ஆளுநருக்கு எதற்கு 165 ஏக்கர் நிலம்?

சீறுகிறார் சிறுத்தை சிந்தனை செல்வன்
சிந்தனை செல்வன்
சிந்தனை செல்வன்

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தை ஆளுநருக்கு பதிலாக மாநில அரசே நியமிக்க வகைசெய்யும் மசோதா மீதான விவாதத்தில் சட்டப் பேரவையில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன், ’’ஆளுநர் மாளிகையை காலிசெய்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். ஆளுநருக்கு பசுமைவழிச் சாலையில் குடியிருப்பு ஒதுக்க வேண்டும்” என்று கடுமையாகப் பேசினார். திமுகவே யோசிக்காத இப்படி ஒரு கருத்தை சிந்தித்த சிந்தனை செல்வனிடம் இது குறித்தும், வேறு சில பிரச்சினைகள் குறித்தும் பேசினோம். இனி அவரது பேட்டி...

ஆளுநர் மாளிகையை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற உங்கள் பேச்சு எதை நோக்கியது?

குடியரசு மலர்ந்து 75 ஆண்டுகள் முடியப்போகிறது. நீண்டகால காலனி ஆதிக்க மரபுகளை இன்னமும் பின்தொடர்ந்து வருகிறோம். அந்த மரபுகளிலிருந்து நம்மை மெல்ல மெல்ல விடுவித்துக்கொண்டு முழுமையான குடியரசாக மாறவேண்டிய தேவை இருக்கிறது. அந்த அடிப்படையில் மாநில அரசுக்கும், மைய அரசுக்கும் இடையிலான உறவு என்பது எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து நீண்ட காலமாக விவாதங்கள் இருந்து வருகிறது. தற்போதைய சூழலில் ஆளுநர் என்கிற பொறுப்பு தேவையில்லை என்ற கருத்து வலிமை பெற்றிருக்கிறது.

அரசியல் சாசனத்தின் விழுமியங்கள் பாதுகாக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பு தான் ஆளுநருக்கு இருக்கிறதே தவிர, அரசின் கொள்கைகளை முடிவுகளில் அவர் ஒருபோதும் தலையிடக் கூடாது என்பதுதான் விவாதங்களில் கிடைத்திருக்கிற பதில்.

ஆனால், ஆளுநர் என்ற அதிகாரத்தை பயன்படுத்திக்கொண்டு தமிழக அரசின் எல்லாவிதமான கொள்கை முடிவுகளுக்கும் முட்டுக்கட்டை போடுகிறவராக மட்டுமே ஆளுநர் இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அந்த கொள்கை முடிவுகளுக்கு நேர் எதிரான பிரச்சாரத்தை மேற்கொள்கிறவராகவும் அவரின் செயல்பாடுகள் இருக்கிறது. கடந்த காலங்களில் வெறுமனே முட்டுக்கட்டை போடுகிறவர்களாக ஆளுநர்கள் இருந்தார்கள். ஆனால், இப்போது நேரெதிரான பிரச்சாரத்தையும் வெளிப்படையாக நடத்துகிற மோசமான அணுகுமுறை ஏற்பட்டிருக்கிறது. அதனால் ஏற்கெனவே பேசப்பட்ட உரையாடல்கள் இப்போது இன்னும் கூர்மையாகி இருக்கிறது.

ஆளுநருக்கு எதற்கு 165 ஏக்கர் நிலம், நூற்றுக்கணக்கான கட்டிடங்கள். இரண்டு இடங்களில் தோட்டம், பங்களாக்கள் என்ற கேள்வியை எழுப்புகிற நிலைக்கு ஆளுநரின் தற்போதைய நடைமுறைகள் இருக்கின்றன. இதெல்லாம் காலனி ஆதிக்க நடவடிக்கைகளின் தொடர்ச்சிதான். ஆளுநர் என்ற பதவி மாநில சுயாட்சிக்கும், கூட்டாட்சிக்கும் எதிரானதாக இருக்கிறது. அதனால் ஆளுநர் என்கிற பொறுப்பே தேவையில்லை என்பதில் விசிக உறுதியாக இருக்கிறது.

