
வாழ்க்கை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு தத்துவார்த்தமாகவோ, அனுபவபூர்வமாகவோ நமக்குத் தெரிந்ததை வைத்து பலவிதமான பதில்களை சொல்லத்தான் தோன்றும். ஆனால், யாரோ எழுதி வலைதளத்தில் உலவிவரும் அந்தக்கேள்விக்கான பதிலைப் பார்க்கும்போது ஆமாம்ல... இது உண்மைதானே. இப்படியே இருந்தா எந்தப் பிரச்சினையும் வராதுல்ல... என்று சொல்லத் தோன்றுகிறது.
வலையில் உலவும் அந்த வாழ்க்கை ரகசியம்...
‘இட்லி மாதிரி பளிச்சுனு சிரிச்சுக்கிட்டே இருக்கணும்
புரட்டிப் போட்டாலும் தோசை மாதிரி பொறுமையா இருக்கணும்
உள்ள ஒண்ணும் இல்லாட்டாலும்
பூரி மாதிரி மகிழ்ச்சியில உப்பி இருக்கணும்
அடை மாதிரி எல்லாருக்கும் பிடிச்சவங்களா இருக்கணும்
ஓட்டையா இருந்தாலும் வடை மாதிரி கவர்ச்சியா இருக்கணும்
உப்புமா மாதிரி அவசரத்துக்கு கை கொடுக்கணும்
பொங்கல் மாதிரி குழைவா பேசணும்
அடிச்சி துவைச்சாலும் பரோட்டா மாதிரி தாக்குப் பிடிக்கணும்
பிரியாணி மாதிரி ஃபேமஸா இருக்கணும்
சப்பாத்தி மாதிரி எளிமையா இருக்கணும்
ஜிலேபி மாதிரி சுத்தி வளைச்சுப் பேசக்கூடாது
நூடூல்ஸ் மாதிரி சிக்கலா இருக்கக்கூடாது
பீஸா மாதிரி இழுபறியா இருக்கக்கூடாது
ஆப்பம் மாதிரி தொப்பையோட இருக்கக்கூடாது
புட்டு மாதிரி உள்ளதெல்லாம் கொட்டக்கூடாது
கேசரி மாதிரி இனிமையா பேசணும்
பாயசம் மாதிரி விசேஷமா இருக்கணும்
அப்பளம் மாதிரி ஆறுதலா இருக்கணும்
அவியல் மாதிரி ஒற்றுமையா இருக்கணும்
புரூட் சாலட் மாதிரி சக்தியோட இருக்கணும்
ஐஸ் கிரீம் மாதிரி கூலா இருக்கணும்
மொத்தத்துல டிகிரி காபி மாதிரி
நம்ம வாழ்க்கை மணக்கணும்’
என்று அருமையாக முடித்திருக்கிறார் அந்த ரசனைக்கார ரசிகர்.
இதைப் படித்துவிட்டு இன்னும் சிலவற்றை சேர்த்திருக்கிறார் இன்னொருவர்:
சாதம் போல வெள்ளந்தியா இருக்கணும்.
ரசம் போல தெளிவா இருக்கணும்.
மசியல் போல குழைவா இருக்கணும்
குழம்பு போல தான் தான்னு கொதிச்சுக் குழப்பக்கூடாது
தயிர் சாதம் ஊறுகாய் போல இணைஞ்சு இருக்கணும்’
- என்கிறது அந்த கூடுதல் இணைப்பு.
என்னடா, ஞாயிற்றுக் கிழமையும் அதுவுமா வெறும் சைவ அயிட்டமாவே சொல்றோம்னு பார்த்தீங்களா...
இது புரட்டாசி மாதம் மக்கா!