சித்தாந்த மாற்றத்துக்குத் தயாராகிறதா மார்க்சிஸ்ட் கட்சி?

பேராசிரியர் அருணன் பேட்டி
அருணன்
அருணன்

மதுரையில் 23-வது மாநில மாநாட்டுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. கட்சியை வளர்க்கவும், பாஜகவை வீழ்த்தவும் இந்த மாநாட்டில் புதிய வியூகங்கங்கள் வகுக்கப்படும் என்று மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்திருக்கிறார். வாட்ஸ் - அப் ஸ்டேட்டஸில்கூட ‘வெல்வோமே’ என்ற மாநாட்டுப் பாடலை வைத்துக்கொண்டு, பொதுவுடமைத் தோழர்கள் ஊர் ஊராக செங்கொடி ஏற்றுகிறார்கள். பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிற இம்மாநாடு குறித்து, அக்கட்சியின் அறிவுஜீவி முகங்களில் ஒருவரான பேராசிரியர் அருணனிடம் பேசினோம். இனி பேட்டி...

இன்றைய அரசியல் சூழலில் மதுரை மாநாடு எந்த வகையில் முக்கியமானது என்று விளக்கலாமா?

அகில இந்திய அளவில் இந்திய மக்களுடைய பிரதான எதிரியாக இருப்பது பாஜகவும், அதை ஆட்டிப் படைக்கிற ஆர்எஸ்எஸ்சும்தான். கிறிஸ்தவர்களையும், முஸ்லிம்களையும் எதிரிகளாகக் கட்டமைத்து இந்து மக்களைத் திரட்டுகிற அவர்களின் ஆட்சி, அந்த இந்து மக்களுக்கும் எதிரானதாகத்தான் இருக்கிறது. பாஜகவின் சமூக, பொருளாதார, சமூகநீதிக் கொள்கையால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் இந்துக்கள்தான். ஏழை இந்துக்களின் வயிற்றில் அடிக்கிற இவர்கள் எப்படி இந்துக்களுக்கான கட்சியாக இருக்க முடியும்? இப்போதே இப்படி என்றால் இவர்கள் அமைக்கத் துடிக்கிற இந்து ராஷ்டிரம் என்ன லட்சணத்தில் இருக்கும்? என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு நமக்கிருக்கிறது. தமிழ்நாட்டில் பாஜக பெரிய சக்தி இல்லை என்றாலும்கூட, ஒன்றிய ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி நாங்கள்தான் திமுகவுக்கான பிரதான எதிர்க்கட்சி என்று காட்டிக்கொள்ள பெருமுயற்சியில் இறங்கியிருக்கிறது. இதுகுறித்து முக்கியமாக மாநாட்டில் விவாதிக்க இருக்கிறோம்.

தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி மாறி, திமுக ஆட்சி அமைந்திருக்கிறது. இந்த புதிய சூழலில் எந்த மாதிரியான நிலைப்பாடுகளை எடுப்பது என்பது குறித்தும் விவாதிக்கப்படும் என்கிறார்களே?

ஆம். அதிமுக ஆட்சி அகற்றப்பட்டிருப்பது தமிழ்நாட்டுக்கு நல்ல விஷயம். காரணம், அந்தக் கட்சியின் பெயரில் அண்ணா, திராவிடம் எல்லாம் இருந்தாலும் நடைமுறையில் அண்ணாவின் மாநில சுயாட்சி, திராவிடத்தின் சமூகநீதி கொள்கைகளை எல்லாம் விட்டுவிட்டு பாஜக தயவில் வண்டி ஓட்டினார்கள். அந்த ஆட்சியை அகற்றியதில் கம்யூனிஸ்ட்களுக்கும் பங்குண்டு. இப்போது திமுக ஆட்சி அமைந்த பிறகு நாம் எப்படி இயங்கப் போகிறோம் என்பது பற்றியும் மாநாடு விவாதித்து நல்ல முடிவுகளை எடுக்கும்.

