ஜெயிலுக்குப்போக நேரம் வரும் அண்ணாமலை; பொறுத்திருங்க!

திமுக எம்.பி. செந்தில்குமார் அதிரடி பேட்டி
செந்தில்குமார்
செந்தில்குமார்

திமுகவின் முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு பங்காரு அடிகளாரைச் சந்தித்தபோது கீழே அமர்ந்திருந்த படங்கள் வெளியானபோது, ‘எக்காரணத்தைக் கொண்டும் சுயமரியாதையை இழக்க வேண்டாம்’ என்று தைரியமாக ட்விட் செய்தவர் தருமபுரி திமுக எம்பி-யான செந்தில்குமார். இப்போது திருச்சி சிவாவின் மகன் சூர்யா பாஜகவில் இணைந்த தருணத்தில், ‛திமுகவின் தொடர்பில் 2 பாஜக எம்எல்ஏ-க்கள் உள்ளனர். தலைமை இசைவு தெரிவித்தால் இரண்டு பேரையும் திமுகவுக்கு தூக்கிவிடுவோம்’ என ட்விட் செய்தார். அது மிகப்பெரிய அளவில் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்படி எந்த விஷயத்திலும் தனது கருத்தைத் தயங்காமல் சொல்லும் செந்தில்குமாரிடம் காமதேனுவுக்காக பேசினோம். இனி, அவரது பேட்டி.

உங்களுடைய தன்னிச்சையான தைரியமான ட்விட்களை திமுக தலைமை ரசிக்கிறதா? அந்த அளவுக்கு கட்சியில் கருத்துச் சுதந்திரம் இருக்கிறதா?

நிச்சயமாக இருக்கிறது. நான் கட்சியின் தலைமைக்கு எதிராகவோ, கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராகவோ எதையும் எப்போதும் ட்விட் செய்வதில்லை. கட்சியை வலுப்படுத்துவதற்கும், ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களுக்கு பதில் சொல்வதாகவுமே என்னுடைய பதிவுகள் இருக்கும்.

சமூக வலைதளங்களில் இயங்கும் தொண்டர்கள் பலரும் கட்சியின் நன்மைக்காக எந்த பிரதிபலனையும் பாராமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய உணர்வுகளை நாம் மதிக்கவும், அவர்களின் கருத்துகளைப் பிரதிபலிக்க வேண்டியதாகவும் இருக்கிறது. அவர்களின் பக்கம் நாமும் இறங்கிப்போய் அவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டியிருக்கிறது. இப்படி பதிவுகளை இடுவதற்காக தலைமை இதுவரை என்னை அழைத்து எதுவும் கேட்கவில்லை.

இரண்டு பாஜக எம்எல்ஏ-க்களை தூக்குவோம் என்கிறீர்களே... யார் அந்த இருவர்? அவர்களுக்கு திமுகவை நோக்கி வர வேண்டிய அவசியம் என்ன ஏற்பட்டிருக்கிறது?

யார் என்பதை இப்போது சொல்ல விரும்பவில்லை. ஆனால், நான் சொல்லியிருப்பது முழுவதும் உண்மை. நான் சொன்னதில் எந்த மாற்றமும் இல்லை. காலம் வரும்போது அது தானாகவே வெளியில் தெரியவரும்.

மக்களவையில் செந்தில்குமார்...
மக்களவையில் செந்தில்குமார்...

தமிழகத்தில் பாஜகவின் செயல்பாடுகளை எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழகத்தை பொறுத்தவரை எதிர்க்கட்சி என்றால் அது அதிமுகதான். ஆனால், தற்போது அதிமுக அந்த இடத்தை பாஜகவிடம் பறி கொடுத்திருக்கிறது. பாஜக தலைவர் அண்ணாமலை, சரியோ தவறோ தினமும் செய்திகளில் வந்து விடுகிறார். நன்றாக அரசியல் செய்கிறார். ஆனால் அதற்காக, “முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்” என்றெல்லாம் சவால் விடுவதெல்லாம் கொஞ்சம் ஓவர். உங்களுக்கான நேரம் வரும், அதுவரை காத்திருங்கள், நிச்சயம் உங்களுக்கான வாய்ப்பு வரும், அதுவரை பொறுமையாக இருங்கள். அதை விட்டுவிட்டு வடிவேலு போல, ‘நானும் ரவுடி தான்... என்னையும் கைது செய்யுங்கள்’ என்று சவால் விடுவதெல்லாம் வேண்டாம்.

