நான் சொன்னதால் தான் அசோக் செல்வன் நடிக்க சம்மதித்தார்

‘ஹாஸ்டல்’ ப்ரியா பவானி சங்கர் பேட்டி
ப்ரியா பவானி சங்கர்
ப்ரியா பவானி சங்கர்

செய்தி வாசிப்பாளராக ஊடக வாழ்க்கையைத் தொடங்கியவர் ப்ரியா பவானி சங்கர். பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ தொடரின் மூலம் கிடைத்த புகழ் வெளிச்சத்தின் வழியாக வெள்ளித்திரைக்குள் அடி வைத்தார். ‘மேயாத மான்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, கார்த்தியுடன் ‘கடைக்குட்டி சிங்கம்’, எஸ்.ஜே. சூர்யாவுடன் ‘மான்ஸ்டர்’ அருண் விஜய்யுடன் ‘மாபியா: சேப்டர் 1’ என பிரபலமான நடிகர்களின் படங்களில் விறுவிறுவென்று இடம் பிடித்தார். இதற்கிடையில் ‘பிளட் மணி’ என்கிற பெண் மையப் படத்திலும் நடித்தார். தற்போது அவருடைய நடிப்பில் வெளியாகவிருக்கிறது ‘ஹாஸ்டல்’ திரைப்படம். அதையொட்டி காமதேனு மின்னிதழுக்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து...

இன்ஸ்டாகிராமில் விரும்பித்தானே ரசிகர்களுடன் உரையாடினீர்கள்! உங்கள் உள்ளாடை பற்றி கேள்விகேட்ட ரசிகர் மீது அவ்வளவு கோபத்தைக் கொட்டிவிட்டீர்களே?

ஆமாம்! பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு! இதே கேள்வியை பலமுறை எதிர்கொண்டிருக்கிறேன். அப்போதெல்லாம் பொறுமை காத்தேன். அந்தப் பொறுமையின் பின்னால் இருக்கும் ‘என்னுடைய அமைதியாகக் கடந்துபோதல்’ என்பதைப் புரிந்துகொள்ள முடியாத சிலர்தான் இப்படிப்பட்ட அறியாமையுடன் கேட்கிறார்கள். இதை எல்லா முறையும் நான் மவுனமாகக் கடக்கமுடியாதல்லவா?

‘பிளட் மணி’ படத்தில் ஒரு ஊடகவியலாளராக நடித்த அனுபவம் எப்படியிருந்தது?

என்னுடைய ஊடக நாட்களை மீண்டும் ‘ரீகிரியேட்’ செய்ததுபோல் இருந்தது. நான் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தபோது, செய்தி வாசிக்கும் ஒரு அமர்வுக்கு 400 ரூபாய் ஊதியமாகக் கிடைக்கும். அந்தப் பணத்தை வீட்டில் கொடுக்காமல் நானே செலவழித்துக்கொள்வேன். இம்முறை ‘பிளட் மணி’யில் ஊடகவியலாளராக நடித்ததற்கு கைநிறைய ஊதியம் கிடைத்தது. இன்னொரு விஷயம், படத்தின் மையக் கருவாக இருக்கும் அந்த சம்பவம் நடந்தபோது நான் தொலைக் காட்சியில் வேலை செய்துகொண்டிருந்தேன்.

பெண் மையக் கதைகள் உங்களைத் தேடி வந்தும் அவற்றில் நடிக்க விரும்பவில்லை என்று செய்திகள் வெளியானதே?

உண்மைதான்! ‘ஃபீமேல் சென்ட்ரிக்’ படங்களில் என்னைப்போல் ஒரு வளர்ந்து வரும் நடிகை நடித்தால் அந்தப் படங்களை நான் மட்டும்தான் பார்க்க வேண்டியிருக்கும். தியேட்டரில் காசு கொடுத்துப் பார்க்க யார் முன்வருவார்கள் என்று நினைக்கிறீர்கள்? ‘பிளட் மணி’ ஓடிடியில் வெளியானதற்கும்கூட அதுதான் காரணம். நான் ’ஃபீமேல் சென்ட்ரிக்’ படங்களில் எப்போது நடிக்கலாம் என்றால், பெரிய நடிகர்களின் படங்களில் நடித்து, எனக்கும் நல்ல ‘ரீச்’ கிடைத்தபிறகு நடிப்பது சரியாக இருக்கும். அதற்கு முதலில் நான் நன்றாக நடிக்கிறேன் என்கிற நம்பிக்கையை உருவாக்க வேண்டும். இதைச் சொல்லித்தருவதற்குக்கூட சினிமாவில் எனக்கென்று யாருமில்லை. நானாக பார்த்துக் கற்றுக்கொண்டது இது.