மத்திய அரசு தான் ஆளுநர்களை வைத்து மாநிலங்களுக்கு கடிவாளம் போடுகிறது. தற்போது மத்தியில் பாஜக மிருக பலத்துடன் ஆட்சியில் அமர்ந்திருக்கும் நிலையில், நீங்கள் சொல்வதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமா?

ஜமீன்தாரினி முறை, கிராம மணியம் முறை ஆகியவை மாற்றப்பட்டது. நீலகிரியில் இருந்த கேரள ஜமீன்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு சொத்துரிமை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்கிறவர்களுக்கு முன்னுரிமை, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதெல்லாம் நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கிறது. அதனால் இதுவும் சாத்தியமே.

அதேசயம், இதுபோன்ற முற்போக்கான திட்டங்களுக்கு எதிர்ப்புகள் வருவது என்பது இயல்புதான். ஆனால், அதைக்கடந்து உண்மையான சமூகநீதிக்கான பயணத்தில் தமிழகம் எப்போதுமே வெற்றி கண்டிருக்கிறது. ரவி என்ற தனிநபரை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆளுநர் என்கிற அந்த அடையாளத்தைத்தான் எதிர்க்கிறோம். இதை வெறும் நிலத்தை கையகப்படுத்தும் விஷயமாக மட்டும் பார்க்கவில்லை. ஆளுநர் அரசமைப்பு சாசனத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் அல்லது ஆளுநர் பொறுப்பு இந்த 75 ஆண்டுகால ஜனநாயகப் பயணத்துக்குப் பிறகு இந்த நாட்டுக்கு தேவையில்லை என்பதுதான் எங்கள் கருத்து.

இதே விஷயத்தில் திமுக மென்மையான அணுகுமுறையைக் கடைபிடிக்கிறது. ஆனால், விசிக கடுமையான மோதல் போக்கைக் கடைபிடிக்கிறது. திமுக தன்னுடைய கூட்டணிக் கட்சிகளைப் பயன்படுத்தி ஆளுநருக்கு தனது எதிர்ப்பைக் காட்டுகிறது என்று சொல்லலாமா?

விசிக எப்போதுமே தனக்கான சொந்தக் கருத்தியலின் வலிமையில் காலூன்றி நிற்கிறது. தலைவர் திருமா சனாதனத்துக்கும், மேலாதிக்கத்துக்கும் எதிரான கருத்தில் எப்போதும் முதல் ஆளாக இருந்திருக்கிறார். எந்தச் சூழலிலும் சனாதனத்துக்கும், ஆதிக்கத்துக்கும், சுரண்டலுக்கும் எதிரான முதல் குரலை விசிக முன் வைத்திருக்கிறது. அந்த அடிப்படையில்தான் இதையும் எடுத்துக் கொள்ளவேண்டும்.

நேரடி பாதிப்புக்குள்ளாவது ஆட்சியில் இருக்கும் திமுக தானே... அப்படி இருக்கையில் எதற்காக விசிக இவ்வளவு வேகம் காட்டுகிறது என்பதுதான் என் கேள்வி?

இந்தக் கருத்தை மறுக்கிறேன். இது திமுகவுக்கானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்துக்கு எதிரான விஷயம். உதாரணத்துக்கு, நீட் தேர்வு விலக்கு மசோதாவை கிடப்பில் போட்டு வைத்திருப்பதால் திமுகவுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுவிடும்? அது அரசியல் சாசனத்தின் விழுமியங்களுக்கு ஏற்படுத்தப்படுகிற சவால்.

தமிழகத்துக்கான விஷயம் என்கிறீர்கள். ஆனால், ஆண்ட அதிமுக இதில் திமுக அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் அல்லவா இருக்கிறது.

அரசை வழிநடத்தக்கூடிய ஒரு கட்சி தனக்குரிய வரம்புகளிலிருந்து இயங்கவேண்டிய ஒரு தேவையிருப்பதாகவே நான் பார்க்கிறேன். ஒன்றுக்கொன்று எதிரானதாக புரிந்து கொள்ளவேண்டியதில்லை. அதிமுகவுக்கும் உடன்பாடான ஒரு விஷயமாகத்தான் இதை நான் பார்க்கிறேன்.