திமுகவிலிருந்து திருச்சி சிவாவின் மகன் சூர்யா வெளியேற என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

அந்தப் பையனைப் பொறுத்தவரை ஒரு நல்ல அரசியல் பின்புலத்தில் உள்ளவர். அவருடைய தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்தி கட்சியில் மேலே வந்து விடலாம். ஆனால், அவரால் இதுவரை வர முடியவில்லை. எந்த பின்புலமும் இல்லாத நான் அரசியலுக்கு வந்து கட்சியில் நல்ல வளர்ச்சியை அடைந்திருக்கும்போது அவரும் தன்னுடைய தகுதிகளை வளர்த்துக் கொண்டிருந்தால் நிச்சயம் அவருக்குரிய இடம் கிடைத்திருக்கும். இந்த கட்சி எனக்கு என்ன செய்தது என்பதுதான் அவர் கேட்கிற கேள்வி. ஆனால், நாம் கட்சிக்கு என்ன செய்திருக்கிறோம் என்பதை அவர் முதலில் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

வலுவான பின்புலத்தை வைத்துக்கொண்டு ஒரு இடத்தை அவரால் அடைய முடியவில்லை என்றால் அது அவருடைய திறமையின்மை என்று தான் கூற வேண்டும். அவருடைய குடும்ப பிரச்சினையைக் காரணம் காட்டி பாஜகவுக்கு சென்றிருக்கிறார். அவருடைய பேச்சை வைத்து பார்த்தால் யாரையோ அசிங்கப்படுத்த வேண்டும் என்பதுதான் அவருடைய எண்ணமாக இருக்கிறது. அவர் போனதால் திமுகவுக்கு எவ்வித இழப்பும் இல்லை.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாஜகவில் இப்போது அதிகம் பேர் சேர்கிறார்களே?

திமுக போன்ற பலமுள்ள கட்சியில் ஒரு பெரிய பொறுப்புக்கு வரவேண்டும் என்றால் காத்திருக்க வேண்டும். போட்டி அதிகம் இருக்கும். ஆனால், தமிழகத்தில் பலமில்லாத பாஜக போன்ற கட்சிகளுக்குப் போனால் உடனடியாக பொறுப்புகள் கிடைக்கும் அதற்காக அவர்கள் அங்கே செல்கிறார்கள். அங்கு வளர்ச்சி சீக்கிரம் இருக்கும் என்பதற்காகச் செல்கிறார்கள்.

இதை இலக்காக வைத்து கிரிமினல்கள், குற்றவாளிகள் என அனைவரும் அங்கேதான் செல்கிறார்கள். அவர்களுக்கு மத்திய அரசின் மூலமாக ஒரு பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்புகிறார்கள். பாஜகவும் அதைத்தருகிறது. அவர்கள் பாஜகவை பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களை பாஜக பயன்படுத்திக் கொள்கிறது.

அதிபர் சீமான், ஆமையின் வால் ஒட்ட நறுக்கப்படும் என்றெல்லாம் ட்விட் செய்துள்ளீர்களே..?

