40,000 விதைப்பந்துகள் தயார்: இமாசல பிரதேசம் வரை பைக்கில் தமிழக வாலிபர்கள் விழிப்புணர்வு பயணம்

40,000 விதைப்பந்துகள் தயார்: இமாசல பிரதேசம் வரை பைக்கில் தமிழக வாலிபர்கள் விழிப்புணர்வு பயணம்

கோவையைச் சேர்ந்த மதன், நாமக்கல்லைச் சேர்ந்த கவுதம் ஆகிய மரம் வளர்ப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த கோவை முதல் இமாசல பிரதேசம் வரை இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்ய உள்ளனர், தங்களின் பயணத்தின் போது 40 ஆயிரம் விதைப்பந்துகளை விதைக்க உள்ளனர்.

இது குறித்து நாமக்கல்லைச் சேர்ந்த கவுதம் கூறுகையில், "நாமக்கல்லில் ரெஸ்டாரன்ட் நடத்தி வருகிறேன். நீண்ட தூரம் பைக்கில் பயணம் செய்வது பிடித்தமான ஒன்று. இதை பயனுள்ளதாக மாற்ற திட்டமிட்டேன். இதற்காக கோவையைச் சேர்ந்த மதன் என்பவருடன் இணைந்து கோவை முதல் இமாசல பிரதேசம் வரை பயணிக்க திட்டமிட்டேன்.

கோவையில் இரு சக்கர பழுது பார்க்கும் நிறுவனத்தை மதன் நடத்தி வருகிறார். இவர் ஏற்கெனவே நாட்டின் அமைதியை வலியுறுத்தி இருமுறை கோவை முதல் இமாசல பிரதேசம் வரை சென்றுள்ளார். எனவே அவரை தேர்வு செய்தேன், கோவை மாவட்டத்தில் தொடங்கி இமாசல‌ பிரதேச‌ம் சென்று பின் அங்கிருந்து லட்சத்தீவுக்கு இரு சக்கர வாகனத்தில் செல்கிறோம்.

லட்சத்தீவில் இருந்து மீண்டும் கன்னியாகுமரி வந்து எங்களது பயணத்தை நிறைவு செய்கிறோம். எங்களின் நோக்கம் மரம் வளர்ப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும். அதற்காக 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் விதைப்பந்துகளை வழங்க உள்ளோம். சமீப காலமாக தட்பவெப்ப சூழல் மாறி வருகிறது. பேப்பர் மட்டுமன்றி தற்போது காலணி வரை மரத்தால் செய்யப்பட உள்ளது. இதற்காக மரங்கள் வெட்டப்படுகின்றன. எனவே மரம் வளர்க்கும் நோக்கில் விதைப்பந்துகளை வழங்க உள்ளோம். இதற்கு கோவை, நாமக்கல்லில் நல்ல வரவேற்பு உள்ளது. எங்களின் முழு நோக்கம் 1 கோடி மரக்கன்று நடுவது. இதற்கான தொடக்கம் தான் இது. இந்த விதைப்பந்துகளை அறிமுகமான குழுக்களிடம் வழங்கி அவர்கள் மூலம் விதைக்கப்படும்.

சென்னை, ஆந்திர மாநிலம் குப்பம், பெங்களூரு, டெல்லி, நாக்பூர், புனே, கன்னியாகுமரி போன்ற இடங்களில் எங்களுக்கு தெரிந்த குழுக்கள் உள்ளனர். அவர்களிடம் இந்த விதைப்பந்துகள் வழங்க உள்ளோம். அதுபோல் அரசுப் பள்ளி, காவல் நிலையங்களிலும் விதைப்பந்துகள் வழங்கி மரங்களை நடுகிறோம். தவிர, பயணம் மேற்கொள்ளும்போது விதைப்பந்துகளை நடுவதற்கு திட்டமிட்டுள்ளோம். எங்களிடம் உள்ள மர விதைகள் அனைத்தும் வேப்பமரம், ஆலமரம், புளியமரம், கருவாகை போன்றவை. இந்த மரங்களுக்கு பராமரிப்பு எதுவும் தேவையில்லை. தண்ணீரும் ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை. மழை பெய்தாலே மரங்கள் வளர்ந்துவிடும். கடந்த 12 ஆண்டுகளாக இதுபோன்ற பயணம் மேற்கொள்கிறோம்.

தற்போது 30 ஆயிரம் விதைப்பந்துகள் கைவசம் வைத்துள்ளோம். மீதமுள்ள 10 ஆயிரம் விதைப்பந்துகள் டெல்லியில் தயார் செய்ய உள்ளோம். இந்தப் பயணம் நிறைவு செய்ய 45 முதல் 55 நாட்களாகும். மொத்தம் 15 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணிக்கிறோம்.

எங்களுடன் மதன் மகன் மித்ரன் என்ற 6 வயது சிறுவனும் உடன் வருகிறார். இமாசல பிரதேசத்தில் செல்வதை மித்ரன் பூர்த்தி செய்தால் உலகிலேயே சிறிய வயதில் மலையேறிய நபர் என்ற பெருமையை இவர் பெறுவார்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in