நன்றிகளைப் பெற்றுக் கொள்கிற பழக்கமோ, தன்னுடைய சேவையைத் தானே ரசிக்கிற பெருமித உணர்வோ இல்லாமல் அச்சத்தோடு அவர்களிடமிருந்து விலகி ஓடுவான். அவர்கள் யாரும் இரந்து உண்கிற குற்ற உணர்வை அடைந்து விடக் கூடாது என்பதில் அவன் கவனமாக இருப்பான், அதை ஒரு கடமையைப் போல செய்துவிட்டுக் காரில் ஏறிப் பறந்துவிடுவான்.

சேலத்தில், ஒரு சாலையோரக் கடையில் சாப்பிடத் தொடங்கிய ஒரு வாரத்திற்குப் பின்பு அங்கிருக்கும் சின்னஞ்சிறு பெண், "அண்ணே, கொஞ்சமா சாம்பார் போடவா?" என்று அத்தனை அன்போடு கேட்கிறபோது, நாம் வீட்டைப் பிரிந்திருக்கிறோம் என்ற நினைவு மறைந்துவிடும். வீட்டை அந்தக் குட்டிப் பெண் நகர்த்தி அருகில் கொண்டுவந்து விடுவாள்.

போர்க்கை எப்படிக் கையாள்வது, மேசையில் வைக்கப்படும் கைத்துண்டை எப்படி எடுப்பது, திரவ ஸ்டார்ட்டருக்குப் பின்னால் என்ன சாப்பிடுவது, சைனீஸ் உணவோடு சேர்த்து என்ன துணை உணவு சாப்பிடுவது என்றெல்லாம் நட்சத்திர உணவகங்களில் பெருமைக்குரிய நடைமுறைகள் இருக்கின்றன. அதை நாகரிகத்தின் அடையாளம் என்று சொல்லிக் கொடுக்கிறார்கள்.

ஆனால், பெரியவரின் "சாப்பிட்ட காச சத்தமாக் கேக்க மாட்டேந் தம்பி" என்கிற சொற்களில் இருந்தும், பிறர் கொடுக்கிற உணவைச் சாப்பிடுகிறோம் என்ற குற்ற உணர்வு வரக்கூடாது என்று நிற்காமல் ஓடிப் போகிற இளைஞனின் கால்களில் இருந்தும், "அண்ணே, கொஞ்சமா சாம்பார் போடவா? என்று கேட்கிற அந்தக் குட்டிப் பெண்ணின் கைகளில் இருந்தும் தானே... நாகரிகம் தழைத்து இந்த உலகை வழிநடத்துகிறது.

Related Stories

No stories found.