மலையாளத்தில் உங்களை அங்கீகரிக்க யாருமில்லையா?

‘ஓ மை டாக் ‘ மகிமா நம்பியார் பளிச் பதில்
மலையாளத்தில் உங்களை அங்கீகரிக்க யாருமில்லையா?

‘சாட்டை’ மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிவழகியாக அறிமுகமானவர் மகிமா. அதன்பிறகு பல தமிழ்ப் படங்களில் அவர் நடித்துவிட்டாலும் ‘குற்றம் 23’, ‘கொடி வீரன்’, ‘மகாமுனி’ படங்கள் அவரைத் தமிழ் ரசிகர்களுக்கு இன்னும் நெருக்கமாக்கின. தற்போது அருண் விஜய்யுடன் மீண்டும் இணைந்து ‘ஓ மை டாக்’ படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக சென்னை வந்திருந்தவர், காமதேனு வார இதழுக்காக அளித்த பிரத்யேகப் பேட்டியிலிருந்து...

சிறந்த நடிப்புக்காக இரண்டு சர்வதேச விருதுகளை ‘மகாமுனி’ உங்களுக்குப் பெற்றுக் கொடுத்திருக்கிறதே..?

ஆமாம்! ஸ்பெயின் நாட்டின் ‘மேட்ரிட்’ சர்வதேசப் படவிழாவில் சிறந்த துணை நடிகருக்கான விருதும் டொரண்டோ இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் சிறந்த நடிகருக்கான ஜூரி அவார்டும் எனக்குக் கிடைத்திருக்கின்றன. இந்த இரண்டு நாடுகளிலுமே என்னைக் கொண்டாடும் தமிழ் மக்களும் மலையாளிகளும் அதிகம் இருக்கிறார்கள். அதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. அமேசான் ப்ரைமில் இந்தியாவின் சிறந்த 25 த்ரில்லர் படங்களில் ஒன்றாக ‘மகாமுனி’ பார்வையாளர்களின் மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.

விருது வாங்கியதற்காக நன்றி சொல்ல ஒவ்வொரு முறையும் சாந்தகுமார் சாரை தேடும்போதெல்லாம் அவர் ஏங்கோ இமய மலையிலோ.. கைலாஷிலோ பயணம் செய்துகொண்டிருந்தார். அவருக்கு நன்றி சொல்வதெல்லாம் சம்பிரதாயமாகிவிடும். அவரது இயக்கத்தில் இன்னொரு படத்தில் நடித்துக்கொடுத்து என் நன்றிக்கடனை தீர்க்கவிரும்புகிறேன்.

வீடியோ பேட்டிகளில் யாரைப் பற்றியும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் பதில் சொல்கிறீர்களே..?

வீடியோ பேட்டிகள் எல்லாம் இன்று ரியாலிட்டி ஷோக்கள் போல் ஆகிவிட்டன. நடிகைகளை பேட்டிகளில் பெரும்பாலும் ஒரு போட்டியாளர்போல் ஆக்கிவிடுகிறார்கள். நானும் அப்படியே என்னை நினைத்துகொண்டு பதில் சொல்கிறேன். எனக்கும் பொழுதுபோக்கு, அதைப் பார்ப்பவர்களுக்கும் நல்ல பொழுதுபோக்கு. வெறென்ன சொல்ல!

’ஓ மை டாக்’ படத்தில் 10 வயது சிறுவனுக்கு அம்மாவாக நடித்திருக்கிறீர்களே..?

ரொம்ப முக்கியமான கதாபாத்திரம். அந்தப் படத்தில் எனக்கு மகனாக அருண் விஜய்யின் மகன் அர்னவ் நடித்திருக்கிறான். நான் இந்தக் கேரக்டரை செய்வேன் என்று அருண் விஜய்தான் எனக்குச் சிபாரிசு செய்திருக்கிறார். அந்தப் படத்தின் இயக்குநர் சரோவ் இப்படியொரு கதையா என்று ஆச்சரியப்பட வைத்தார். நான் நிறைய ‘டாக் மூவீஸ்’ பார்த்திருக்கிறேன். எனது சினிமா வாழ்க்கையில் இப்படியொரு படத்தில் நடித்ததற்காக எனது குடும்பம் என்றென்றைக்கும் பெருமைப்படும்.

