’லாபம்’ மீட்ட நினைவுகள்

இயக்குனர் எஸ்பி ஜனநாதன்
இயக்குனர் எஸ்பி ஜனநாதன்

‘லாபம்’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு நெகிழ்ச்சியுடன் முகநூலில் தனது நினைவலைகளை பகிர்ந்திருந்தார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் சி.மகேந்திரன்:

புயலின் வேகம் கொண்டு, மாற்றங்களை நிகழ்த்தும் கம்யூனிஸ்டுகளின் போராட்ட நுட்பங்கள் புகழ் பெற்றவை. உலக அளவில் பரிசோதிக்கப்பட்டவை. ஆனால், அது காலந்தோறும் நிகழ்ந்து வரும் மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். எந்த இடத்திலும் எங்கும் தேங்கி நின்றுவிடக் கூடாது. இதை மாபெரும் உரையாடலாக நிகழ்த்துகிறது ‘லாபம்’ என்னும் திரைப்படம்.

திரைப்படத்தின் இயக்குனர் எஸ்பி ஜனநாதன். அவரை முதலில் ஒரு திரைப்பட பயிற்சியில் தான் சந்தித்தேன். நானும் அதில் பயிற்சி பெற்றேன். 25 ஆண்டுகள் கழிந்து விட்டன. அது மும்பையில் நடைபெற்றது. எடிட்டர் லெனின் தமிழகத்தில் இதற்கான ஒழுங்கமைவைச் செய்திருந்தார். கலந்து கொண்டவர்களில் ஓவியர் மருது முக்கியமானவர். அதில் துடிப்பு மிகுந்த இளைஞர் ஜனநாதன். ஒரு வாரம் ஒன்றாகத் திரைப்படங்களில் பயணம் செய்தோம். அதன் பின்னர் எத்தனையோ சந்திப்புகள். பொதுவுடைமை இயக்கத்தைத் தமிழகத்தில் வேர்விட்டு வளர, நடத்திய உரையாடல்கள். மரணம் அவரது உயிரைப் பறித்துக் கொண்ட ஒரு நண்பகலில், அவரது உயிரற்ற உடலைப் பார்த்தேன். இவை எல்லாம் அடுக்குத் தொடர் போல் ஞாபகத்திற்கு வந்தன. என்னை அறியாமலேயே கண்ணீர் துளியாய் தோன்றி, கண்களில் ததும்பி நின்றன.

’லாபம்’ ஒரு மகத்தான காவியப் படைப்பு. மாக்சிம் கார்க்கியின் தாயைப் போல ஒவ்வொருவரும் குறிப்பாக விவசாய சங்கத் தலைவர்கள் எப்படி இன்றைய கார்ப்பரேட் எதிர்ப்புப் போராட்டத்தில் போராட வேண்டும் என்ற முன்மொழிவை முன் வைக்கிறது. கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கு எதிராகக் கூட்டுப் பண்ணை விவசாயத்தை வற்புறுத்துகிறது.

திரைப்படம், கூட்டு விவசாயப் பண்ணையை உருவாக்குகிறது. பண்ணைக்கு சூட்டப்பட்ட பெயர் நம்மைப் பெரிதும் கிளர்ச்சியுற வைக்கிறது. அந்தப் பெயர்தான் புகழ்மிக்க கம்யூனிஸ்ட் தலைவர் பி.எஸ் சீனிவாச ராவ்.

காரல் மார்க்ஸ் பல்லாண்டுகள் உழைத்து உருவாக்கிய வரலாற்றைப் புரட்டிப்போட்ட நெம்புகோல் தான், மூலதனம் என்னும் நூல். சுரண்டலிலிருந்து கிடைக்கும் ’உபரி’யை விஞ்ஞானப் பூர்வமாக விளக்குகிறார். இதை லாபம் என்ற பெயரில் மிகவும் எளிமையாக விளக்கி விடுகிறார் ஜனநாதன். இதை வேறு யாராலும் செய்திருக்க முடியாது. படைப்புக் கலைஞர் ஒருவரால் தான் செய்ய முடியும்.

மன்னார்குடி கலைக் கல்லூரியிலும், திருவாரூர் கல்லூரியிலும் எனது அரசியல் தீவிரம் கொண்டது. அந்தப் போர் குணம் மீண்டும் மனதில் பிறந்ததை போலத் திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் உணர்ந்தேன். வாழ்க ஜனநாதனின் புகழ்.

இந்த திரைப்படத்தில் மற்றொரு மகிழ்ச்சி. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர், மேனாள் சட்டப் பேரவை உறுப்பினர் தோழர் கோ. பழனிச்சாமி அவர்களுடைய மகன், அருமை இளவல் பாரதி. போராட்டக் களத்தில் கதாநாயகன் விஜய சேதுபதியோடு பங்கேற்று நடித்துள்ளார்.அவர் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் என் மனதில் மகிழ்ச்சி பெருக்கெடுக்க வைத்தது.

தஞ்சை சாந்தி கமலா திரையரங்கில், தம்பி சந்திர குமார், தம்பி மகன் மாணவர் மன்ற தஞ்சை மாவட்டப் பொறுப்பாளர் மருத்துவர் சுதந்திர பாரதி, பொறியாளர் ஹரி ஆகியோரோடு பார்த்தேன்.

என் தோழன் ஜனநாதனை மரணம் அழைத்துக் கொண்டு நம்மை துயரப்படுத்திவிட்டது. அவரது புரட்சி படைப்பு அவருக்கு மரணம் இல்லை என்று அறிவித்து, எதிர்காலத்திற்கான புரட்சிகர புதிய கருதுகோள் பற்றி நம்மைச் சிந்திக்க வைத்து விட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in