இந்த ரிஸ்க் வேண்டாம் என்றேன்!

‘சாணிக்காயிதம்’ கீர்த்தி சுரேஷ் பேட்டி
கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்

’இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, ‘நடிகையர் திலகம்’ படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்று அசத்தியவர் கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் பிஸியாக இருக்கும் கீர்த்தி, தற்போது ஓடிடியில் வெளியாகியிருக்கும் ‘சாணிக்காயிதம்’ படத்தில் பொன்னி என்கிற சாமானியப் பெண்ணின் கதாபாத்திரத்திரத்தில் ரவுத்திரத்தைக் காட்டி ரசிகர்களைக் கதி கலங்க வைத்திருக்கிறார். காமதேனு மின்னிதழுக்காக அவர் அளித்த பிரத்யேகப் பேட்டி இது.

 ‘சாணிக்காயிதம்’ கீர்த்தி சுரேஷ்
‘சாணிக்காயிதம்’ கீர்த்தி சுரேஷ்

நீங்கள் சினிமாவில் தடம் பதித்து 10 ஆண்டுகளைக் கடக்கப் போகிறீர்கள்... இல்லையா?

நீங்கள் சொல்லும்போதுதான் 10 ஆண்டுகள் ஆகிவிட்டதா என்று ஆச்சரியமாக இருக்கிறது. நான் இப்போது வரை செய்திருக்கும் கதாபாத்திரங்கள் ஒரு தொடக்கமாக மட்டுமே இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன். அப்படி நினைத்தால் தான் இன்னும் நீண்ட தூரம் ஓட முடியும் என்று நினைக்கிறேன். கரோனா வேறு இரண்டு வருடங்களைத் திருடிக்கொண்டதால், வருடங்களின் எண்ணிக்கையைக் கூறி பீதியைக் கிளப்பாதீர்கள்.

உடலை அதிகம் எக்ஸ்போஸ் செய்துகொள்ளாமல், மரியாதையான தோற்றத்தில் ஆனால், கிளாமராகத் தோன்றவேண்டும் என்பதை உங்களுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள்?

சினிமாவில் அம்மாவின் பாதையும் அப்படித்தான் அமைந்தது. விவரம் தெரிந்தபிறகு அம்மா நடித்த படங்களைப் பார்த்தபிறகு அவர் எப்படி தன்னுடைய கெரியரை கொண்டு சென்றிருக்கிறார் என்பதைப் பார்த்து அவர் மீது எனக்கு பெருமை உண்டு. அதேசமயம், அம்மா காலம் போல் இல்லாமல், நவீனம் கலந்த பெண்ணாக என்னை நான் முன்னிறுத்திகொள்ள விரும்புகிறேன்.

அம்மா, படங்களில் நடித்ததுடன் சரி, நான் விளம்பரங்களிலும் நடிக்கிறேன். மியூசிக் வீடியோக்களில் நடிக்கிறேன்; ஆடுகிறேன். இவை எல்லாவற்றிலும் நமக்கென்று ஒரு எல்லை இருக்கிறது. ஒரு ‘கம்போர்ட் ஸோன்’ இருக்கிறது. அதற்குள் என் உலகம் இருக்கும். அதை எப்போதுமே தாண்டிச் செல்லும் எண்ணம் எனக்கு இல்லை.

தேசிய விருதுபெற்ற நடிகை என்ற அங்கீகாரத்துக்குப் பிறகு நீங்கள் எதிர்கொண்டுவரும் சவால்கள் என்னவாக இருக்கின்றன?

‘நடிகையர் திலக’த்துக்காக தேசிய விருது பெற்ற பிறகு நான் சந்தித்த சவால் வித்தியாசமானது. விருதுக்குப் பிறகு பெண் மையப் படங்கள் அதிகமாக என்னை நோக்கி வந்துவிட்டன. நானும் அவற்றில் தொடர்ந்து நடித்துவிட்டேன். அதனால் கமர்ஷியல் படங்கள் என்னை விட்டு தூரமாகப் போய்விட்டன. இதனால், அதிக ஆடியன்ஸை சென்று அடைவது என்பது சவாலாகிவிட்டது.

