கள்ளக்குறிச்சி விவகாரத்தை ஏன் கண்டுகொள்ளாமல் விட்டீர்கள்?

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
கள்ளக்குறிச்சி விவகாரத்தை ஏன் கண்டுகொள்ளாமல் விட்டீர்கள்?

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எப்போதும் தன்னை பிஸியாகவே வைத்திருக்கிறார். தினமும் ஏதாவது ஒரு மாவட்டத்தில் கல்வித்துறை சார்பான கூட்டங்கள், நிகழ்ச்சிகள், புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துதல் என்று பம்பரமாய் சுற்றுகிறார். கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம் பூதாகரமாக கிளம்பியிருக்கும் நிலையில் அவரிடம் காமதேனுவுக்காக பேசினோம்.

தேர்வு நடைபெறும் தேதியைக்கூட முன்கூட்டியே அறிவித்துவிட்டு இந்தக் கல்வி ஆண்டைத் துவக்கியிருக்கிறீர்கள். வரவேற்பு எப்படி உள்ளது?

மிகுந்த வரவேற்பு உள்ளது. மாணவர்களின் அடித்தளத்தை உறுதிப்படுத்துவதற்காக பல புதிய நல்ல திட்டங்களை தமிழக முதல்வர் கொண்டு வருகிறார். இல்லம் தேடிக்கல்வி, எண்ணும் எழுத்தும், நான் முதல்வன், கலைப்பண்பாட்டு கொண்டாட்டங்கள், பள்ளியில் உலகத்தரம் வாய்ந்த சினிமா என்று பல்வேறு வகையான திட்டங்களின் மூலம் பள்ளிக் கல்வித்துறை ஒரு புதிய பரிணாமத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

எண்ணும் எழுத்தும் திட்டத்துக்கு ஆசிரியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு நிலவுகிறதே?

மாணவர்கள் செயல்பாடுகளின் மூலம் கற்கும் வகையில் அந்த திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆடுதல், பாடுதல் விளையாட்டுகள் போன்றவற்றின் மூலமாக அவர்கள் திறனைப்பெற்று கல்வியைக் கற்றுக்கொள்கிறார்கள் அவர்களுடைய கற்றல் அதனால் ஒருமுகப்படுகிறது. அவர்களின் கவனத்தை முழுமையாகக் கல்வியை நோக்கித் திருப்பமுடிகிறது என்று ஆசிரியர்கள் பாராட்டுகிறார்கள். இதுகுறித்த பயிற்சிகளின் போதே ஆசிரியர்கள் ஈடுபாட்டுடன் இருக்கிறார்கள். அதனால் ஆசிரியர்கள் எதிர்க்கிறார்கள் என்ற பேச்சுக்கே வேலையில்லை. 2025-ஐ இலக்காகக் கொண்டு நாங்கள் செயல்படுகிறோம். அப்போது இதற்கான முழுமையான பலன்கள் தெரியவரும்.

ஆசிரியர்கள் - கல்வித் துறை உறவு எப்படி இருக்கிறது? இப்படி அடுக்கடுக்காய் புதிய திட்டங்களை புகுத்துவது ஆசிரியர்களின் கற்பித்தல் பணியை பாதிக்காதா?

சுமுகமாகவே இருக்கிறது. புதிய திட்டங்கள் அனைத்துமே அவர்களின் கற்பித்தல் பணியை எளிதாக்குவதற்காகவே கொண்டுவரப்படுகின்றன. கல்வி அதிகாரிகள், கல்வி வல்லுநர்கள், உள்ளிட்டவர்கள் அரசின் தற்போதைய செயல்பாடுகளை வரவேற்கிறார்கள்; பாராட்டுகிறார்கள். இந்த திட்டங்களால் மாணவர்கள் உயர் வகுப்புகளுக்குச் செல்லும்போது அவர்களுக்கு போதிப்பது எளிதாக இருக்கும். மாணவர்களின் கற்றல் திறனும், அறிவும் மேம்படும் என்று அவர்கள் பாராட்டுகிறார்கள்.

கல்வித் துறையிலும் முன்னுக்குப் பின் முரணாக பல அறிவிப்புகள் வருவதாகச் சொல்கிறார்களே?

பள்ளிக் கல்வித் துறையில் இன்றைக்கு என்ன தேவை, எதிர்காலத்துக்கு என்ன தேவை என்றெல்லாம் ஆராய்ந்து அதற்கேற்பவே அறிவிப்புக்கள் வெளியிடப்படுகின்றன. அதில் ஒன்றிரண்டு மட்டுமே மாணவர் - ஆசிரியர் நலன்கருதி மாற்றம் செய்யப்படுகின்றன. ஆனால், கடந்த ஓராண்டில் எந்த விதத்திலும் முன்னுக்குப் பின் முரணான அறிவிப்புக்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிடவில்லை என்பதுதான் உண்மை.

முதல்வருடன் அன்பில் மகேஷ்
முதல்வருடன் அன்பில் மகேஷ்

கள்ளக்குறிச்சி விவகாரத்தை ஏன் ஆரம்பத்திலேயே கண்டுகொள்ளாமல் விட்டீர்கள்?

