மனதின் மாற்றங்களே ஏற்றங்கள்!

மனம் திறக்கும் மனிதர்கள்
மனதின் மாற்றங்களே ஏற்றங்கள்!

‘தமிழினி புலனம்’ என்ற வாட்ஸ் அப் குழுவில் ’மனதின் மாற்றங்களே ஏற்றங்கள்’ என்ற தலைப்பின்கீழ், தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டிருந்தது. அதன் அங்கத்தினர்கள் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டிருந்தனர். மனதின் மாற்றங்கள் எப்படி ஏற்றங்களைத் தந்தன என்பதை அக்குழு வாசகர்கள் எழுதியிருந்தனர். அதில் சில சிந்தனைகள் காமதேனு வாசகர்களுக்காக...

இரஞ்சிதபிரியா
இரஞ்சிதபிரியா

மனதை முழுமையாக தயார்படுத்திக் கொள்ள வேண்டும் – ரஞ்சிதப்பிரியா காங்கேயம்

நாம் செய்யும் வேலையிலும்,தொழிலிலும், இவ்வளவு ஏன்... நாம் செல்லும் பாதையில் கூட அவ்வப்போது எத்தனையோ மாற்றங்களை கடந்துதான் செல்ல வேண்டி இருக்கிறது. ஆனால், என்னவோ உறவுகளிடமும் நட்புகளிடமும் ஏற்படக்கூடிய சிறு மாற்றத்தைக் கூட நம்மால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை.

இந்த உலகம் மாற்றத்தை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்காது, போராட வேண்டும். முதலில் நம் மனம் தயாராக இருந்தால் மட்டுமே சமூகத்தை எதிர்கொள்ள முடியும். மாற்றம் எப்பொழுதும் நம்மில் இருந்து தொடங்குவதே சிறப்பு. நம்மால் மாற்ற முடியாத ஒன்றை பிறரிடமிருந்து எதிர்பார்ப்பது மாபெரும் முட்டாள்தனம்.

முதலில் இந்தச் சமுதாயம் உன் மாற்றத்தை பார்த்து முட்டாள் எனக் கூறும். பின்பு உன்னைக் கேலி செய்யும். உன்னை எதிர்த்து போராடவும் செய்யும். பிறகு, நான் அன்றே சொன்னேன். இது மாற்றத்திற்கான வழி என்று உன்னிடமே கூறும்.

எனவே, எந்த ஒரு காரியத்தை தொடங்கும் முன்பும், எந்த ஒரு மாற்றத்தையும் வரவேற்கும் முன்பாக, நம் மனதை முழுமையாக தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அதுவே ஏற்றத்திற்கான வழி வகையாக இருக்கும்.

சுபாஷ் சந்திரபோஸ்
சுபாஷ் சந்திரபோஸ்

மாறுவதற்கு மனதில் வேண்டும் விருப்பம் -

சி. சுபாஷ்சந்திரபோஸ் - துணை காவல் கண்காணிப்பாளர், தஞ்சாவூர்

காதலுக்குள்ளே வாழ்வை உருவாக்கியது மாற்றம்

கருவுக்குள்ளே சிசுவாய் மாறியது மாற்றம்

சிசுவுக்குள்ளே சிறுவனாய் வளர்ந்தது மாற்றம்

சிந்திக்கும் மனிதனாய் செதுக்கியது மாற்றம்

குழந்தைகளுக்கு கல்வியை தருவது மாற்றத்தின் ஏற்றம்

குடும்பத்தில் உழைப்பை கொடுப்பது மாற்றத்தின் ஏற்றம்

படிப்பைப் பதவியாக்குவது மாற்றத்தின் ஏற்றம்

பகுத்தறிவைப் பக்குவப்படுத்திக் கொண்டது மாற்றத்தின் ஏற்றம்

சிக்கிமுக்கியால் சிந்திக்க வைத்தது மாற்றத்தின் ஏற்றம்

சிறிது சிறிதாக விஞ்ஞான காலமானது மாற்றத்தின் ஏற்றம்

மாறுவதற்கு மனதிற்குள் வேண்டும் விருப்பம்

மனிதம் வளர்ந்திட இதுவே திருப்பம்.

