அதிமுகவினர்தான் மனநோய்க்கு ஆளாகிவிட்டார்கள்!

திருப்பித் தாக்கும் நாஞ்சில் சம்பத்
அதிமுகவினர்தான் மனநோய்க்கு ஆளாகிவிட்டார்கள்!

“நாஞ்சில் சம்பத்திற்கு மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கிறோம். அதனால் அவரை இனி அரசியல் மேடைகளில் பேச அனுமதிக்கக் கூடாது” என அதிமுக முன்னாள் எம்எல்ஏவும் வழக்கறிஞருமான இன்பதுரை டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்திருப்பது அரசியலில் கடும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து நாஞ்சில் சம்பத்திடம் காமதேனுவுக்காகப் பேசினோம். வழக்கம் போல மடை திறந்த வெள்ளமாய் கொட்டினார். இனி அவரது பேட்டி...

இன்பதுரை
இன்பதுரை

அதிமுக உங்கள் மனநிலை பற்றி காவல்துறையில் அளித்திருக்கும் புகார் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

அதிமுகவினர் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை இது உணர்த்துகிறது. நோக்கமும், கொள்கையும் இல்லாதவர்களின் கையில் அந்தக் கட்சி சிக்கிவிட்டதை இது காட்டுகிறது. நான் மார்ச் 17-ம் தேதி, காரைக்குடி கம்பன் கழகத்தில், ‘கம்பன் கவிதை’ என்ற தலைப்பில் உரையாற்றினேன். 18-ம் தேதி, இளையான்குடி அரிமாசங்கத்தில் ‘என் கடன் பணிசெய்து கிடப்பதே’ என்னும் தலைப்பில் பேசினேன். 19-ம் தேதி குடந்தை மாநகரில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் கூட்டத்தில் பேசினேன். 20-ம் தேதி புதுக்கோட்டையில் கலைஞர் தமிழ்ச் சங்கத்தில் பேராசிரியர் கலியபெருமாளும், நானும் ‘பல்லாண்டு பாடுகிறேன்... பைந்தமிழால் வாழ்த்துகிறேன்’ என்னும் தலைப்பில் முதல்வரை புகழ்ந்து பேசினோம். இப்படி நாளும் ஆயிரக்கணக்கான மக்களைச் சந்தித்து அரசியல் களத்திலும், இலக்கியத் தளத்திலும் இயங்கிவருகிற என்னை மனநலம் பாதித்தவர் போல் சித்தரிக்கும் அதிமுகவினர் எவ்வளவு பெரிய மனநோய்க்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பது இதன்மூலம் அப்பட்டமாகத் தெரிகிறது.

ஒரு பொதுக்கூட்டத்தில் நான் பேசினால் அதற்கு எதிர்வினையாற்ற இன்னொரு பொதுக்கூட்டம் போடுவதுதான் அரசியல் ஆண்மை. அரசியல் நாகரிகமும் அதுதான். அப்படி பதில் சொல்ல திராணியற்ற புறம்போக்குகள் அரசியல் அநாமதேயங்கள் ஆகாயத்தை அழுக்காக்க முயற்சிக்கின்றன. நான் ஆகாயம். இவர்கள் அண்டங் காக்கைகள். என்னை அழுக்காக்க முடியாது. குச்சிகள் பட்டு வானம் கிழிவதில்லை. எச்சில்கள் துப்பி எரிமலை சரிவதும் இல்லை. ஆகவே இதை நான் கண்டுகொள்ளவோ, கவனத்தில் எடுத்துக்கொள்ளவோ இல்லை.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்தும் சோதனைகளை பழிவாங்கும் நடவடிக்கை என்கிறார்களே..?

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முகாந்திரத்தின் அடிப்படையில் தான் ரெய்டு நடத்துகிறார்கள். என்னைக்கேட்டால் இவ்வளவு கொள்ளைக்கும் தலைமை தாங்கியது எடப்பாடி பழனிசாமிதான். பல்லாயிரம் கோடி ரூபாயை நாட்டு மக்களின் வரிப்பணத்தில் மஞ்சள் குளித்திருக்கிற இந்த சம்பல் பள்ளத்தாக்கின் கொள்ளைக் கும்பலுக்கு தலைமை தாங்கி வழிநடத்தியதே அவர் தான். அவர் இன்னும் ரெய்டுக்கு உட்படுத்தப்படவில்லை. எனவே, லஞ்ச ஒழிப்புத்துறையின் வேகம் இன்னும் அதிகமாக வேண்டும். மிகப்பெரிய ஊழல்களைச் செய்திருக்கிறார்கள். தமிழகத்தின் நிர்வாகத்தை நிர்வாணம் ஆக்கிவிட்டுப் போயிருக்கிறார்கள். தங்களைப் பாதுகாத்துக்கொள்ள பாஜகவோடு கூட்டணி வைத்துக்கொண்டு தப்பாட்டம் ஆடுகிறார்கள். இவர்கள் அடித்த கொள்ளைக்கு கணக்கு இல்லை. அதனால் ரெய்டு இன்னும் தீவிரப்படவே வேண்டும்.

உங்கள் பார்வையில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை எப்படி இருந்தது?

