பாஜகவை எதிர்ப்பதில் தமிழக காங்கிரசிடம் வேகம் இல்லை!

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வருத்தம்
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

தமிழக காங்கிரசின், 'அஞ்சா நெஞ்சன்' என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனைச் சொல்லலாம். சோனியா காந்தியை, "வெளிநாட்டுக்காரர், பதிபக்தி இல்லாதவர்" என்றும், "அவரது இயற்பெயர் அண்டோனியா அல்பினா மயினோ" என்றும் 2002-ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா விமர்சித்தபோது, தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த இளங்கோவன் கொடுத்த பதிலடியை அதிமுகவினர் இன்றும் மறந்திருக்க மாட்டார்கள். கோமளவல்லி என்றும், அம்மு என்றும் அவர் போட்ட போட்டில் சோனியாவைக் கடுமையாக விமர்சிப்பதையே கைவிட்டார் ஜெயலலிதா. 2006 காலகட்டத்தில் திமுக கூட்டணியில் இருந்துகொண்டே, "மத்திய அரசு திட்டங்களை ஏன் உங்கள் திட்டங்களாகச் சொல்கிறீர்கள்?" என்று திமுக அரசையும் வறுத்தெடுத்தவர் அவர். மக்களவைத் தேர்தலில் தோற்ற பிறகு மவுனமானவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு பழைய பாணியில் பேச ஆரம்பித்திருக்கிறார். அவர் 'காமதேனு' இதழுக்கு அளித்த பேட்டி இது.

"மக்கள் பிரச்சினையைப் பற்றிப் பேசுங்கள்!" என்று வானதி சீனிவாசனுக்கு அறிவுரை கூறிய முதல்வர் ஸ்டாலினைப் பார்த்து, "பாஜக ஆளும் மாநிலங்களைவிட தமிழ்நாடு பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருக்கிறது. நீங்கள் முதலில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்துவிட்டு மக்களைப் பற்றிப் பேசுங்கள்" என்று அண்ணாமலை சொல்லியிருக்கிறாரே?

அந்தத் தம்பிக்கு டெய்லி பத்திரிகை படிக்கிற பழக்கமே இல்லைன்னு நினைக்கிறேன். ஏன்னா, இந்தியாவிலேயே முதல் முதல்ல பெட்ரோல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைச்சது திமுக அரசுதான். 2021 ஆகஸ்டில் ஸ்டாலின் குறைத்த பிறகுதான், நவம்பரில் மத்திய அரசாங்கமே குறைச்சுது. தினந்தினம் ஏதாவது பொய் பேசுறதையே வழக்கமா வெச்சிருக்கிற அண்ணாமலை, பழைய பேப்பரையாவது படிக்கணும்னு கேட்டுக்கிறேன்.

பாஜக நிறைய பொய்சொல்கிறது என்கிறீர்கள். அப்படியென்றால், அதெல்லாம் பொய் என்று மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதில் காங்கிரசுக்கு என்ன பிரச்சினை?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சியானது பாஜகவை முழுமையாக, வலுவாக எதிர்க்கத் தவறிவிட்டது என்றுதான் நான் கருதுகிறேன். இன்னும் சொல்லப்போனால் முதல்வர் நாற்காலியில் அமர்ந்துகொண்டு, திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் காட்டுகிற பாஜக எதிர்ப்பு வேகம்கூட, எதிர்க்கட்சியான தமிழ்நாடு காங்கிரஸிடம் இல்லை.

பாஜகவில் மாவட்ட, வட்டாரத் தலைவர்களாக இருப்பவர்கள்கூட சுறுசுறுப்பாக இயங்குகிறார்கள். வீடுதேடிச்சென்று மக்களைச் சந்திக்கிறார்கள். காங்கிரஸார் அப்படிச் செய்யாமல் இருப்பதற்குக் காரணம், கட்சி செலவுக்குப் பணம் தராததுதான் என்கிறார்களே, உண்மையா?

பாஜக ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி அலுவலகம் கட்டுவதற்கே 2, 3 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறது. கட்சியை வளர்ப்பதற்கு பண பலத்தையும், அதிகார பலத்தையும் முழுமையாகப் பயன்படுத்துகிறது. ஊர்ல இருக்கிற ரவுடிகளை எல்லாம் தேடித்தேடி கட்சியில் சேர்க்கிறார்கள். பல மாவட்டங்களில், போலீஸாரிடம் இருந்து ரௌடிப் பட்டியலை அட்ரஸுடன் வாங்கி, அவர்களை எல்லாம் வீட்டுக்கே போய்ப்பார்த்து, "வழக்கை எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம், நம்பி வாங்க" என்றெல்லாம் சொல்லி அழைப்பதாகத் தகவல்கள் வருகின்றன. இந்த உண்மையை யாரும் மறுக்க முடியாது. தமிழ்நாடு காங்கிரஸைப் பொறுத்தவரையில் ஒரு விஷயத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். எங்களிடம் வேகம் போதாது. இன்னும் துடிப்போடும், வேகத்தோடும் செயல்பட வேண்டும்.

