இணையத்தில் பரவும் அமித்ஷாவின் தண்ணீர் பாட்டில் விலையும்... துர்கா ஸ்டாலினின் மினரல் வாட்டர் நிறுவனமும்

இணையத்தில் பரவும் அமித்ஷாவின் தண்ணீர் பாட்டில் விலையும்... துர்கா ஸ்டாலினின் மினரல் வாட்டர் நிறுவனமும்

உலகின் ஆரம்ப காலம் தொட்டு அரசியலில் தண்ணீர் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இரு நபர்களுக்கு இடையே, இரு ஊர்களுக்கு இடையே, மாவட்டங்களுக்கு இடையே, மாநிலங்களுக்கு இடையே, ஏன் நாடுகளுக்கிடையேயும் தண்ணீர் பிரச்சினை பெரிதாக்கப்படுவதும், அதன் பின்னணியில் நுட்பமான அரசியல் பிரச்சினைகள் இருப்பதும் வரலாறு.

தமிழக அரசியலில் எப்போதும் காவிரி உள்ளிட்ட எல்லா தண்ணிர் பிரச்சினைகள் முக்கிய இடத்தை பெற்றிருக்கும். அவ்வகையில் தற்போதும் ஒரு தண்ணீர் பிரச்சினை சமூக வலைதளங்களில் மிக வேகமாக கருத்து மோதலாக உருவெடுத்திருக்கிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குடித்த தண்ணீர் பாட்டில் விலை 850 ரூபாய் என்று பரவிய ஒரு தகவல்தான் சமீபத்திய கருத்து மோதலுக்கு காரணம். கோவாவில் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தையும், குடிநீர் பற்றாக்குறை எந்த அளவிற்கு ஆபத்தாக மாறிவருகிறது எனவும், நீர்நிலைகளைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து அம்மாநில விவசாயத்துறை அமைச்சர் ரவிநாயக் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது அவர் பேசும் போது, "கோவா வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹிமாலயா நிறுவனத்தின் தண்ணீர் பாட்டிலை வரவழைக்குமாறு கூறினார். இதற்காக பனாஜியிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள மபுசா என்ற நகரத்திலிருந்து அந்த தண்ணீர் பாட்டிலை வரவழைத்து அவருக்குக் கொடுத்தோம். இந்த பாட்டில் ஒன்றின் விலை ரூ.850 ஆகும்" என்றார்.

ரவி நாயக்கின் இந்த பேச்சையடுத்து அமித்ஷாவிற்கு எதிராகப் பலரும் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மக்கள் விலை உயர்வால் அவதிப்பட்டு வரும் போது அமித்ஷாவால் எப்படி விலை உயர்த்த தண்ணீர் பாட்டிலை வரவழைத்துக் குடிக்க முடிகிறது என கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த பதிவு வடமாநிலங்களில் பரவுகிறதா என்று தெரியாத நிலையில் தென் மாநிலத்தில் குறிப்பாக தமிழகத்தில் மிக வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் தான் அதற்கு பதிலடி தரும் வகையில் ஒரு தகவல் பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவினரால் சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பப்படுகிறது. திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் பெயரால் மினரல் வாட்டர் நிறுவனம் தொடங்கப்பட்டு இருக்கிறது. இனி அதைத்தான் வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவார்கள் என்பதாக அந்த தகவல் சொல்கிறது.

ஸ்பிரிங்ஸ் என்ற பெயரிட்ட ஒரு குடிநீர் பாட்டிலின் புகைப்படம் பதிவிடப்பட்டு இந்த தகவல் பரப்பப்படுகிறது. அதில் ஏன் Springs மினரல் வாட்டர் மற்றவற்றையெல்லாம் விட சிறந்தது ?
ஏனென்றால் இது அண்ணியாரின் நிறுவனம் என்கிறது அந்த பதிவு. அந்த குடிநீரை தயாரிப்பது டி.எஸ் மினரல்ஸ் என்ற நிறுவனம். DS Mineraals, 223/3 & 223/4, Ulundai Village, Tiruvallur என்ற முழு முகவரியை அதில் பதிவிட்டிருக்கிறவர்கள், டி எஸ் என்றால் துர்கா ஸ்டாலின் என்று விளக்கம் சொல்கிறார்கள்.

Mineraals என்பதில் இரண்டு a க்கள் வருவதற்கும் விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது. அது எழுத்துப் பிழை அல்ல, அதற்கு எண் கணிதம் எனப்படும் நியுமராலஜி தான் காரணம் என்று அந்த தகவல் சொல்கிறது.

இப்படி அமித்ஷா குடித்த தண்ணீர் பாட்டிலின் விலை பற்றிய ஒரு தகவல் தமிழ்நாட்டில் பரவ, அதற்கு பதிலடியாக துர்கா ஸ்டாலின் பெயரால் மினரல் வாட்டர் கம்பெனி தொடங்கப்பட்டு இருப்பதாக தகவல் பரப்பப்படுவது தண்ணீரும் அரசியலே என்பதை மீண்டும் அழுத்தமாக சுட்டிக்காட்டுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in