கண்டுகொள்ளாமல் விடவில்லையே... பள்ளிக் கல்வித் துறையை பொறுத்தவரை ஒரு பள்ளியில் ஒரு பிரச்சினை என்றால் அது அன்றைய தினத்துக்குள் எங்களுடைய கவனத்திற்கு வந்துவிடும். அதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர், முதன்மைக்கல்வி அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டவர்களிடம் விசாரித்து அதற்கான தீர்வைநோக்கி நடவடிக்கை எடுக்கிறோம்.

கள்ளக்குறிச்சி விவகாரத்திலும் அப்படித்தான் நடந்து கொண்டோம். அன்றைய தினமே மாவட்ட ஆட்சியர், கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்டவர்களுடன் கலந்து பேசும்போது அவர்கள், “அமைதியாகத்தான் இருக்கிறது, மாணவியின் பெற்றோர் நீதி வேண்டும் என்று சட்டரீதியாக போராடிக் கொண்டிருக்கிறார்கள், வேறு எந்த பிரச்சினையும் இல்லை” என்று தான் சொன்னார்கள்.

அவர்கள் நீதிமன்றம் சென்றதால் அங்கு என்ன உத்தரவாகிறதோ அதன்படி நடக்கலாம் என்றிருந்தோம். இந்த நிலையில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அந்த மாணவியின் வீட்டிற்கே சென்றார். அப்போதும், “எங்களுக்கு நீதிவேண்டும்” என்று தான் அவர்கள் சொன்னார்கள். அரசின் சார்பில் என்ன செய்யவேண்டுமோ அத்தனையும் செய்து தருகிறோம் என்று உறுதியளிக்கப்பட்டது. 18-ம் தேதி வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதற்காகக் காத்திருந்தோம். அதற்குள் 17-ம் தேதி இப்படி கலவரத்தில் இறங்கிவிட்டார்கள்.

இந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகத்துக்கே அரசு சாதகமாக நடந்து கொள்வதாகச் சொல்லப்படுகிறதே..?

மாணவியின் மரணத்துக்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதனால் தான் கணித, வேதியியல் ஆசிரியைகள், பள்ளியின் தாளாளர், முதல்வர், செயலர் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக் கிறார்கள். சிபிசிஐடி விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன் முடிவில் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.

அதேபோல, பள்ளிக்கு நேர்ந்த அநீதிக்கும் நியாயம் கிடைக்க வேண்டும் என்பதும் எங்கள் உறுதிப்பாடு. பேருந்துகளை கொளுத்தியது, டிராக்டர், பொக்லைன் உள்ளிட்டவற்றை எரித்தது, மாணவர்களின் சான்றிதழ்களை எரித்தது என்பதெல்லாம் நியாயம் தானா? பள்ளியின் உடமைகளை தூக்கிச்சென்றதெல்லாம் சரிதானா? இதில் தாங்கள் சம்பந்தப்படவில்லை என்று மாணவியின் பெற்றோர் சொல்லிவிட்டனர். உயர்நீதிமன்றம் கூறியதுபோல, திட்டமிட்ட சதிச்செயலாக இது நடைபெற்றிருக்கிறது.

அந்த பள்ளியில் படிக்கும் 3500-க்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வியில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். ஒவ்வொரு மாணவனுக்கும் கல்வி எவ்வளவு முக்கியம் என்று முதல்வர் எங்களுக்கு உணர்த்தியிருக்கிறார். அதனால் மாணவர்கள் நலன்கருதி அந்தப் பள்ளியை செயல்பட வைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக முதல்வரின் தலைமையில் அமைதிப்பூங்காவாக மக்கள் மகிழ்வுடன் வாழும் வகையில் நடைபெற்று வரும் ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் சிலர் திட்டமிட்டு கலவரம் செய்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.

உடமைகள் எல்லாம் எரிக்கப்பட்டு விட்ட நிலையில் உடனடியாக எப்படி செயல்பட வைக்கப்போகிறீர்கள்?

அப்பள்ளி அருகேயுள்ள 5 அரசுப்பள்ளிகள் மற்றும் 17 தனியார் பள்ளிகளிலும், ஒரு கல்லூரியிலும் காலியாக உள்ள வகுப்பறைகளில் அந்தப்பள்ளியின் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விரைவில் ஆசிரியர்களைக் கொண்டு வகுப்புக்களை துவங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

மாவட்ட அளவிலான அதிகாரிகள் சுயமாக நடவடிக்கை எடுக்க முடியாத நிலை இருப்பதாகச் சொல்கிறார்களே..?

இப்படிக் கேட்டால் நான் எப்படிப் பதில் சொல்ல முடியும்? பள்ளிக்கல்வித் துறையை பொறுத்தவரை நாங்கள் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம். அதிகாரிகள் அவரவரது அதிகாரத்துக்கு உட்பட்டு முடிவுகளை எடுக்கிறார்கள்.