"காங்கிரஸ், திராவிடக் கட்சிகளுடன் ஒப்பிடுகையில், நாங்கள் ஊழல் கரை படியாதவர்கள்" என்று தொடர்ந்து பாஜகவினர் சொல்கிறார்களே, உண்மையா?

(சிரிக்கிறார்). அதெப்படிங்க அவ்வளவு பெரிய பொய்ய ஈஸியா சொல்றாங்க? அமித்ஷா பையனோட நிலைமை 5 வருஷத்துக்கு முன்னாடி எப்படியிருந்தது, இப்போது எப்படியிருக்கிறார்? எங்கோ பாதாளத்தில் இருந்த குஜராத் அதானி, இன்று அம்பானிகளை மீறிய பெரும் பணக்காரராகியிருக்கிறாரே எப்படி? முன்பெல்லாம் ஆங்காங்கே சின்னச் சின்ன ஊழல்கள் நடந்தன. இப்போது எல்லாவற்றையும் மையப்படுத்தி, மிகப்பெரிய ஊழலாகச் செய்கிறது பாஜக. சமீபத்தில்கூட கர்நாடகாவில் 40 சதவீத கமிஷன் கேட்டதால், ஒரு காண்ட்ராக்டர் மாரடைப்பு வந்தே இறந்துபோயிருக்கிறார். ஆக, ஊழலின் மொத்த உருவமாக இருப்பது பாஜகதான். அவர்களது யோக்கிய வேஷத்தை மக்கள் நம்பமாட்டார்கள்.

ஆளுநர் ரவியின் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ள நிலையில், "பல மாநிலங்களில் ஆளுநர்களைப் பயன்படுத்தி ஆட்சியைக் கவிழ்த்த காங்கிரசுக்கு எங்கள் ஆளுநர்களைக் குறை சொல்ல என்ன தகுதி இருக்கிறது?" என்று பாஜக கேட்கிறதே..?

சில தவறுகளின் அடிப்படையில் காங்கிரஸ் காலத்தில் ஆட்சிக்கலைப்பு நடந்தது உண்மைதான். உச்ச நீதிமன்ற தலையீட்டுக்குப் பிறகு, மாநில அரசுகளை கலைக்கிற விஷயம் இப்போது அவ்வளவு எளிதாக இல்லை. அந்தத் தடை மட்டும் இல்லையென்றால் இவர்களின் சுயரூபம் தெரிந்திருக்கும். சென்னை கீழ்ப்பாக்கத்துக்கு அனுப்ப வேண்டிய கிரண்பேடியை எல்லாம், புதுச்சேரி ஆளுநராக அனுப்பி அவர்கள் அடித்த கூத்தை நாடே பார்த்ததே? அந்தம்மா பண்ணிய அரசியல் குழப்பங்களையும், கூத்துகளையும் பார்த்த பிறகு, அறிவுள்ளவர்களாக இருந்தால் ஆளுநர்களைக் கூப்பிட்டு, "அந்தம்மா மாதிரி யாரும் நடந்துக்காதீங்கப்பா..." என்று அறிவுரை சொல்லியிருக்க வேண்டும்.

ஆனால், பாஜகவோ என்னுடைய அருமைச் சகோதரியும், பண்பான குடும்பத்தில் பிறந்தவருமான தமிழிசையையும் அதே மாதிரி நடந்துகொள்ளச் சொல்கிறது. அவரும் ரங்கசாமியை விரட்டிவிட்டு, புதுச்சேரியில் நேரடியாக பாஜக ஆட்சியைக் கொண்டுவந்துவிட வேண்டும் என்று உழைக்கிறார். தெலங்கானாவிலும் கட்சியை வளர்க்கிற வேலைதான் செய்கிறாரே தவிர, ஆளுநருக்கான வேலையை அவர் செய்வதாக எனக்குத் தெரியவில்லை.

