தென்றல் வந்து தீண்டும்போது..! : மருத்துவ நோபல் பரிசு 2021

தென்றல் வந்து தீண்டும்போது..! : மருத்துவ நோபல் பரிசு 2021

மிளகாயைக் கடித்தவுடன் காரமாகவும்,

புதினா இலையை மெல்லும்போது குளிர்ச்சியாகவும்,

மெல்லிய தென்றல் நம்மை தீண்டும்போது இதமாகவும்,

அதேசமயத்தில் கூரிய ஊசிமுனையால் நம்மைக் குத்தும்போது சுரீரென்று வலிப்பதும் ...

ஏனென்று நடத்திய ஆராய்ச்சியில், நம்முடைய நரம்புகளில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட வகைப் புரத உணர்விகள்தாம் காரணமென்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதைக் கண்டுபிடித்தவர்கள், அமெரிக்க வாழ் மருத்துவ அறிவியலாளர்களான டேவிட் சூலியசு மற்றும் ஆர்தம் படபூட்டியன். இவர்களுக்குத்தான் 2021-ம் ஆண்டுக்கான மருத்துவ உடலியல் துறைக்கான நோபல் பரிசு கிட்டியிருக்கிறது.

செல் மேற்பரப்பில் இயங்கும் தட்பவெப்ப ஏற்பிகளோடு மேற்சொன்ன உணர்விகளுக்கு இருக்கும் தொடர்புகளையும், வெப்பம், அழுத்தம், தொடுதல், நுகர்தல், சுவைத்தல் போன்ற எல்லா உணர்வுகளுக்குமான காரணங்களைக் கண்டறிந்ததற்காக இருவரும் விருதைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, மனித குலம் தழைத்தும் உயிர்ப்போடும் இருப்பதற்குத் தொடுதல் உணர்வுதானே காரணமாக இருக்க முடியும்?

அவ்வாறான உணர்வுகளில், வலிமிகுந்த மற்றும் வலியற்ற தொடு உணர்வுகளை உணரும் நரம்பு இழைகளை முதலில் கண்டறிந்ததற்காக, இரெனே தேசுகார்ட்டசு என்பவருக்கு 1944-லேயே மருந்து நோபல் பரிசு வழங்கப்பட்டது. என்றாலும், அந்த நரம்புகளில் இருக்கும் வெப்பம் மற்றும் தொடு உணர்ச்சிகளை உணர்கின்ற மூலக்கூறுகள் இப்போதுதான் கண்டறியப்பட்டிருக்கின்றன. இயற்கையின் மர்மங்களிலொன்றைத் திறந்துகாட்டி இருக்கும் ஆராய்ச்சியென்று, உலக அறிவியலாளர்களால் இந்தக் கண்டுபிடிப்பு புகழப்படுகிறது.

இந்த அரிய கண்டுபிடிப்புக்கு, மிளகாயின் காரச்சுவைக்குக் காரணமான காப்சைசின் (Capsaicin) என்னும் வேதிப்பொருளைத்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதாவது, மிளகாயிலிருந்து எடுக்கப்படும் காப்சைசினை, உடலின் பல்வேறு உறுப்பு செல்களுக்குக் கொடுத்து, அவற்றின் எதிர்வினைகளைக் கூர்ந்து ஆராய்ந்தார்கள். அப்போது உடலைத் தொடும்போதும், வெப்பத்தால் சுடும்போதும் அல்லது தட்பத்தால் குளிர்விக்கும்போதும் உடலின் மேற்தோலிலிருந்து நரம்புவழிப் புரதங்களால் மூளைக்குக் கடத்தப்படுகிறது என்று தெரியவந்திருக்கிறது.

கூடுதல் தகவல்: மிளகாய்க்குத் தாயகம் சிலி நாடு. 15-ம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த போர்த்துகீசியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டதே மிளகாய். மிளகுக்கு இணையான காரச்சுவையைக் கொடுத்ததாலும், சிலி நாட்டில் தோன்றியதாலும் 'சி(ல்)லி பெப்பர்' என்று வழங்கப்படுகிறது.

இங்கிலாந்தில் உள்ள ஹல் பல்கலைக்கழக அறிவியல் துறை, முதுநிலை முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர் செ.அன்புச்செல்வன் முகநூலில் எழுதிய பதிவு இது.

Related Stories

No stories found.