திரையிசையில் பாரதி கச்சிதமாகப் பொருந்தியது எப்படி?

பாடலாசிரியர் யுகபாரதி அலசல்
யுகபாரதி
யுகபாரதி

மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டை முன்னிட்டு திரைப்பட பாடலாசிரியர் யுகபாரதி தனது முகநூல் பக்கத்தில் எழுதிய பதிவு:

’திரையில் பாரதி’

பத்திரிகைகளிலும் காட்சி ஊடகங்களிலும் திரைப்பாடலாசிரியர்களிடம் நேர்காணல் எடுப்பவர் தவறாமல் கேட்கும் கேள்விகளில் ஒன்று, ‘மெட்டுக்குப் பாட்டா, பாட்டுக்கு மெட்டா’ என்பதுதான். கேள்வி கேட்பவரைப் பொருத்தவரை அவருக்கு அதுவே அதி முக்கியமான கேள்வி.

எதைத் தவிர்த்தாலும் அக்கேள்வியை அவர் தவிர்க்க விரும்புவதில்லை. என்னிடமும் இதே கேள்வி பலமுறை கேட்கப்பட்டிருக்கிறது. சொன்ன பதிலையே மறுபடி மறுபடி எத்தனைமுறை சொல்வதென்று நாகரிகமாக அக்கேள்வியைத் தவிர்க்கும்படிக் கேட்டிருக்கிறேன்.

பாட்டுக்கு மெட்டா, மெட்டுக்குப் பாட்டா என்பதெல்லாம் சம்பந்தப்பட்டவர்களின் தேவையையும் அவசரத்தையும் முன்னிட்டு எடுக்கப்படும் முடிவுகள்தாமே அன்றி, அதற்குள் பெரிய புதிரோ சவாலோ இல்லை என்பதே என் கருத்து.

கவிதைகளின் முகப்பிலேயே இது இன்ன ராகத்தில் பாடப்பட வேண்டுமென பாரதி குறித்திருப்பார். இசையையும் யாப்பையும் கருத்தில் கொண்டு எழுதப்பட்ட அவருடைய கவிதைகள் பலவும் திரைப்பாடல்களாக வந்திருக்கின்றன. மக்கள் மத்தியில் பாரதியின் கவிதைகள் பரவுவதற்கு அதுவே முக்கிய காரணமென்றும் சொல்லலாம்...

ஓரளவேனும் இசைப் பயிற்சியும் மொழிப்பயிற்சியும் இல்லாதவர் மெட்டுக்கு எழுதுவது கடினம் என்கிற புரிதலில், அவர் அக்கேள்வியைக் கேட்பதாக வைத்துக்கொள்ளலாம்.

நூறாண்டுகளுக்கும் மேலாகத் திரைப்பாடல்கள் எழுதப்பட்டு வருகின்றன.

இந்த நூறாண்டுகளில் எத்தனையோ கவிஞர்கள் பாடலாசிரியர்களாக அறியப்பட்டும் பாராட்டப்பட்டும் இருக்கிறார்கள். ஆனாலும்கூட, தொக்கிநிற்கும் கேள்வியாக இன்றுவரை அது தொடர்வதற்குக் காரணம், உரிய பதிலை ஒருவராலும் சொல்ல முடியவில்லை என்பதால்தான்.

திரைப்பாடல் எழுதப் பல நல்ல நவீன கவிஞர்கள்கூட தயக்கம் காட்டுவதை நானும் அப்படித்தான் புரிந்துகொள்கிறேன். கொடுக்கப்படும் சந்தங்களுக்குத் தக்கவாறு வார்த்தைகளைப் பிரயோகித்து, காட்சிக்கும் சூழலுக்கும் ஏற்ப எழுதுவது சவாலான காரியமென்றே பலராலும் சொல்லப்பட்டு வருகிறது.

என்வரையில் அது, ஒருவிதமான பயிற்சி என்பதைத்தாண்டி வேறு ஒன்றுமில்லை. அப்பயிற்சியை மேற்கொள்வதற்கு நம்முடைய யாப்பிலக்கணத்தைக் கற்பதுதான் ஒரே வழி. வார்த்தைகளை மாத்திரை அளவுகளாகக் கணக்கிடத் தெரிந்துகொண்டாலே திரைப்பாடலை எளிதாக எழுதிவிடலாம்.