நூறாண்டுகால அரசியல் வரலாற்றில் மண்சார்ந்தும், மக்களின் வாழ்வு சார்ந்தும் மிகப்பெரிய பொருளாதார அறிஞர் நிதிநிலை தாக்கல் செய்தால் எந்த அளவிற்கு இருக்குமோ, அந்த அளவிற்கு ஒரு பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சமர்பித்துள்ளார். இதை அனைத்துத்தரப்பு மக்களும் வரவேற்கிறார்கள். இந்த பட்ஜெட் தமிழக மக்களுக்கு பாதுகாப்பு உணர்வைக் கொடுத்திருக்கிறது. ஒரு பொறுப்புள்ள அரசாங்கத்தின் நிழலில் நாம் இருக்கிறோம் என்னும் நம்பிக்கையை தமிழக மக்களுக்குத் தந்திருக்கிறது.

ஆனால், தாலிக்குத் தங்கம் போன்ற திட்டங்கள் கைவிடப்பட்டதாக அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கண்டிக்கின்றனவே?

தாலிக்குத் தங்கம் திட்டத்திலேயே முந்தைய அதிமுகவினர், வாங்கிய தங்கத்தை சுருட்டிவிட்டார்கள். ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால், என் மருமகளுக்குத் திருமணம் முடிந்து முழுதாக மூன்றாண்டுகள் முடிந்த பின்புதான் தங்கமும், நிதி உதவியும் கொடுத்தார்கள். தாலிக்குத் தங்கம் என்றால் திருமணம் நடத்த பத்திரிகை அடித்த உடனேயே அரசுக்கு மனுசெய்து அந்த திருமணத்தை நடத்த நிதியும், மாங்கல்யத்திற்கு தங்கமும் பயன்படவேண்டும். ஆனால், எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் மூன்று வருடம் கழித்தே கிடைத்தது. அதற்கு நானும், என் குடும்பமும் சாட்சி.

ஏன் எப்படி ஆகிறதென்றால் அந்தத் தங்கத்தை எப்படி கொள்ளையடிக்கலாம் எனத் திட்டமிட்டார்கள். இவர்களே போலியாக கல்யாணப் பத்திரிகை அடித்து, கல்யாணம் நடந்ததுபோல் ஆவணங்கள் தயாரித்து பல முறைகேடுகளை செய்துள்ளனர். தமிழக முதல்வர் இந்த முறைகேடுகளுக்கு பூர்வாங்க விசாரணை வைத்தால் எத்தனை கிலோ தங்கத்தை கொள்ளையடித்திருக்கிறார்கள் என்பது தெரியவரும். வயலுக்கு இரைத்த நீர் வயலுக்கே வராமல் போனதால் வயலுக்கு இரைக்கும் நீரை வயலுக்கே கொண்டுவரத்தான் எந்த பெண்களுக்கு திருமணத்திற்கு உதவி எனக் கருதுகிறோமோ, அந்தப் பெண்கள் கல்வியை மேம்படுத்த கல்லூரிக்குச் செல்லும் மாணவிகளுக்கு உதவித்தொகை அறிவித்திருக்கிறார்கள். இதனால் பெண் கல்வியில் தமிழகம் இந்தியாவிற்கே முன்னுதாரணமாக வரப்போகிறது. சமூக விஞ்ஞானியால் தான் இப்படி நல்ல திட்டங்களைத் தரமுடியும். அப்படி ஒரு சமூக விஞ்ஞானியாக ஸ்டாலின் இருக்கிறார்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

உள்ளாட்சித் தேர்தல் முடிவுக்குப் பின் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மீதே தடாலடி நடவடிக்கை எடுத்திருப்பதன் மூலம் ஜெயலலிதா பாணி அரசியலை கையில் எடுக்கிறாரா ஸ்டாலின்?

ராணுவக் கட்டுப்பாடுள்ள கட்சி திமுக. அதில் பதவி ஆசைக்குப் பலியாகிப் போன சிலர் தலைமையின் கட்டளையை மதித்து நடக்க முடியாத அளவுக்கு போனார்கள். அந்தளவுக்கு சூழல் அவர்களைத் தள்ளியிருக்கிறது. அவர்களை கண்டிக்கின்ற என்பதைவிட தண்டிக்கின்றவகையில் இந்த நடவடிக்கையை எடுத்துவருகிறார். யாராக இருந்தாலும் நடவடிக்கை பாயும் என்பது ஒரு அற்புதமான நிர்வாகத்தைத் தருகின்ற முதலமைச்சரின் அணுகுமுறையையே காட்டுகின்றது. கூட்டணி கட்சிகளுக்காக அவர் செய்த செயல், மு.க.ஸ்டாலின் மனு நீதிச்சோழனின் மறு அவதாரம் எடுக்கிறார் என்பதையே காட்டுகிறது.

அதிமுகவை பின்னுக்குத் தள்ளி, பாஜக தான் தமிழகத்தில் பிரதான எதிர்கட்சி போல் தோற்றமளிக்கிறதே?

கான மயிலாட அதைக் கண்டிருந்த வான்கோழி தானும் அதுபோல பாவித்து தன்னுடைய பொல்லாத சிறகை விரிக்கும் என்பதுபோலத்தான் மாயத்தோற்றத்தை உருவாக்க அண்ணாமலை முயற்சிக்கிறார். எந்தக் காலத்திலும் வெறுப்பு, வேற்றுமை, மத அரசியலை இந்த மண்ணில் நிலைநிறுத்துவதற்கு தமிழக மக்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த உடன் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்துகிறார்கள். ஆனால், ஆகாய சூதாடிகளாக நாட்டு மக்களை ஏய்த்துப் பிழைக்கின்ற காவிக் கும்பலை தமிழக மக்கள் ஒருநாளும் ஏற்கமாட்டார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in