ஒன்றிய பாஜக அரசை வீழ்த்துவதற்கு திமுகவும் பயன்படும், பயன்பட வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டே இந்த விவாதம் நடைபெறும். திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதில் எந்தளவுக்கு உறுதியாக இருக்கிறோமோ, அதே அளவுக்கு அதற்கான நிதியைப் பெறுவதற்கு ஒன்றிய அரசிடம் வாதாட வேண்டிய கடமை இருப்பதையும் உணர்கிறோம்.

அகில இந்திய அளவில் கம்யூனிஸ்ட் கட்சி பின்னடைவைச் சந்தித்திருக்கிற இந்தத் தருணத்தில் கட்சி வளர்ச்சி பற்றி என்னென்ன விஷயங்கள் விவாதிக்கப்படும் என்று கருதுகிறீர்கள்?

மார்க்சிஸ்ட்கள் எழுச்சி பெறுவது, வெறும் கட்சியின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, தமிழர்களின், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் பயன்படும். ஏனென்றால் 1956-ல் இருந்தே தமிழுக்காக குரல் கொடுத்துவருகிற இயக்கம் இது. சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்று குரல் கொடுத்ததில் தொடங்கி, கலைஞரின் மாநில சுயாட்சிக் கொள்கையை பெரியளவில் முன்னெடுத்துச் சென்றது உள்பட இந்த மண்ணுக்கான அரசியலை தொடர்ந்து முன்னெடுத்தது மார்க்சிஸ்ட்கள்தான்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் தெளிவாகச் சொல்லிவிட்டார், அரசாங்கத்தின் வேலை தொழில்களை கண்காணிப்பதுதானே ஒழிய, தொழில் நடத்துவது அல்ல என்று. அதாவது டீயே இல்லாமல் டீக்கடையையும், விமானங்களே இல்லாமல் விமானப் போக்குவரத்துத்துறையும் நடத்துவது மாதிரி. பொதுத்துறையை ஒழிக்கிறபோது சமூகநீதியும் ஒழிந்துவிடும் என்பதால், மாற்றுப் பொருளாதாரக் கொள்கையை முன்வைத்து தமிழக மக்களை அணிதிரட்டுகிற முயற்சியில் மார்க்சிஸ்ட் கட்சி ஈடுபடும்.

பாஜகவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசிடம் மாற்றுப் பொருளாதாரக் கொள்கை குறித்த புரிதல் இருப்பதாக நினைக்கிறீர்களா? அல்லது அதைப் புரியவைக்கிற கடமை மார்க்சிஸ்ட்களுக்கு இருக்கிறதா?

புதிய பொருளாதாரக் கொள்கையானது நரசிம்மராவ் காலத்தில் தொடங்கி, மன்மோகன்சிங் காலத்தில் தொடர்ந்தது என்பதெல்லாம் உண்மைதான். ஆனால், அவர்கள் இவர்களைப் போல வெளிப்படையாக, அரசு தொழிலே நடத்தாது, பொதுத்துறையே இருக்காது, எல்லாம் தனியாருக்குத்தான் என்று அதிதீவிர வலதுசாரி நிலைப்பாட்டை எடுத்ததில்லை. நாங்கள் காங்கிரஸைப் பார்த்துக் கேட்பது, நேருவினுடைய கோட்பாட்டுக்கு உறுதியாக இருங்கள். காரணம், நேருவின் கொள்கைதான் பாஜகவின் சித்தாந்தத்துக்கு எதிர்ப்பதம். ஏன் பாஜகவுக்கு நேருவைப் பிடிக்கவில்லை? வாரிசு அரசியல் எல்லாம் இல்லை. மக்களிடம் மத நம்பிக்கை இருக்கும். ஆனால் அரசு மதச்சார்பற்றதாக இருக்கும், தனியார் துறையுடன் பொதுத்துறையையும் வளர்த்தெடுப்போம், அணி சாராக்கொள்கை போன்ற கொள்கைகள் பிடிக்காமல்தான் நேருவைத் திட்டுகிறார்கள். அந்தக் கொள்கைகள்தான் இன்றைக்கு காங்கிரசுக்குத் தேவை. நேருவைப் பற்றிய வெறுப்புப் பரப்புரையை சங் பரிவாரங்கள் செய்கிறபோது, நேரு குடும்பம் இந்த நாட்டுக்காக என்னென்ன தியாகங்களைச் செய்தது என்று பேசுவது மட்டும் போதாது. நேருவின் அடிப்படை கோட்பாடுகளைத் தூக்கிப்பிடிக்க வேண்டும். இதைத்தான் நாங்கள் காங்கிரசிடம் வலியுறுத்தப் போகிறோம்.