 ‘ஹாஸ்டல்’ டீமுடன்
‘ஹாஸ்டல்’ டீமுடன்

நீங்கள் சொன்னதால்தான் ‘ஹாஸ்டல்’ படத்தில் அசோக் செல்வன் நடிக்க ஒப்புக்கொண்டார் என்பது உண்மைதானா?

உண்மைதான்! மலையாளத்தில் வெளியான நகைச்சுவை படத்தின் ரீமேக் இது. மலையாளத்தில் அவர்கள் தங்களுக்கென்று நகைச்சுவைக்கு ஒரு ‘மீட்டர்’ வைத்திருக்கிறார்கள். அந்த மீட்டர் நம்முடைய சினிமாவுக்கு செட்டாகாது. ஆனால், இயக்குநர் சுமந்த், தமிழுக்கு அதை மாற்றியவிதம் எனக்கு ரொம்பவே பிடித்துப்போனது. நான் ஒப்புக்கொண்டேன். முதலில் சுமந்த், அசோக் செல்வனிடம் தான் கதை சொல்லியிருக்கிறார். ஆனால், அவர் ஒப்புக்கொள்ளவில்லை. அதை என்னிடம் சொன்னார். நான் போன் செய்து நான் நடிப்பதாகச் சொன்னேன். “உனக்குக் கதை நம்பிக்கை கொடுக்கிறது என்றால் நான் நிச்சயம் நடிக்கிறேன்” என்று ஒப்புக்கொண்டார். நானும் அசோக் செல்வனும் இதற்கு முன் இரண்டு படங்களில் இணைந்து நடிக்க இருந்தோம். ஆனால், நடக்காமல் போய்விட்டது. ‘ஹாஸ்டல்’ படத்தில் அசோக் செல்வனுடன் மட்டுமல்ல; சதீஷுடனும் முதல் முறையாக இணைந்து நடித்திருக்கிறேன். மாணவர்கள் விடுதிக்குள் சென்று அங்கே தங்கும் பெண்ணாக நடித்திருக்கிறேன். நானும் அறந்தாங்கி நிஷாவும் மட்டும்தான் பெண் நடிகர்கள்.

மலையாளத்தில் வெளியான ஒரிஜினல் படத்தைப் பார்த்தீர்களா?

இரண்டு முறை பார்த்தேன். ரீமேக்கில் நடித்தால் ஒரிஜினல் படத்தைப் பார்க்கக்கூடாது என்று சொல்லுவார்கள். ஆனால், எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. ஒரிஜினல் படத்தைப் பார்ப்பதன் மூலம் ஒரு நடிகருக்கு நிறைய நன்மைகளும் உண்டு என நம்புகிறேன்.

‘பத்து தல’ படத்தில் சிம்புவுடன் நடித்துவரும் அனுபவம் எப்படியிருக்கிறது?

ரொம்பவே மகிழ்ச்சி. அதுவொரு கன்னடப் படத்தின் ரீமேக். கன்னடப் படத்தில் ஹீரோயின் கேரக்டர் கிடையாது. ஆனால், தமிழில் நன்றாகவே உருவாக்கியிருக்கிறார்கள். சிம்பு திறமையான, அடக்கமான மனிதர். உடல் எடையைக் குறைத்து ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் நடித்தபோது அவர் எப்படியிருந்தாரோ அப்படி மாறிக்காட்டிவிட்டார். இது எல்லோராலும் முடிகிற காரியமில்லை. அவரை எல்லா சூழ்நிலையிலும் அவருடைய ரசிகர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். ஒரு நடிகருக்கு அப்படிப்பட்ட ரசிகர்கள்தான் அடிப்படையான வலிமை என்று நினைக்கிறேன்.

தற்போது நடித்துவரும் படங்களைப் பற்றி கூறுங்கள்?

‘குருதி ஆட்டம்’, ‘பொம்மை’ ‘யானை’, ’ருத்ரன்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துவிட்டேன். ‘பத்து தல’, ‘திருச்சிற்றம்பலம்’, ‘அகிலன்’ ஆகிய படங்கள் இன்னும் ஷெட்யூல் போய்க்கொண்டிருக்கின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in