மின் தடை விவகாரத்தில் ஏதோ நகைச்சுவையாக சொல்லப் போனார். அது அவருக்கே வினையாக முடிந்திருக்கிறது. அவருடைய வீட்டில் மின்சாரம் இல்லை என்று அவர் சொன்னதற்கு உங்கள் வீட்டு மின் இணப்பு எண்ணைச் சொல்லுங்கள், உண்மையில் அங்கு மின்சார தடை ஏற்பட்டதா என்பதை சொல்கிறேன் என்று அமைச்சர் சொல்கிறார். ஆனால், அவர் அதைச்சொல்லாமல் நான் அங்கே தங்கிக் கொள்கிறேன் என்கிறார். மக்கள் ஆதரவு பெற்று வெற்றி பெற்றால்தான் அரசாங்க வீட்டில் தங்க முடியும். அதை விட்டுவிட்டு அவர் சொன்ன பொய்யை மறைக்க திசை திருப்புகிறார். அதனால் அப்படி ட்விட் செய்தேன்.

அதுவுமில்லாமல், சீமான் அதிமுகவுக்கு ஆதரவாகவும் பாஜகவின் அஜெண்டாவை நிறைவேற்றுகிறவராகவும் இருக்கிறார். அந்த கட்சிகளுக்காக அவர் வேலைபார்க்கிறார். அவருக்குத் தேவையானவற்றை அந்த கட்சிகள் பார்த்துக் கொள்கின்றன. இலங்கைத் தமிழர் பிரச்சினை உட்பட பல்வேறு விஷயங்களில் பழ நெடுமாறன், வேல்முருகன் போன்றவர்கள் சிறைக்கு சென்றிருப்பார்கள். சீமான் அப்படி எதுவும் சென்றதே இல்லை. அவர் மீது மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது. 7 பேர் விடுதலை உள்ளிட்ட விஷயங்களில் நீதிமன்றம் மூலமாக நல்லது நடக்கும் போது அவர் எதையாவது பேசி அதை நடக்காமல் திசை திருப்பி விடுவார். மொத்தத்தில், மத்திய அரசு நினைப்பதை இங்கே செய்து முடித்து விடுவார்.

அதேசமயம் இளைஞர்களை தன் பக்கம் ஈர்த்து அமைப்பை வலுவாக வைத்துக் கொள்வதற்காக தமிழ் தேசியம் பேசிக் கொண்டிருக்கிறார். இளைஞர்கள் சிலர் இவருடைய பேச்சைக் கேட்டு ஏமாந்து போகிறார்கள். அவர்களை வைத்து இவர் ஆதாயம் அடைந்து விடுகிறார்.

திமுகவின் ஓர் ஆண்டு ஆட்சியை நூறாண்டு சாதனை என்று போற்றுகிறீர்கள். ஆனால், அதிமுகவோ விடியா ஆட்சி என்று விமர்சிக்கிறதே?

தமிழகத்தின் முதல்வராக எங்கள் தலைவர் மிகப்பெரிய சாதனைகளைச் செய்து முடித்திருக்கிறார். தொண்டர்கள் சில இடங்களில் தங்களுக்குத் தேவையானது கிடைக்கவில்லை என்பதற்காக வருத்தத்தில் இருக்கலாமே தவிர வேறு எந்த குறைகளும் இல்லை. ஆட்சியைப் பொறுத்தவரை திமுக அரசு தொலைநோக்குத் திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. முதல்வர் எல்லா விஷயங்களுக்கும் உடனடியாக செவி சாய்க்கிறார். தன்னுடைய கவனத்திற்கு வரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார். மக்கள் இதனால் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். எங்களால் ஒரு சில விஷயங்களை இன்னும் செய்யமுடியவில்லை. அதையும் விரைவில் செய்து முடித்துவிடுவதாக முதல்வர் சொல்லி இருக்கிறார். ஆனாலும் அதிமுகவினர் அரசியல் செய்கிறார்கள். அவர்கள் எங்களை பாராட்டினால் தான் ஆச்சரியம்.

திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு வந்துவிடும் என நாங்கள் சொன்னது சரியாப் போச்சு பாத்தீங்களான்னு அதிமுக கேட்கிறதே?