கோயில் திருவிழாக்களில் பாஜகவினர் காவிக்கொடியை கட்டி, இந்துக்கள் என்றாலே பாஜகவினர்தான் என்கிற பிரமையை உருவாக்கப் பார்க்கிறார்கள். இந்தச் சதியை முறியடிக்க நாங்களும் திருவிழாக்களில் பங்கேற்பது குறித்து முடிவெடுப்போம் என்று மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கூறியிருக்கிறாரே?

அந்தப் பேட்டியைப் பார்த்தேன். அவரிடம் நான் இன்னும் இதுகுறித்துப் பேசவில்லை. அவர்தான் இதுகுறித்து முழுமையாக எடுத்துச் சொல்ல வேண்டும். மக்களிடம் மதநம்பிக்கை காலங்காலமாக இருக்கிறது, இப்போதும் நீடிக்கிறது. இந்தக் கடவுள் நம்பிக்கை தொழிலாளி வர்க்கத்திடமும் இருக்கிறது என்பதை நாங்கள் புரிந்துகொண்டிருக்கிறோம். ஆனால், பாஜக மக்களின் மத நம்பிக்கையை பிற மத வெறுப்பாக மாற்றப் பார்க்கிறது. கோயில் திருவிழாக்களில் முஸ்லிம்கள் கடைபோடக்கூடாது என்று சொல்கிறது. ஒரு அரசியல் கட்சியாக இதை எப்படித் தடுப்பது என்பது குறித்தும் மாநாட்டில் விவாதித்து, எங்களுடைய மாற்றை அறிவிப்போம்.

பாஜகவையும், ஆர்எஸ்எஸ்ஐயும் அரசியல் களத்தில் மட்டுமல்லாது, பண்பாட்டுத் தளத்திலும் எதிர்கொள்ள வேண்டியதிருக்கிறது. அதைத் தமிழ்நாட்டுச் சூழலுக்கு ஏற்ப எப்படி எதிர்கொள்வது என்பது பற்றியும் மாநாடு விவாதிக்கும் என்றே எங்கள் மாநில செயலாளர் சொல்லியிருக்கிறார்.

பெரும் சித்தாந்த மாற்றத்துக்கு கம்யூனிஸ்ட் தயாராகிறது என்றெல்லாம் சொல்கிறார்களே?

ஒரு ஆங்கிலப் பத்திரிகையில், 'ஐடலாஜிக்கல் ஷிஃப்ட்' என்று தலைப்பு போட்டதால் இப்படிக் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். தமிழில் அவர் அளித்த பேட்டியில் எங்கள் சித்தாந்தத்தில் ஒரு பெரிய மாறுதல் என்றெல்லாம் சொல்லவில்லை. அது பரபரப்புக்காக போடப்பட்ட தலைப்பு என்று நினைக்கிறேன். ஆர்எஸ்எஸ் அமைப்பு தன்னைக் கலாச்சார அமைப்பு என்றுதானே சொல்லிக்கொள்கிறது? எனவே, கலாச்சாரத் தளத்திலும் அவர்களை எப்படி எதிர்கொள்வது என்று விவாதிப்போம் என்றுதான் எங்கள் மாநிலச் செயலாளர் சொல்லியிருக்கிறார். அதன் விரிவாக்கம் என்ன என்பதை மாநாடுதான் தீர்மானிக்கும்.