ஆனால், அதைக்கூடத் தெரிந்துகொள்ளாமல்தான் இன்றைய நவீன கவிஞர்களில் பலர் கவிதை எழுதி வருகிறார்கள் என்று நான் சொல்லவரவில்லை.

புதுக்கவிதையின் வருகைக்குப்பின் யாப்பிலக்கணமோ சந்தப் பயிற்சியோ இல்லாமல் போய்விட்டதால் திரைப்பாடல் எழுதக்கூடிய கவிஞர்கள் அருகிவிட்டனர். அதைவிட, திரைப்பாடலை ஒரு பொருட்டாகவே கருதவேண்டியதில்லை என்னும் எண்ணமும் பரவியிருக்கிறது.

நுட்பங்களைத் தெரிந்துகொள்ளாமல் அலட்சியப் படுத்துவதில் உள்ள அரசியலை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் விவாதிக்கலாம்.

பாரதியின் கவிதைகளை எடுத்துக்கொண்டால், அவை முழுக்க முழுக்க ஓசை ஒழுங்குகளுடனே அமைந்தவை. கவிதைகளின் முகப்பிலேயே இது இன்ன ராகத்தில் பாடப்பட வேண்டுமெனவும் குறித்திருப்பார். இசையையும் யாப்பையும் கருத்தில் கொண்டு எழுதப்பட்ட அவருடைய கவிதைகள் பலவும் திரைப்பாடல்களாக வந்திருக்கின்றன.

யுகபாரதி
யுகபாரதி

மக்கள் மத்தியில் பாரதியின் கவிதைகள் பரவுவதற்கு அதுவே முக்கிய காரணமென்றும் சொல்லலாம். பாரதி ஒரு கவிதையை இன்ன ராகத்தில்தான் பாடப்பட வேண்டுமெனக் குறித்திருந்தாலும், நம்முடைய இசையமைப்பாளர்கள் அப்பாடல்களை வெவ்வேறு ராகத்தில் மெட்டமைத்துச் சிறப்புச் செய்திருக்கிறார்கள்.

குறிப்பாக, ‘மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்’ எனும் பாடலுக்கு நான்குபேர் நான்கு விதமாக இசையமைத்திருப்பதைப் பார்க்கமுடிகிறது. எஸ்.எம். சுப்பையா நாயுடு, கே.வி. மகாதேவன், சங்கர் கணேஷ், எல். வைத்தியநாதன் ஆகிய நால்வருமே ‘மங்கியதோர் நிலவினிலே’ பாடலுக்கு மெட்டமைத்திருக்கின்றனர்.

இந்த நான்கு மெட்டில் ஒன்றுக்கொன்று குறைந்ததில்லை. கேட்க இனிமையாகவும் பாடலின் பாவத்தை உரிய வகையில் பிரதிபலிப்பதாகவுமே இருக்கின்றன. ‘மனதிலுறுதி வேண்டும்’ என்னும் பாடலை, கே. பாலச்சந்தர் தம்முடைய திரைப்படங்களில் மிகுதியாகக் கையாண்டிருக்கிறார்.

‘சிந்துபைரவி’யிலும் ‘மனதில் உறுதி வேண்டும்’ திரைப்படத்திலும் காட்சிக்கும் கதாபாத்திரத்திற்கும் பொருந்தும் விதத்தில் அப்பாடல்களைப் பயன்படுத்தியிருக்கிறார். பாரதியின் பாடல்களைத் திரைவழியே செவ்வியல் தன்மைக்கு இட்டுச்சென்றதில் அவருடைய பங்கு அலாதியானது.

‘வறுமையின் நிறம் சிவப்பு’ திரைப்படத்தில் ‘தீர்த்தக் கரையினிலே’, ‘நல்லதோர் வீணை செய்தே’ ஆகிய பாடல்களை கே. பாலச்சந்தர் எடுத்தாண்டிருக்கும் அழகைச் சொல்லிக்கொண்டே இருக்கலாம். அந்தமான் கைதி திரைப்படத்தில் ‘காணி நிலம் வேண்டும்’ பாடலும் ‘மணமகள்’ திரைப்படத்தில் ‘சின்னஞ்சிறு கிளியே’ பாடலும் இடம்பெற்றுள்ளன.