அர்னவ் நிஜத்தில் எப்படியோ அப்படித்தான் படத்திலும் நடித்திருக்கிறான். அவனுடைய வீட்டில் ஆளுயுர நாய் வளர்க்கிறார்கள். அதனுடன் பயமில்லாமல் பழகுவானாம். படத்தில் அக்கம் பக்கத்தில் வம்பு செய்துவிட்டு வந்துவிடும் குறும்புப் பையன் கேரக்டர் அவனுக்கு. அவனுக்கும் எனக்குமான காட்சிகள் ரொம்பவே டச்சிங் ஆக இருக்கும். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த விஜய்குமார் சார், அருண் விஜய், அர்னவ் ஆகிய மூன்று தலைமுறையினர் ஒரே படத்தில் நடித்திருக்கும் படம் என்பதிலும் எனக்கு மகிழ்ச்சி. அதேபோல் சிறந்த படங்களைத் தயாரித்து வரும் சூர்யா சாரின் 2டி நிறுவனத்தில் முதல் முறையாக நடித்ததிலும் மகிழ்ச்சி. அர்னவுடன் நடித்த சைபீரின் ஹஸ்கி நாய்க் குட்டியை அவனுக்கே பரிசாகக் கொடுத்துவிட்டார் சூர்யா சார்!

நீண்ட நாட்களாக கேட்க நினைத்த கேள்வி இது. இயக்குநர் சாமியின் சர்ச்சைப் படங்களில் ஒன்றான ‘சிந்து சமவெளி’ படத்தில் அமலா பாலுக்கு பதிலாக நடிக்க முதலில் நீங்கள்தான் தேர்வாகியிருந்ததாக அப்போது செய்திகள் வெளியானதே அது உண்மைதானா?

அப்போது நான் 11-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அந்தக் கதையை அப்பாவிடம்தான் முதலில் சொன்னார்கள். அப்பா கதையைக் கேட்டுவிட்டு முதல் படம் இப்படித் தொடங்க வேண்டாம் என்று கூறிவிட்டார். பிறகு என்னை அந்தப் படத்துக்கு பரிந்துரைத்த அதே மாடல் கோ-ஆர்டினேட்டர்தான் ‘சாட்டை’ படத்துக்கும் வாய்ப்பு பெற்றுக்கொடுத்தார். நல்ல கேரக்டர்களுக்காகக் காத்திருந்தால் படங்களின் எண்ணிக்கை குறைந்தாலும் நீண்ட காலம் இத்துறையில் நிலைத்து இருக்கலாம் என்பதைத் தெரிந்துகொண்டிருக்கிறேன்.

தாய்மொழியான மலையாளத்தில் இதுவரை இரண்டே படங்களில்தான் நடித்திருக்கிறீர்கள்... மாலிவுட்டில் உங்களை அங்கீகரிக்க யாருமில்லையா?

எந்த மொழிப் படவுலகமாக இருந்தாலும் நமக்கு ஆதரவு கொடுக்க ஒரு நண்பர்கள் வட்டம் சினிமாவுலகில் அவசியமாகிறது. அது நல்ல, ஆரோக்கியமான நண்பர்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். தமிழில் அப்படி நண்பர்கள் வாய்த்தார்கள். அதனால் தமிழில் நடிப்பது எனக்கு இலகுவாக இருக்கிறது. எனக்கு இங்கே நல்ல கேரக்டர்களும் கிடைக்கின்றன. அதேநேரம், நான் அறிமுகமானது மலையாளத்தில் தான். அங்கே என்னை மதித்து அழைக்கும்போது நடிக்கிறேன். தற்போது இயக்குநர் எம்.பத்மகுமார் இயக்கும் படத்தில் நடிக்கிறேன்.

ஒரு தமிழ்ப் பெண்ணைப்போல் இவ்வளவு சுத்தமாக தமிழ் பேசுகிறீர்களே எப்படி?

நான் நடித்த படங்களின் இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள், என்னுடன் நடித்த சக நடிகர்கள் சொல்லிக்கொடுத்ததுதான் காரணம். தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிப்பதால் பேச்சுத் தமிழ் நன்றாக வந்தாலும், தமிழை எழுதவும் படிக்கவும் கற்றுகொள்ள வேண்டும் என்கிற ஆசை இன்னும் எனக்கு வசப்படவில்லை. விரைவில் அதைச் செய்து முடிப்பேன்.

தமிழில் வேறு எந்த பெரிய நடிகருடன் இணைந்து நடிக்க விரும்புகிறீர்கள்?

நான் அஜித் சாரோட ஃபேன். அவரோட நடிக்க வேண்டும். சூர்யா சாரோடு காதல் கதையில் நடிக்க வேண்டும். விஜய் சார் ஆக்‌ஷன் சூப்பராக செய்வார். தனுஷுடைய டான்ஸ் ரொம்பப் பிடிக்கும். இப்படி ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு விஷயத்துக்காகப் பிடிக்கும். இவங்க எல்லோரோடும் நடிக்க வேண்டும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in