‘‘அடங்கொப்புரானே சத்தியமா நா மாட்டுக்காரன்’’
பசுவும் கன்றும்

‘‘அடங்கொப்புரானே சத்தியமா நா மாட்டுக்காரன்’’

காலங்கார்த்தால கோழி கூப்படறதுக்கு முந்தியே எந்திரிச்சு மாட்டுப் பட்டியத் தொறந்து, கொரக் கூடைய எடுத்து சாணியெல்லாம் வழிச்சு, தண்ணி புடிச்சு ஊத்தி, மாடு, கன்னெல்லாம் தேங்காய் நார்க் கதம்பை போட்டு தேய்ச்சு கழுவி...

பால் கறக்கற குண்டாவுல தண்ணியெடுத்து விளக்கெண்ணெய் கிண்ணத்தையும் தயாரா வச்சு, பால்காரன் வர்றதுக்காக காத்திருந்து, அவன் வந்தவுடனே பசு மாட்டுங்கன்னை புடிச்சு பால்குடிக்க உட்டு...

மடியில பால் சுரப்பு வந்துடனே கன்னுக்குட்டிய மாடு நக்கறாப்பல எட்டப் புடிச்சுக் குறுக்கக் கட்டி, மாட்டு மடியில தண்ணியடிச்சு கழுவி, எண்ணெய் உட்டு மடியத் தடவி, கன்னுக்குட்டிய உட்டுட்டு திரும்பி தன்னையே பறக்கப் பறக்க பார்க்கிற மாட்டை தாஜா பண்ணி...,

ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும் மடக்கி காம்புகளை இழுத்து, ‘சொர், புர்ர்ன்னு’ பால் கும்பாவுல பீச்சற முசுவுல உதை வைக்கிற மாட்டுக்கிட்ட தப்புச்சு, அதையும் மீறி கால்பட்டு குண்டா ஒரு பக்கம், தானொரு பக்கம் உழுந்து...

ஆத்திரமும் எரிச்சலுமா, ‘அட கூறு கெட்ட கர்மமே, வக்கிப்பில்லும், டில்லிகிராஸூம் பருத்திக் கொட்டை புண்ணாக்கும் நொப்பமா துணிச்சுத்துணிச்சுக் கொடுக்குறப்ப சப்பிச்சப்பி துன்னுட்டு இப்ப உதையா உடறே உதை!’ன்னு அதை சோளத்தட்டாலயே நாலு சாத்து சாத்தி, அது குதிச்சுக்குதிச்சு அடங்கின பின்னால, மறுபடி மடியக் கழுவி மறுபடி தாஜா பண்ணி...

கும்பாவை ரெண்டு தொடையிடுக்குல வச்சு சொர்புர்ர்ன்னு பாலை கறந்தெடுத்து, இப்படி ஒரு மாடா, ரெண்டு மாடா, பட்டி பெருக்க, கன்னுக திறக்க அத்தனையிலும் கறந்த பாலையெல்லாம் ஒரு கையில தூக்கிட்டு, மறுகையில கன்னுக் குட்டியை அவுத்து மாட்டு மடிக்கு உட்டுட்டு...

நொரை ததும்பி அசையாம நிக்கிற பால்ல முக்காவாசி பாலை பால்காரனுக்கு ஊத்தி, மீதிப் பாலை சொம்பைத் தூக்கிட்டு வர்ற சனங்களுக்கு வச்சுட்டு, மாடு கன்னெல்லாம் புடிச்சு வெளியில கட்டி, மறுபடி கட்டுத் தரையெல்லாம் தண்ணி உட்டுக் கூட்டிக் கழுவி...

காடிப் பொட்டி நிறைய வக்கிப்புல்லு போட்டு, சோளத்தட்டு நறுக்கிப் போட்டு, கொஞ்சம் டில்லிகிராஸூ, கரும்புத்தோகையும் ரொப்பி, மறுக்காவும் மாடுகளை புடிச்சு காடிப் பொட்டி முன்னால கட்டி வச்சுட்டு...

ஊட்டுக்குள்ளே பூந்து அடுப்புல நிறைஞ்சு கிடக்கிற எருச்சாம்பலை முன்னாடியும், பின்னாடியும், ஓவுக்குள்ளேயும் சாங்கிய சாம்பலை கொஞ்சமா அடுப்புக்குள்ளேயே உட்டுட்டு, கொரக்கூடையில வழிச்செடுத்த சாம்பலை குப்பைக் குழியில கொட்டிட்டு...