இளையராஜாவின் ‘கண்ணம்மா காதலெனும் கவிதை சொல்லடி’ பாடலில், ‘இன்னும் என்னை வெகுதூரம் கூட்டிச்செல்லடி’ என்றொரு வரி வரும். அந்த வரியில் இளையராஜாவின் மொழி மேதைமை வெளிப்படும். ’தூரம்’ எனும் சொல்லை நீட்டிப் பாடியிருப்பார்...

அதேபோல ‘பாரதி’ திரைப்படத்தில் இளையராஜாவும் பாரதியின் கவிதைகளுக்குப் புதுவிதமான மெட்டை அமைத்து, அக்கவிதைகளைக் காவிய தன்மைக்கு உயர்த்தியிருக்கிறார். ‘நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே’ எனும் பாடலுக்கான இசையை விவரித்துத் தனிக் கட்டுரையே எழுதலாம்.

‘பராசக்தி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ பாடல் காட்சிக்குத் துல்லியமாகப் பொருந்திவருவதைக் கவனிக்கலாம். எழுதப்பட்ட கவிதைகளுக்கு மெட்டமைக்கும் முறையே ஆரம்பக் காலங்களில் இருந்திருக்கிறது.

பாடலாசிரியர்க்கு இசைப் பயிற்சியும் இசையமைப்பாளருக்கு மொழிப்பயிற்சியும் இருக்கும்பட்சத்தில், மெட்டுக்குப் பாட்டோ பாட்டுக்கு மெட்டோ சவாலான காரியமில்லை. ஒரு வார்த்தையை மிகச் சரியாக உச்சரிக்கத் தெரிந்த ஒருவருக்கு அவ்வார்த்தையிலேயே இருக்கும் இசையைக் கண்டுபிடித்துவிட முடியும்.

அதேபோல ஒரு சந்தத்திலுள்ள உணர்வைக் கிரகிக்க முடிந்தவர்க்கு அதற்கேற்ப வார்த்தைகளைப் பிரயோகிப்பதிலும் சிக்கலில்லை. சிக்கல் எங்கே வருகிறதென்றால், மொழிப்பயிற்சியும் இசைப் பயிற்சியும் இல்லாதபோதுதான். ‘அதோ அந்தப் பறவைபோல’ என்னும் பாடலில் ‘அதோ’ என்பதை எம்.எஸ்.வி. எப்படிப் பாட வைத்திருக்கிறார் என்பதிலிருந்து நான் சொல்வதைப் புரிந்துகொள்ளலாம். சொல்லிலேயே இசையிருப்பதை உணர்ந்த அவர், ‘அதோ’ என்பதற்குக் கொடுத்திருக்கும் அழுத்தம்தான் திரைப்பாடலின் பால பாடம்.

கண்ணை மூடிக்கொண்டு ஒரு திரைப்பாடலைக் கேட்கும்போது காட்சி பூர்வமாக அவ்வரிகள் விரியுமெனில் அதுவே சிறந்த திரைப்பாடல்.

இளையராஜாவின் எத்தனையோ பாடல்களில் அந்த சுகத்தை அனுபவிக்கலாம். ‘கண்ணம்மா காதலெனும் கவிதை சொல்லடி’ பாடலில், ‘இன்னும் என்னை வெகுதூரம் கூட்டிச்செல்லடி’ என்றொரு வரி வரும். அந்த வரியில் இளையராஜாவின் மொழி மேதைமை வெளிப்படும்.

’தூரம்’ எனும் சொல்லை நீட்டிப் பாடியிருப்பார். தமிழை இசைமொழி என்று நான் திரும்பத் திரும்பச் சொல்வதற்குப் பல பாடல்களை உதாரணம் காட்டலாம். சந்தத்திற்கு ஏற்ப வார்த்தைகளை இட்டுநிரப்பத் தமிழில் தடையே இல்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in