பபிதா
பபிதா

மனதில் பாதிப்பில்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்

- பபிதா, அரசுப் பள்ளி ஆசிரியை, உதகை

மாற்றம் ஒன்றே மாறாதது. நல்ல மாற்றத்தால் ஏற்றம் அடையலாம். மாற்றம் மாறாமல் இருக்கலாம், அந்த மாற்றத்தினால் ஏற்படும் நிகழ்வுகள் மாறிக்கொண்டேதான் இருக்கின்றன. நமது அணுகுமுறையில் நல்ல மாற்றத்தினை கொண்டு வந்தால், அதன்மூலம் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான ஏற்றத்தைப் பெறமுடியும். நம்முடைய குறிக்கோள் தெளிவானதாகவும் வலிமையானதாகவும் இருந்தால் மட்டுமே, அதை அடைவதற்கான மாற்றங்களை நம்முள் கொண்டுவரமுடியும்.

மாறுபட்ட பல சூழ்நிலைகளுக்கு நடுவே நமது குறிக்கோளை நோக்கிப் பயணித்துக் கொண்டு இருக்கிறோம். எந்தச் சூழலிலும் நமது பயணத்தில் எவ்வித பாதிப்பும் வராதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். எது நடந்தாலும் காலத்திற்கு தகுந்தாற்போல் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை நாம் வளர்த்துக் கொண்டால், அனைத்து மாற்றங்களும் ஏற்றத்தைத் தரும். மனதின் நல்ல மாற்றங்கள் என்றுமே ஏற்றத்தைத் தரும்.

ஜாஹிர் உசேன்
ஜாஹிர் உசேன்

மனதின் மாற்றங்களே ஏற்றங்கள் -

- ஜ. ஜாஹிர் உசேன், மென் பொறியாளர், சவுதி அரேபியா

"எல்லாவற்றிற்கும் மனசு தான் காரணம். முடியும் என்றால் முடியும்." இதை எங்கோ படித்து விட்டு, அதுபோல் நடக்கலாமே என்று முடிவும் எடுத்து, களத்தில் இறங்கினேன். கல்லூரிக்காலத்தில். அது இன்றும் தொடர்கிறது.

சின்னச் சின்ன விஷயங்களில் ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாய் பெரிய விஷயங்களுக்கு மாறி, பலமுறை வெற்றியும், சிலமுறை தோல்வியும் கண்டிருக்கிறேன்.

இந்தப் பழக்கம், நல்லவிதமாகவே என் வாழ்க்கைக்கு பயன்பட்டுக் கொண்டு இருக்கிறது. குளிர் பிரதேசங்களில் ஸ்வெட்டர் இல்லாமல் வாழ்வது, குளிர்ந்த நீரில் குளிப்பது என் மனதில் வழக்கத்தை மாற்றிப் பழக்கத்தை பழகிக்கொண்டுள்ளேன். இளம் வயதில், நான்வெஜ் வெளுத்துக்கட்டும் நான், திருமணத்திற்கு சில மாதங்களுக்கு முன்னால், வெஜ்ஜிற்கு மாறினேன். மனதை திடப்படுத்திக் கொண்டால், முடியும் என்று பல விஷயங்களை இப்படிச் செய்து பார்க்க முடிந்தது.

நாம் நினைத்தால், மனதை திடப்படுத்தினால், மாற்றங்களை நம்மில் கொண்டு வர முடியும். நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்தினால், வாழ்வில் ஏற்றம் பெறலாம்.

மரு.பாலசுப்ரமணியன்
மரு.பாலசுப்ரமணியன்

மாற்றம் ஏற்போம் – மருத்துவர் பாலசுப்ரமணியன்,

உடலியங்கியல் துறைத் தலைவர் (ஓய்வு), சென்னை மருத்துவக்கல்லூரி

எத்தனை எத்தனை மாற்றங்கள்!

தோற்றங்களில், ஏற்றங்களில்!

எண்ணங்களில், வண்ணங்களில்!

காலங்களில், கோலங்களில்!

பாசங்களில், நேசங்களில்!

பாதைகளில், போதைகளில்!

காதல்களில், மோதல்களில்

பாவங்களில், கோபங்களில்!

உழைப்பதில் பிழைப்பதில்!

உண்ணுவதில், உறங்குவதில்

மனங்களில், மணங்களில்!

வாழ்வதில் வீழ்வதில்!

அனைத்திலும் மாற்றம்

அளவில்லா மாற்றம்!

மாற்றங்கள் என்பது

ஏற்றங்களா? ஏமாற்றங்களா?

வளர்ச்சியா? வீழ்ச்சியா?

இன்பங்களா? துன்பங்களா?

விருப்புகளா? வெறுப்புகளா?

விடைகாணா வினாக்கள்,

முடிவில்லா முடிச்சுகள்!

மாற்றங்கள் ஒன்றே மாறாதது!

தீராதது! முடியாதது! முடிவானது!

மாற்றம் ஏற்போம்! மாற்றம் தவிர்ப்போம்!

Related Stories

No stories found.