வலிமை படத்தில்...
வலிமை படத்தில்...

அஜித்தின் மனதும் அவரைப் போலவே அழகு!

’வலிமை’ நாயகி ஹூமா குரேஷி பேட்டி

அனுராக் காஷ்யப் இயக்கிய ‘கேங்ஸ் ஆஃப் வாசீப்பூர்’ படத்தின் மூலம் இந்தி சினிமாவுக்கு அறிமுகமானவர் ஹூமா குரேஷி. இந்தி, வங்காளம், மராத்தி, மலையாளம், தமிழ் என பன்மொழி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் இவர், ‘காலா’ படத்தில் ரஜினிக்கு காதலியாக வந்து அசத்தினார். தற்போது ‘வலிமை’ படத்தில் அஜித்துடன் சக காவல் அதிகாரியாக வந்து மெஷின் கன் தூக்கி ஆக்‌ஷன் அதிரடி செய்திருக்கிறார். காமதேனுவுக்காக அவருடன் பிரத்யேகமாக உரையாடியதிலிருந்து ஒரு பகுதி...

‘வலிமை’ படத்திலிருந்து ஒரு கட்டத்தில் நீங்கள் நீக்கப்பட்டதாகச் செய்தி வெளியானதே... என்ன நடந்தது?

அந்தச் செய்தி மும்பை ஊடகங்கள் வரை பரவிவிட்டது. 2020-ல் படப்பிடிப்பு தொடங்கியபோது நான் படத்தில் இருந்தேன். பின்னர், கரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பை தொடரமுடியாத நிலை வந்தபோது, “நீங்கள் காத்திருக்க வேண்டாம்.. வேறு படங்களில் ஒப்புக்கொண்டு நடியுங்கள். நாம் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று இருந்தால் நிச்சயமாக பணியாற்றலாம். ‘வலிமை’யின் பொருட்டு உங்கள் வாய்ப்புகள் பாதிக்கப்பட வேண்டாம்” என்றார் தயாரிப்பாளர். நான் அலறிவிட்டேன். “வேண்டவே வேண்டாம்... அஜித்துடன் நடிப்பதற்காக இந்த பேன்டமிக் முடியும்வரைகூட நான் காத்திருக்கத் தயார்” என்றேன். அந்தச் செய்திதான் இப்படி அப்போது உருமாறிவிட்டது. இவ்வளவு சீக்கிரம் ஒரு போலீஸ் வேடத்தில் நடிப்பேன் என்று நினைக்கவில்லை. அதற்காக இயக்குநர் ஹெச்.வினோத், அஜித் சார், போனி கபூர் சார் மூவருக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

உங்களைப் பற்றி வாசகர்களுக்கு கொஞ்சம் சொல்லுங்கள். குறிப்பாக, ஒரு இஸ்லாமிய குடும்பத்திலிருந்து கலைத் துறைக்கு வந்தது பற்றி..?

நான் டெல்லியில் பிறந்து வளர்ந்தவள். அப்பா உணவகங்கள் நடத்தும் தொழிலதிபர். அம்மா குடும்பத் தலைவி. இளங்கலை வரலாறு படிக்கும்போது, எனது கல்லூரியின் கலை விழாவில் ‘ஆக்ட் ஒன் தியேட்டர் குரூப்’ நவீன நாடகம் ஒன்றை நடத்தினார்கள். அதைப் பார்த்து நான் வியந்துபோய்விட்டேன். சிறு வயது முதலே நடிப்புக்கலையைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கனவுடன் வளர்ந்தவள் நான்.

நாடகம் முடிந்ததுமே, அதை எழுதி, இயக்கி, அதில் நடிக்கவும் செய்த என்.கே.சர்மா அவர்களின் முன்னால் போய், “உங்கள் குழுவில் என்னச் சேர்த்துக்கொள்வீர்களா?” என்று வணங்கி நின்றேன். அவர், “முதலில், குழுவில் உள்ள அனைவருக்கும் குடிக்கத் தண்ணீர் கொடுப்பது, தேநீரும் போட்டுத் தருவது போன்ற எடுபிடி வேலைதான் செய்யவேண்டும்... சம்மதமா?” என்றார். இரண்டு மாதங்களுக்குப் பின், “குடிக்கிறமாதிரி தேநீர் போட உனக்குத் தெரிகிறது. அப்படியானல் உனக்கு நடிப்பும் தெரியும். அது உன்னுள்தான் இருக்கிறது. அதை வெளிக்கொணரச் செய்வது மட்டும்தான் எங்கள் வேலை” என்றார்.