‘சாணிக்காயிதம்’ செல்வராகவன், கீர்த்தி சுரேஷ்
‘சாணிக்காயிதம்’ செல்வராகவன், கீர்த்தி சுரேஷ்

மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான் மகேஷ் பாபு ஜோடியாக ’சர்காரு வாரி பட்டா’ படத்தில் நடித்திருக்கிறேன். மே 12-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அந்தப் படத்தில் நடித்து முடித்த பிறகே கமர்ஷியல் படங்கள் வரத் தொடங்கியிருக்கின்றன. நான் கமர்ஷியல் படங்களில்தான் அதிகமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், விருது என்னை வேறு பக்கம் இழுத்துக்கொண்டு போய்விட்டது. அதுவும் நல்லதுக்குத்தான்.

‘சாணிக்காயிதம்’ கதையை இயக்குநர் சொன்னபோது உங்களுடைய பொன்னி கதாபாத்திரம் பற்றிக் கேட்டதும் எப்படி உணர்ந்தீர்கள்?

கொஞ்சம் ஷாக் ஆகத்தான் இருந்தது. அதேநேரம், பொன்னி கதாபாத்திரத்துடன் என்னால் எமோஷனலாக கனெக்ட் ஆக முடிந்தது. எந்தவொரு பெண்ணுக்கும் இப்படியொரு துயரம் நடந்துவிடக் கூடாது என்று ஆடியன்ஸ் நினைப்பார்கள் என்றாலும், நான் இப்படியொரு கதாபாத்திரம் செய்தால் ஆடியன்ஸ் ஏற்றுக்கொள்வார்களா என்கிற சந்தேகம் எனக்குள் இருந்தது. அதனால், “இது என்னுடைய ஸோன் கிடையாது... ரிஸ்க் வேண்டாம்” என்று இயக்குநர் அருணிடம் சொன்னேன்.

அதற்கு அவர், “அதனால்தான் நீங்கள் நடிக்க வேண்டும் என்கிறேன். உங்கள் ஸோனிலிருந்து வெளியே வாங்க... அப்புறம் பாருங்க’’ என்று என்னை சம்மதிக்க வைத்துவிட்டார். அவரது நம்பிக்கைதான் என்னை நம்பவைத்தது. ட்ரைலருக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்தபிறகுதான் நிம்மதி வந்தது. இப்போது படம் வெளியாகி ரசிகர்கள் என்னைப் பாராட்டித் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு ஆக்டராக செல்வராகவனுடைய நடிப்பு எப்படியிருந்தது?

ஷூட்டிங்கில் ரொம்ப சாதாரணமா, அதிகம் பேசமா இருப்பார். அருண் என்ன எதிர்பார்க்கிறார்னு தெரிஞ்சுக்கிட்டு அதை மட்டும் கச்சிதமா செஞ்சிடுவார். எனக்கும் அவருக்குமான காட்சிகள்ல அவர் நடிக்கவே இல்லை. சங்கையாவாதான் எனக்குத் தெரிஞ்சார். அத்தனை அழகா நடிச்சு அசத்திடுவார்.

உங்கள் கதாபாத்திரங்களுக்கு நீங்களே டப்பிங் செய்வதில் இருக்கக்கூடிய அணுகூலம் என்னவென்று நினைக்கிறீர்கள்?

ஸ்பாட்டில் நடிப்பதும் 60 சதவீதம் மட்டும்தான். 40 சதவீதம் நாம் பேசும் டப்பிங் மூலம்தான் ஒரு கதாபாத்திரத்துக்கான 100 சதவீதம் நடிப்பு முழுமை பெருகிறது. நான் டப்பிங்கில் மிகவும் கவனமாகவும் டெடிகேஷனாகவும் இருப்பேன். ஷூட்டிங்கில் இருக்கிற அதே மனநிலைதான் எனக்கு டப்பிங் ஸ்டுடியோவிலும் இருக்கும்.

உதயநிதியின் ‘மாமனிதன்’ படத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிப்பது எப்படியிருக்கிறது?

சேலத்தில் 5-வது நாளாக ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. அங்கிருந்துதான் இப்போது உங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். முதல் 4 நாட்கள் பாடல் காட்சி ஒன்றைப் படம் பிடித்தார் மாரி சார். உதய் சாருடன் எனக்கு இன்னும் காம்பினேஷன் காட்சிகள் வரவில்லை. அவருடன் நடிப்பதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

 ‘சாணிக்காயிதம்’ செல்வராகவன், கீர்த்தி சுரேஷ்
‘சாணிக்காயிதம்’ செல்வராகவன், கீர்த்தி சுரேஷ்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in