சென்னையில் உள்ள சில அதிகாரிகள் அதிகார மையமாக செயல்படுகின்றனர் என்கிறார்களே..?

அதுகுறித்தெல்லாம் தெரியாது. அப்படி இருக்கவும் வாய்ப்பில்லை.

ஓராண்டில் கல்வித்துறையின் சாதனையாக எதைக் கூறலாம்?

கரோனாவால் இரண்டு ஆண்டுகளாக தேர்வு நடத்த முடியாத சூழல் இருந்தது. இந்த ஆண்டு பள்ளி இறுதித் தேர்வுகளை வெற்றிகரமாக நடத்தி, முடிவுகளை வெளியிட்டிருக்கிறோம். அவற்றில் தோல்வி அடைந்தவர்களுக்கு உடனடியாக மறுதேர்வும் நடைபெற இருக்கிறது.

கடந்த ஆறேழு மாதங்களில் சுமார் 2 லட்சம் இல்லம் தேடி கல்வி மையங்களை அமைத்திருப்பது மிக பெரிய சாதனை. இந்த சமுதாயத்தில் இருந்து நாம் என்ன கற்றுக்கொண்டோமோ அதனை மீண்டும் இச்சமுதாயத்திற்கே திருப்பிச் செலுத்தும் வகையில் பல திட்டங்கள் பள்ளி கல்வித்துறையில் கொண்டுவரப்படுகின்றன.

நிதிச்சுமை இருக்கும் நிலையில் இப்படி புதிய திட்டங்களை அறிவித்துக் கொண்டே போனால் எப்படிச் சமாளிப்பது? மனிதவளம் அதற்கு தேவையான அளவுக்கு இருக்கிறதா?

“கல்வித் துறைக்காக செலவுகளை பற்றி கவலைப்படாதீர்கள். அது மாணவர்கள் எதிர்காலத்திற்கான அடித்தளத்தை உருவாக்குவதற்காகச் செய்யப்படும் முதலீடு. அதனால் அதற்கான எந்த நிதிச்சுமையும் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று முதல்வர் உத்தரவாதம் அளித்துள்ளார். அதனால் நிதிச்சுமை வராது. அதேபோல தற்போதுள்ள ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களுக்கான புதிய திட்டங்களால் புத்துணர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அதனால் மனிதவளத்துக்கும் பஞ்சமில்லை.

மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிகள், அதிகாரிகள், பள்ளிக் கல்வித்துறை ஆகிய ஐந்து தரப்பும் இணைந்து செயல்படும்போது எல்லாம் நல்லமுறையில் நடைபெறும். அந்த ஒருங்கிணைப்பை நாங்கள் சரியாகக் கையாண்டு வருகிறோம். அதனால் மாணவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைக்க முடியும் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

தமிழக அரசு தனது இலக்கை நோக்கிச் சரியாகப் பயணிக்கிறதா... அல்லது மத்திய அரசு, ஆளுநர் உள்ளிட்ட குறுக்கீடுகளால் பயணம் தடைபடுகிறதா?

அது குறித்தெல்லாம் நான் கருத்துச் சொல்லமுடியாது. ஆனால் நம்முடைய முதல்வர் அவர்கள் தனது இலக்கை நோக்கி மிக வேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறார். அதற்கு எந்த குறுக்கீடுகள் வந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தமிழ்நாட்டை முதலிடத்துக்கு கொண்டுசெல்லும் உத்வேகத்துடன் உழைத்துக் கொண்டிருக்கிறார்.

மாணவர்களின் தற்கொலைகள் அதிகம் நடக்கிறதே... தடுக்க வழியே இல்லையா?

9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவ - மாணவியருக்கு பள்ளிகள் திறப்பதற்கு முன்பே 5 நாள் கவுன்சலிங் வழங்க ஏற்பாடு செய்யும் திட்டத்துக்கு முதலமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம் ஒருசில காரணங்களுக்காக மாணவ - மாணவியர் தவறான முடிவுகளை எடுப்பது குறையும். மாணவர்கள் தங்களின் தனித்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். மதிப்பெண் மட்டுமே மாணவர்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்காது.

மாணவ - மாணவியர் கவனத்தை ஒழுங்குப்படுத்தி படிப்பில் முழுக் கவனத்தையும் செலுத்துவதற்கு அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் கலை நிகழ்ச்சிகள், மாதம் ஒருமுறை திரைப்படம் காண்பித்தல், மன அழுத்தத்தை போக்கி தன்னம்பிக்கை வளர்க்கும் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை நடத்தி இதில் வெற்றிபெறுபவர்களை வெளிநாடு அழைத்துச் செல்வதற்கும் முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம். இத்திட்டங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாகச் செயல்படுத்தப்படும். அரசு, தனியார் பள்ளிகளில் படிக்கும் 1 கோடியே 30 லட்சம் மாணவ - மாணவியரின் எதிர்காலத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை என்பதை நாங்கள் தெளிவாக உணர்ந்திருக்கிறோம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in