அவர்கள் கேட்பது இருக்கட்டும். உண்மையில், நிலக்கரி பற்றாக்குறையால் மின் உற்பத்தியில் கொஞ்சம் பாதிப்பு ஏற்படத்தான் செய்தது. ஆனால், இப்போது போதுமான நிலக்கரி இருப்பு உள்ளது. அதனால் உபரியாகவே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது தான் உண்மையான மிகைமின் மாநிலமாக தமிழகம் மாறி இருக்கிறது. பிற மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கும் அளவிற்கு நிலைமை உள்ளது.

மத்திய அரசின் செயல்பாடுகள் எப்படி உள்ளது?

மாநில அரசின் சுதந்திரத்தில் தலையிடுவதாக உள்ளது. ஒவ்வொரு விஷயத்திற்கும் மாநில அரசு மத்திய அரசுடன் போராட வேண்டியிருக்கிறது. தமிழ்நாடு அனைத்து விஷயத்திலும் ஒரு இருபது ஆண்டுகாலம் முன்னால் இருக்கிறது. உதாரணத்துக்கு, அவர்கள் தேசிய கல்விக் கொள்கையில் 7 கிலோ மீட்டருக்கு ஒரு பள்ளி என்கிறார்கள். ஆனால், நாம் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு பள்ளி என்ற நிலையை அடைந்து எவ்வளுவோ நாட்கள் ஆகிவிட்டது. ஆனாலும், தேசியக் கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறார்கள்.

தமிழ்நாடு கொண்டுவரும் மக்கள் நலத் திட்டங்களை முடக்க ஆளுநரை பயன்படுத்துகிறார்கள். குடியரசுத்தலைவரையாவது எம்எல்ஏ-க்கள், எம்பி-க்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால், ஆளுநர் என்பது வெறும் நியமனம் தான். அப்படி நியமனம் செய்யப்பட்ட ஒருவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவது எப்படி சரியாகும். ஆனாலும் மத்திய அரசு இதை செய்து கொண்டிருக்கிறது.

பேரறிவாளன் விடுதலை விஷயத்தில் ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த சவுக்கடிதான் நீட் விலக்கு மசோதாவை அவர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க காரணமாக இருந்திருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசின் கொள்கைகளில் தலையிட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்பதை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது. இதற்குப் பிறகாவது நிலைமை மாறுகிறதா என்று பார்ப்போம்.

தருமபுரியில் உங்களைத் தவிர, அதிமுகவின் சந்திரசேகர், பாமகவின் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கிறார்கள். தேவைப்பட்டால் நாங்கள் மூவரும் இணைந்து செயல்பட்டு மாவட்டத்திற்கான நலத்திட்டங்களை பெறுவோம் என்று சொன்னீர்களே... அதற்கான சூழல் ஏற்பட்டதா?

இல்லை, அதற்கான தேவை ஏற்படவில்லை. தருமபுரிக்குத் தேவையான அனைத்துத் திட்டங்களையும் என்னால் பெற்றுத்தர முடிந்திருக்கிறது. சந்திரசேகர் நல்ல நண்பராக இருக்கிறார். அன்புமணி ராமதாசை தனிப்பட்ட முறையில் சந்திக்க முடியவில்லை. அவரும் ரயில்வே திட்டம் உள்ளிட்டவற்றிற்காக குரல் கொடுத்திருக்கிறார்.

தொகுதிக்குள் பாமகவுடனான மோதல் போக்கு முடிந்துவிட்டதா?

எப்போதுமே பாமக தொண்டர்களுடன் எனக்கு மோதல் இருந்தது இல்லை. பாமக தலைமையுடன்தான் அதுவும் தேர்தலின்போது இருந்தது. அதற்கு நான் பதில் சொல்லும் போது தொண்டர்கள் கோபப்பட்டார்கள். அதை புரிந்துகொண்டு தற்போது அதிகம் விமர்சிப்பதில்லை. என் தொகுதிக்குள் இருக்கும் பாமகவினர் என்னுடன் இணக்கமாகத்தான் இருக்கிறார்கள். நானும் எல்லோருக்குமான ஒருவனாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in