அப்படியானால் துணைவேந்தர் நியமன மசோதா தாக்கலான போது அவர்கள் ஏன் வெளிநடப்புச் செய்ய வேண்டும்?

துணைவேந்தர் நியமன மசோதாவை எதிர்த்து அவர்கள் வெளியேறவில்லை. மாறாக, ஒரு அமைச்சர் எதையோ கூறிவிட்டார் என்று சொல்லி வெளிநடப்பு செய்தார்கள். அதனால் இந்த மசோதாவில் அவர்களுக்கு உடன்பாடு இருப்பதாகத்தான் பொருள். அந்த கட்சியைச் சேர்ந்த செங்கோட்டையன் திராவிடம் தான் ஆளும் என்ற கருத்தை அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறார். அதனால் அதிமுகவுக்கும் இதில் உடன்பாடு இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம்.

பாஜக மீது விசிகவுக்கு அப்படி என்னதான் கோபம்,,, தொடர்ந்து அக்கட்சியுடன் கடுமையான மோதல் போக்கைக் கடைபிடிப்பது ஏன்?

பாஜகவை மோடி - அமித்ஷா கூட்டணிக்கு முன்பு, பின்பு என இருவேறு காலகட்டங்களாக பிரித்துக் கொள்ளலாம். இந்திய அளவில் எப்படியோ தெரியாது. ஆனால், தமிழ்நாட்டு சூழலைப் பொறுத்தவரை பாஜகவை தலைமையேற்று வழிநடத்திய இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை போன்றவர்கள் விசிகவிலிருந்து 100 சதவீதம் மாறுபட்ட கருத்தியலைக் கொண்டவர்கள். பாஜகவுடைய ஆழமான கொள்கையைப் பின்பற்றியவர்கள்தான். ஆனால் அதேசமயத்தில் மாற்றுக் கருத்துக் கொண்டவர்களுடனான அவர்களது அணுகுமுறை மிகவும் கண்ணியமானதாக இருந்தது. மாறுபட்ட கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறவர்களாகவும் அவர்கள் இருந்தார்கள்.

ஆனால் இன்றைய பாஜக மெல்லமெல்ல உருமாறத் தொடங்கி, விமர்சனங்களுக்கு பதிலாக அவதூறுகளையும், கருத்துக்களுக்குப் பதிலாக அபாண்டங்களையும் அள்ளி வீசுகிறது. அப்பட்டமான பொய்யையும், அபாண்டங்களையும் ஒரு அரசியல் கருவியாக மாற்றக்கூடிய மோசமான வடிவத்தை பாஜக எடுத்திருக்கிறது. ஏற்கெனவே இருந்த பாஜக நண்பர்கள் தன்மையுள்ள தனிநபர்களாக இருந்தார்கள். ஒழுக்கமான பின்னணியில் இருந்து வந்தவர்களாக இருந்தார்கள். கொள்கையில் மாறுபட்ட கருத்துக்களையெல்லாம் அவர்களுடன் பேச முடியும். அதனால் சமூகத்தில் அவர்களுக்கென ஒரு மரியாதை இருந்தது.

ஆனால் இன்றைக்கோ, மிக மோசமான கிரிமினல்களை கட்சிக்குள் கொண்டுவந்து குவித்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க கிரிமினல்களின் கூடாரமாக பாஜக மாறியிருக்கிறது. பாஜக என்பது ஒரு கட்சியே இல்லை. வன்முறைகளையும், வெறுப்பையும் தலையில் சுமந்துகொண்டிருக்கிற ஒரு கட்சியாகவே பாஜகவை பார்க்கிறோம். அதனால் அதனை எதிர்க்கிறோம். அரசியல் ரீதியான கட்சிகளோடு எப்போது வேண்டுமானாலும் நாம் பேசலாம். ஆனால் ஒரு வன்முறைக் கும்பலோடு பேசுவதில் எந்தவிதமான பயனுமில்லை.

பாஜக தலைவர் அண்ணாமலையுடன் நேருக்கு நேர் விவாதம் என்ற நிலைப்பாடு எந்த அளவில் இருக்கிறது?

மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருப்பதற்கு மற்றவர்களுக்கு எல்லாவிதமான உரிமையும் உண்டு. அந்தக் கருத்துகளை மதிப்பதுதான் பன்மைத்தன்மையின் அடிப்படையான விஷயம். பாஜக தனக்கான கருத்தைக் கொண்டிருக்கிறது. இதை தனிநபர் முரணாகவும், ஒருவருக்கொருவரான சவாலாகவும் பார்ப்பது என்பது சரியாக இருக்காது.

அதை பாஜக அப்படி எடுத்துக் கொள்கிறதா?

நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிற வாழ்க்கை என்பது ஆயிரம் ஆண்டுகாலமாக புறக்கணிக்கப்பட்ட, கைவிடப்பட்ட, அடக்குமுறைக்கு உள்ளான ஒரு சமூகத்தின் வெளிப்பாடு. யாரெல்லாம் அடக்குமுறை செய்தார்களோ, அவர்களுக்காகவும் போராடும், குரல் கொடுக்கும் ஜனநாயக அணுகுமுறைதான் எங்களுக்கான விடுதலையைப் பெற்றுத் தந்திருக்கிறது. அந்த அடிப்படையில்தான் நாங்கள் வளர்கிறோம். அதனால் தனிநபர் விமர்சனமோ, மோதலோ தேவையில்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.

டாக்டர் கிருஷ்ணசாமியுடன் மோதல், பாஜகவுடன் மோதல், ஆளுநர் எதிர்ப்பு என்று சமீப காலமாக விசிக கடுமையான மோதல் போக்கைக் கடைபிடிப்பதாக தெரிகிறதே?

அத்வானி ரதயாத்திரை காலத்தின்போதே, “இலங்கையை எரித்தது அனுமன், இந்தியாவை எரிப்பது அத்வானியா?” என்று இதைவிட பலமடங்கு கடுமையான எதிர்ப்பை வெளிக்காட்டியது விசிக. இன்றைக்கு அதிகாரத்திற்கு வந்திருப்பதால் எங்களின் செயல்பாடுகள் அதிகமாக வெளியில் தெரிகிறது; அவ்வளவுதான். சமத்துவத்துக்கான அரசியல், சமூக நல்லெண்ணத்துக்கான அரசியல் இவற்றிற்கு எதிரான எல்லாவற்றையும் எப்போதும் மூர்க்கமாகவும், காத்திரமாகவும் விசிக எதிர்த்துத்தான் வந்திருக்கிறது.

ஒருவேளை, எதிர்காலத்தில் திமுக கூட்டணிக்குள் பாஜகவும் வரவேண்டிய கட்டாயம் வந்தால் விசிகவின் நிலைப்பாடு?

இதற்கு இப்போது நான் பதில் சொல்லமுடியாது. ஆனால், விசிகவின் கொள்கை என்ன என்பதை நான் சொல்லிவிடுகிறேன். தமிழ்ச் சமூகத்தினுடைய ஒற்றுமை, ஒடுக்கப்பட்டிருக்கிறவர்கள், சிறுபான்மையினர் என எல்லோரும் இணைந்து வாழ்வதற்கான ஒரு தேவை. அது வெறும் அரசியலுக்கானது மட்டுமில்லை. விளிம்புநிலை மக்களின் பாதுகாப்பும், வளர்ச்சியும் சமூகத்தில் நல்லிணக்கம் நிலவுவதன் மூலம்தான் பெற முடியும். எல்லாவற்றிலும் மோதல் போக்கைக் கடைபிடிக்க முடியாது. அதை உணர்ந்திருக்கிறோம்.

சமூக ஒற்றுமைக்காக எப்போதும் உறுதியாக இருக்கக்கூடிய கட்சி விசிக. அதனால் சமூக ஒற்றுமைக்கு எதிராக இருக்கிற, சாதிய அரசியலை விதைத்துக் கொண்டிருக்கிற அரசியல் கட்சிகளை அரசியல் ரீதியாகவும், களத்திலும் நாங்கள் எதிர்கொள்கிறோம். அதேசமயத்தில் தமிழக நலனுக்கு எது சரியானதோ அதைச்சார்ந்தே எப்போதும் எங்கள் தலைவர் முடிவெடுப்பார். அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in