இப்படித்தான் நான் நாடகங்களின் மீது காதலாகித் திரிந்தேன். எனது குடும்பத்தார் கொடுத்த தைரியமும் ஆதரவும்தான், இன்று அனைத்து மொழிகளிலும் நடிக்கும் ஒருத்தியாக என்னை வெற்றிபெறச் செய்திருக்கிறது. இந்திய இஸ்லாமியக் குடும்பங்கள் மாபெரும் ஜனநாயகவாதிகள். என் குடும்பம் கலையையும் கலைஞர்களையும் ஆதரிக்கக் கூடிய ரசனைமிகுந்த குடும்பம்.

அனுராக் காஷ்யப் கண்களில் எப்படிப்பட்டீர்கள்?

நாடகங்களில் நடித்துகொண்டே டாக்குமென்டரி படமொன்றில் பணிபுரிந்தேன். அதன்வழியாக மாடலிங் வாய்ப்புகள் வரத் தொடங்கின. சாம்சங் நிறுவனத்தின் மொபைல் விளம்பரத்தில் என்னைப் பார்த்து ‘கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர்’ படத்தின் ஆடிஷனுக்கு வரும்படி அழைத்தார் அனுராக் சார். அதில், பலர் கலந்துகொண்டாலும் தேர்வானது நான்தான். முதல் படத்தை எப்போதுமே மறக்க முடியாது. அந்தப் படத்தில், திரை நடிப்புக்கான தேவைகள் மற்றும் எவ்வளவு நடிக்க வேண்டும் என்கிற அளவுகோல் குறித்து நிறையவே கற்றுக்கொண்டேன்.

ரஜினியுடனான ‘காலா’ அனுபவம் எப்படிப்பட்டது?

ஷரீனா கதாபாத்திரத்தை மறக்க முடியாது. கொஞ்சம் நரை முடியுடன் நடித்தேன். அமைதியாக, கார்ப்பரேட் பெண்ணுக்குரிய ஸ்டைலுடன் நடிக்கும்படி இயக்குநர் ரஞ்சித் கேட்டுக்கொண்டார். ரஜினி சாருடன் நடிப்பேன் என்றெல்லாம் நான் கனவிலும் நினைக்கவில்லை. ‘காலா’ படத்திலிருந்து நான் கற்றுக்கொண்டதும் நிறைய. எளியவர்களின் வலியை, அவர்களுக்குத் தேவைப்படும் ஒற்றுமையை... ஏன், தாராவியின் இதயத்தையும் பார்த்தேன்.

‘வலிமை’யில் உங்களுக்கு இத்தனை வலிமையான ஆக்‌ஷன் காட்சி இருக்கிறது என்று இயக்குநர் முன்பே சொன்னாரா?

‘காப்’ வேடம் என்பதை மட்டும் சொன்னார். “உங்களை இன்னும் ஸ்டைலாக காட்டும் ஒரு கேரக்டர்” என்று படப்பிடிப்பு தொடங்கிய பிறகே, கதையையும் கதாபாத்திரத்தையும் சொன்னார். ஆனால், கையில் மெஷின் கன் தூக்கி சுட்டுத்தள்ளும் ஆக்‌ஷன் காட்சி உண்டு என்பதையெல்லாம் சொல்லவில்லை. கடைசி ஷெட்யூலில் இயக்குநர் வினோத் என்னை அழைத்து, “ ‘கிக் பாக்ஸிங்’ கற்றுக்கொள்ளுங்கள்” என்றார். ஆனால், ஸ்பாட்டில்தான் எனக்குத் தெரியும் இவ்வளவு பெரிய ஆக்‌ஷன் காட்சி இருக்கிறது என்று. அப்படி சஸ்பென்ஸாக வைத்திருந்ததால்தான், அந்தக் காட்சியில் என்னால் அவ்வளவு சிறப்பாக நடிக்க முடிந்தது. இனி, ஆக்‌ஷன் கதாபாத்திரங்களில் என்னால் நடிக்க முடியும் என்கிற நம்பிக்கையை ‘வலிமை’ எனக்குக் கொடுத்துவிட்டது.

அஜித் எப்படிப் பழகினார்?

சான்ஸே இல்லை! அவரைப்போல் இனிய மனிதர்களும் சினிமாவில் இருக்கிறார்கள் என்பதை இப்போது நம்புகிறேன். ஒருநாள், படக்குழுவில் உள்ள அனைவருக்கும் சிக்கன் சமைத்துப் பரிமாறினார். அவ்வளவு ருசியாக இருந்தது. அவர் தன்னுடைய திறமைகளை வளர்த்துக்கொண்டே இருப்பவர். திறமையான போட்டோகிராபரும் அவருக்குள் இருக்கிறார். உயிரற்ற தன்னுடைய பைக்கையே அவ்வளவு அக்கறையாகப் பார்த்துகொள்ளும் அவர், உயிருள்ள சக ஜீவிகளான எங்களையெல்லாம் எப்படிக் கொண்டாடினார் தெரியுமா! அஜித் அழகானவர் என்றால், அவருடைய மனதும் அவ்வளவு அழகு.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in