டெல்லியில் கேஜ்ரிவாலுடனும், மேற்கு வங்கத்தில் மம்தாவுடனும் தகராறு. இப்படி பாஜக ஆட்சியில்லாத மாநிலங்களில் எல்லாம் ஆர்எஸ்எஸ் ஆட்களை அனுப்பி குடைச்சல் கொடுக்கிறார்கள். அதுவும் தமிழக ஆளுநர் ரவி, நாகலாந்தில் இருந்தபோது தீவிரவாதிகளுடன் 'அண்டர்ஸ்டேன்டிங்'கில் இருந்தவராம். இவ்வளவு பயங்கரமான மனிதரை, ஆளுநராக அனுப்பி மக்கள் விருப்பத்துக்கு மாறாக செயல்பட வைத்திருக்கிறார்கள். வேண்டுமென்றால் பாருங்கள், இலங்கையில் மக்கள் எல்லாம் ராஜபக்ச வீட்டைச் சூழ்ந்து போராடுவது போல, விரைவில் நம் மக்கள் எல்லாம் டெல்லி ராஷ்ட்ரபதி பவன் முன்பு திரண்டு ஒரு பிரம்மாண்ட போராட்டத்தை நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்தித் திணிப்பு விஷயத்தில் பாஜகவை கண்டிப்பதற்கு, காங்கிரசுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்கிறார்களே?

"இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும்வரையில், ஆங்கிலமே இந்தியாவின் இணைப்பு மொழியாக இருக்கும். இந்தி திணிக்கப்படாது" என்ற உறுதிமொழியைக் கொடுத்ததே காங்கிரஸ் பிரதமர் நேருதானே? அதுவும் குறிப்பாக, என்னுடைய தந்தையார் ஈ.வி.கே.சம்பத், அப்போது திராவிட முன்னேற்றக் கழக பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோதுதான், அந்த உறுதிமொழியை நேரு எழுத்துபூர்வமாகக் கொடுத்தார். அதை எல்லாம் மறந்துவிட்டு அமித்ஷா, "இந்திதான் இந்தியாவின் இணைப்பு மொழியாக இருக்கணும்" என்கிறார். இன்னொருத்தர் (மோடி), "ஒரே நாடு, ஒரே மொழி" என்கிறார்.

எப்படி உலக வல்லரசாக இருந்த சோவியத் யூனியனை ஒரே நாடு, ஒரே மொழி என்று சொல்லி சிதறடித்தார்களோ அப்படி இந்த அமித்ஷாவும், மோடியும் நாட்டையே சிதறடிக்கப் பார்க்கிறார்களோ என்று பயமாக இருக்கிறது. ஆரம்ப காலத்திலேயே இந்தியா ஒரே நாடாக இருந்தது கிடையாது. பல்வேறு நாடுகள், பல்வேறு மன்னர்கள், நூற்றுக்கணக்கான சிற்றரசுகள், பல்வேறு இனம், மொழி, மதத்தைப் பின்பற்றுபவர்களால் ஆளப்பட்ட இந்த பிரதேசங்களை எல்லாம் வெள்ளைக்காரர்கள் நிர்வாக வசதிக்காக ஒரே நாடாக்கினார்கள். வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் பெருமை. இப்போது ஒற்றுமையை வேற்றுமையாக்கும் வேலையை அமித்ஷாவும், மோடியும் செய்கிற காரணத்தால் இந்த நாடு பல நாடுகளாகப் பிரிந்துபோகும் நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கட்சியில் பெரிய பெரிய பொறுப்பை வகித்தவர் நீங்கள். காங்கிரசுக்கு எதிராகப் பேசுபவர்களுக்கு பதிலடி கொடுப்பதற்கு உங்களை மிஞ்சிய ஆள் கிடையாது என்றும் சொல்லலாம். ஆனால், இடையில் ரொம்ப அமைதியாகிவிட்டீர்களே, என்ன காரணம்?

நான் மாநில காங்கிரஸ் தலைவராக, முன்னாள் சட்டமன்ற, மக்களவை உறுப்பினராக, அமைச்சராக இருந்தவன் என்பதை எல்லாம் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இப்போது நான் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்தானே? கட்சியில் யார் பொறுப்பில் இருக்கிறார்களோ, அவர்கள் பேசும்போதுதான் அது மீடியாக்கள் மூலம் மக்களைச் சென்றடையும். எனவே, பாஜகவின் செயல்களை கண்டிக்க வேண்டியதும், அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டியதும் பொறுப்பில் இருப்பவர்கள்தான். அவர்கள் அதைச் சரியாகச் செய்ய வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். அதேநேரத்தில் என்னை அழைக்கிற நிகழ்ச்சிகள், கட்சிக் கூட்டங்களில் எல்லாம் நான் உண்மையை உடைத்துப் பேசுவேன். எந்த ஊரில் இருந்து யார் கூட்டம் பேசக் கூப்பிட்டாலும், நான் போய்ப் பேசத் தயாராக இருக்கிறேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in