பெண்களுக்குத் தமிழ்நாட்டில் பாதுகாப்பே இல்லை என்று பாஜக சொல்கிறது. தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெறும் பாலியல் வன்முறைகளை மார்க்சிஸ்ட் எப்படிப் பார்க்கிறது?

இந்தப் பிரச்சினையை 2 வகையாகப் பார்க்க வேண்டும். சட்டம் - ஒழுங்கு பிரச்சினையாகப் பார்த்தால், இது மிகக்கொடுமையான கிரிமினல் குற்றம். ஒரு பெண்ணை பாலியல் வன்முறைக்குள்ளாக்குவது, அதை வீடியோவாகப் பதிவுசெய்வது, அதைக் காட்டியே தொடர்ந்து பாலியல் கொடூரத்தை நிகழ்த்துவது என்பது மன்னிக்கவே முடியாத குற்றம். பொள்ளாச்சியில் நடந்த அதே மாதிரியான சம்பவம் இப்போது விருதுநகரிலும் நடந்திருக்கிறது. ஒரே ஒரு ஆறுதல், முதல்வர் சட்டமன்றத்தில் பேசியது. “பொள்ளாச்சி சம்பவத்தை நீங்கள் சாதாரணமாக கையாண்டது போல நாங்கள் இந்த வழக்கைக் கையாள மாட்டோம். மிகக்கடுமையான தண்டனை வாங்கித்தந்து, பாலியல் வழக்கை எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கான முன்மாதிரியாக இந்த வழக்கை நடத்துவோம்” என்று சொல்லியிருக்கிறார் முதல்வர்.

இந்தக் கொடூர கிரிமினல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையைப் பெற்றுத்தர அரசும், காவல்துறையும் தனது முழு சக்தியைப் பயன்படுத்த வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு. அதேநேரத்தில், சிவில் சமூகத்தில் நாம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இன்னமும் நாம் பெண்களுக்குத்தான் ஒழுக்கத்தைப் போதித்துக்கொண்டிருக்கிறோம். பெண்களை சம மனுஷியாக, ஆணுக்குச் சமமாக நடத்து என்று முதலில் ஆண்களுக்குப் போதிக்க வேண்டும். பாலியல் வன்முறை என்பது எவ்வளவு இழிவான செயல், எவ்வளவு மோசமான குற்றம் என்று சொல்லித்தர வேண்டும். அதைப் பள்ளிகளில் இருந்து மட்டுல்ல, குடும்பங்களில் இருந்தே போதிக்க வேண்டும்.

முல்லை பெரியாறு பிரச்சினையில் தமிழக கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாகிறதே. தமிழக உணர்வை கேரள அரசிடம் எடுத்துரைப்பீர்களா?

இதில் பாஜக தேவையில்லாமல் அரசியல் செய்கிறது. கர்நாடக பாஜக அரசோடு ஒப்பிட்டால், கேரள அரசு எவ்வளவு நாகரிகமாக நடந்துகொள்கிறது என்பது புரியும். காவிரி விவகாரமே முடியாதபோது, மேகேதாட்டுவில் அணை கட்ட ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது போல கேரளா ஒருபோதும் செயல்படாது. தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருப்பதுபோல, கேரளாவில் மார்க்சிஸ்ட் தனித்து ஆட்சி நடத்தவில்லை. அங்கே நடப்பது கூட்டணி ஆட்சி. எனவேதான், சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன. மற்றபடி உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தியது கேரளாவில் இடதுசாரி அரசு அமைந்த பிறகுதான். அதை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு.

தமிழக முதல்வரும், கேரள முதல்வரும் நல்ல நட்புணர்வோடு இருக்கிறார்கள். ஸ்டாலினின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு பினராயி வந்ததுபோல, கேரள கம்யூனிஸ்ட் மாநில மாநாட்டையொட்டி நடக்கும் கருத்தரங்கில் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். அப்போது இதுகுறித்துப் பேசுவார்கள் என்று நம்புகிறோம். பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு எட்டப்படவில்லை என்றாலும்கூட, நீதிமன்ற உத்தரவை இருமாநில அரசுகளும் ஏற்று நடக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in