ஒரு கும்பாவுல சாணியக் கரைச்சு அடுப்பை மேலயும், கீழயும், அல்லையிலும் விரல் வரி பதிய வழிச்சு உட்டு நாலு புள்ளிக் கோலம் போட்டு, ரெண்டு முள்ளு விறகு, நாலு காஞ்ச எருவுகளை அடுப்புக்குள்ளே சந்துட்டு வச்சு...

கொஞ்சமா சீமெண்ணெய ஊத்தி அடுப்பு பத்த வச்சு நெருப்பு புடிச்சவுடனே, ஒரு போசிய வச்சு வூட்டுக்களவா பாலை காய்ச்சி, அதே அடுப்புல முன்னால பருப்புக்கும், ஓவுல சோத்துக்கும் சட்டிய வச்சு தீயை தள்ளி வுட்டுட்டு நிமிர்றதுக்குள்ள டெக்ஸ்டூல் ஆறரை மணி உசுலும், ஆறேமுக்கால் மணி கஸ்தூரி மில் உசுலும் அடிச்சு ஓய்ஞ்ச நேரத்துக்குள்ளே...

வர்ற சனங்களுக்கு கால் லிட்டர், அரை லிட்டர்ன்னு பால் அளந்தூத்தி, ‘போன மாசக்கணக்கு இத்தினி, இந்த மாசக்கணக்கு இத்தினி, இந்த வாரக்கணக்கு இத்தினின்னு அவங்களுக்கு கணக்கு சொல்லி வாங்கி, அதுக்குள்ளே நாலு தடவை ஊட்டுக்குள்ளே ஓடி அடுப்பு விறகை தள்ளி உட்டு...

எருவை புட்டு வச்சு, வூட்டு வாசலுக்கு சாணித்தொளி போட்டு, ஆறே முக்காலுக்கு மில்லுக்கு கிளம்பற புருஷனை தாட்டி உட்டு , குப்பற அடிச்சுத்தூங்கற அக்காவை நாலு உதை விட்டு எழுப்பி...

காலங்கார்த்தால பொட்டைப் புள்ள தூக்கத்தை பாரு. இப்படி தூங்கினா பூடை புடிச்சுக்கும் போற ஊடு விளங்கிடும்!’ன்னு கரடியா கத்தி, ‘டேய் சின்னவா பெரியவா எந்திரிச்சு வாங்கடா!’’ன்னு கூப்பிட்டு எழுப்பி எல்லாருக்கும் காபி போட்டுக் கொடுத்துட்டு...

மறுபடி மாங்கு, மாங்குன்னு கட்டுத்தறிக்குள்ளே போயி, வெளியில வந்து கொரக்கூடையில அங்கே இங்கே இருக்கிற சாணியெல்லாம் குட்டா போட்டு, ஆளாளுக்கு அதை உருண்டை புடிச்சு, வராட்டி எருவு தட்டி ஒரு ஆள் உருண்டை புடிக்க, ஒரு ஆள் வராட்டி எருவு தட்ட, இன்னொரு ஆள் அத்தனை எருவையும் ஓட்டக் கூரையில எடுத்து காயப்போட பச்சு, பச்சுன்னு பொழுது உச்சிக்கு ஏறிட...

எல்லாருக்கும் சோறு போட்டு, பள்ளிக்கூடம் துரத்தி உட்டு, மத்தியான பெரியவன்கிட்ட டிபன்போசியில அப்பனுக்கு சோறு கொடுத்துட்டு, மத்தியானம் சோத்துக்கு வரும்போதும், சாயங்காலம் பள்ளிக்கூடம் உட்டு வரும்போதும் கூட மாடு கன்னை புடிக்க, கட்ட, சாணி வழிக்க, கொட்ட, சோளத்தட்டு தரிச்சுப்போட வக்கிப்பில் அள்ளிப்போட, பருத்திக் கொட்டை ஊறப்போட்டு ஆட்டி எளங் கன்னு கறவைக்கு வைக்க...

மில்லு உட்டு வர்ற அப்பன் அப்படியே போய் சைக்கிள்ல அம்பாரமா கட்டீட்டு வர்ற டில்லிக் கிராஸை தாங்கி எடுத்து தாவித்தாவி கட்டுத்தறியில கொண்டு போய் வைக்க, சாயங்காலம் வர்ற பால்காரனுக்கும், சனங்களுக்கும் காலையில மாதிரியே பால்கறந்து ஊத்தி ஊத்தி, மிச்சமிருக்கிற பாலை மறுபடி காய வச்சு உறை ஊத்தி வச்சு, அடுத்தநாள் தயிராக்கி, சிலுப்பி மோராக்கி, வெண்ணெயாக்கி...

இங்கே மாடுதான் பாடுபடுதா, மாடா அம்மா பாடுபட்டாளான்னு தெரியாத வயசு அது. ஒரு ஊர் சேரி போக முடியாது. நல்லது கெட்டதுக்கு போனா நிக்க முடியாது.

‘அய்யோ மாடு இருக்கு. பால் கறக்கணும். மேவு போடணும். ஒரு வேளை பால் கறக்காம வுட்டா மடி வீங்கி பண்டுதம் பாக்கணும், நா வாரேனாத்தா’ ன்னு ஒரே ஓட்டம்தான்.

மழை வந்தா தூத்தல் போட்டு ஓடி, ஓடி ஓட்டு மேல ஏறி அரைகுறையா காய்ஞ்ச எருவை எடுத்து சாக்குப் பையில வச்சு அடுக்கணும். அடுத்த நாள் அதை வாசலில் வச்சு காயப்போடணும். காய்ஞ்ச எருவுகளை வர்றவங்களுக்கு அடுப்பெரிக்க பைசாவுக்கு ஒண்ணு கொடுக்கணும்.

சாணி எக்கச்சக்கமா மலை மாதிரி தேங்கிட்டா புழுவா ஊறும். அதோட அதை மரப்பொட்டு போட்டு தட்டி எடுக்கணும். மாடு ஈத்தெடுத்துட்டா அவ்வளவுதான். அது கன்னுப் போடறதை பண்டுதம் பார்க்கிறதென்னா, சோளக்கூழ் காய்ச்சி வைக்கிறதென்னா, சீம்பால் கறக்கிறதென்ன, ஊடு, ஊடா எல்லாருக்கும் கொடுக்கிறதென்ன?

பொங்கல் வந்துட்டா.. சொல்லவே வேண்டாம். அத்தனை மாடுகளையும் ஆத்துக்கு ஓட்டீட்டு போற வேகம், குளிக்க வைக்கிற கரிசனம், ராத்திரி பொங்க வச்சு தளுவுச்சோறு மாட்டுக்கு இலையில வச்சு கொடுக்கிறதுக்குள்ளே தாவு கழன்றுடும்.

ஆயிரந்தான் செஞ்சாலும் அதோ கொம்புக்கு பெயின்ட் வாங்க காசிருக்காது. கைக்கும் வாய்க்கும் அடிதடிதான். காவிப் பொடிய கரைச்சு கொம்புக்கு தடவி, அதுல வெண்புள்ளி, கரும்புள்ளி வச்சு.. மூஞ்சிக்கு மஞ்சப்பூசி, சந்தனப் பொட்டு வச்சு, இதுல எல்லாம் முழுசா கலந்து நின்ன அம்மாவை இப்ப நினைச்சாலும் மலைப்பாத்தான் இருக்கு.

அம்மா கூட நாங்களும் ஓடி, ஓடி மாட்டுக்காகவும், மாட்டை வச்சு நம்மளுக்காகவும் உழைச்ச உழைப்பை நினைச்சா அடங்கொப்பரானேன்னு இருக்கு. பட்டி நிறைஞ்சு பத்து மாடு வளர்த்தின அந்தக் காலத்துல கூட கஷ்டம் தெரியலை. இன்னெய்க்கு ஒத்தை மாடு வளர்த்தோணும்ன்னா அயற்சியா இருக்கு. மாடா, அய்யோ அது யாரைக் கொண்டு ஆவறது?

இப்பவும் அன்னெய்க்கு அம்மாவைப் போலவும், எங்களைப் போலவும் மாட்டுக்கூடவே நின்னு மாடா உழைச்ச மனுசங்களை பார்க்கும்போதெல்லாம் மனசு எளக்கமா எளகிடறதுதான் நிஜம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in