விஜய் சேதுபதி எனக்காக சிபாரிசு செய்கிறாரா?

‘விக்ரம்’ காயத்ரி பளிச் பதில்
காயத்ரி
காயத்ரி

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் மூலம் அறிமுகமாகி, தனது 10 ஆண்டு திரைப் பயணத்தை வெற்றிகரமாக முடித்திருக்கிறார் காயத்ரி. துறு துறு கண்களும் தும்பைப் பூ புன்னகையுமாய் ரசிகர்களை வசீகரித்த இவர், நடுவில் சில ஆண்டுகள் எங்கே போனார் என்று தேடவும் வைத்தார். படங்களைத் தேர்வு செய்வதில் நிதானம், தேர்ந்துகொண்ட கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கும் சீரியஸ் நடிப்பு என திறமை காட்டிவரும் காயத்ரியின் கையில், தற்போது படங்களுக்குப் பஞ்சமில்லை. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘விக்ரம்’ படத்திலும் முக்கிய பாத்திரம் ஏற்றிருக்கும் காயத்ரி, காமதேனு வார இதழுக்காக அளித்த பேட்டியிலிருந்து…

திரையுலகப் பயணத்தில் 10 வருடங்களை நிறைவு செய்திருப்பதை எப்படி உணர்கிறீர்கள்?

எனது அறிமுகப் படத்தின்போது நான் கல்லூரி முதலாண்டு படித்துக் கொண்டிருந்தேன். முதல் படத்தை முடித்துவிட்டு, கல்லூரிக்குத் திரும்பி, டிகிரியை முடித்த பிறகே மீண்டும் நடிக்க வந்தேன். கல்லூரியில் படிக்கும்போது அத்லெட்டாகவும் இருந்தேன். ஆக, கல்லூரிக்கு 4 ஆண்டுகள் கரோனாவுக்கு 2 ஆண்டுகள் என 6 வருடங்கள் கணக்கில் வராது (சிரிக்கிறார்). என்றாலும் இத்தனை ஆண்டுகளில் சினிமா பற்றி நிறையக் கற்றுக் கொண்டிருக்கிறேன். படிக்கும் காலத்தில் எனக்கு சினிமா வாய்ப்பு மட்டும் வராமல் போயிருந்தால், நான் என்னவாக ஆகியிருப்பேன் என்று நினைத்துப் பார்க்கிறேன். சினிமாவைத் தவிர, வேறு பெஸ்டாக கிடைத்திருக்கும் என்று தோன்றவில்லை.

நீங்களும் விஜய் சேதுபதியும் கிட்டத்தட்ட ஒன்றாகத்தான் கோலிவுட் பயணத்தைத் தொடங்கினீர்கள். அவருடைய வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

நடிக்க வருவதற்கு முன்பு, தான் எப்படிப்பட்டவனாக இருந்தேன் என்பதை செட்டில் எங்கள் எல்லோரையும் உட்கார வைத்து மனம் திறந்து பகிர்ந்துகொள்வார் விஜய் சேதுபதி. அப்படியொரு வெள்ளந்தி மனிதர். சினிமாவில் அவர் நினைத்ததை அடைய முடிந்ததற்கு அவருடைய திறமையும் தன்னம்பிக்கையும்தான் காரணம். அவருடைய வளர்ச்சியைப் பார்த்து மகிழ்ச்சி அடையும் பலரில் நானும் இருக்கிறேன். இன்னும் பல உயரங்களை அவர் அடையவேண்டும் என வாழ்த்துகிறேன்.

வெளியீட்டுக்குக் காத்திருக்கும் ‘மாமனிதன்’ வரை, தொடர்ந்து விஜய் சேதுபதியின் படங்களில் நீங்கள் நடித்து வருவது இயல்பாக அமைவதா? அல்லது விஜய்சேதுபதியின் பரிந்துரையா?

விஜய் சேதுபதியின் நல்ல குணங்களில் ஒன்று அது. அவருக்கு ஒரு சக நடிகரையோ, இயக்குநரையோ, ஒளிப்பதிவாளரையோ, இசையமைப்பாளரையோ பிடித்துப்போய்விட்டால் அவர்களுடன் தொடர்ந்து பணியாற்ற விரும்புவார். அவர்களை சிபாரிசு செய்வார். நானும் அந்த லிஸ்டில் இடபெற்றவள்தான். சீனு ராமசாமியுடன் அவர் தொடர்ந்து பணியாற்றுவது இப்படித்தான். மற்றபடி வலிந்து யார் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும். அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை.

பாலாஜி தரணிதரனிடம் உதவி இயக்குநராகவும் வேலை செய்தீர்களே... அந்த அனுபவம் எப்படியிருந்தது?

இயக்குநராகும் எண்ணமெல்லாம் இல்லை. கல்லூரிப் படிப்பை முடித்தபிறகு ஏதாவது ஒன்றை உருப்படியாகக் கற்றுக் கொள்ளவேண்டும் என்று விரும்பினேன். அதனால்தான் உதவி இயக்குநராக வேலை செய்தேன். ‘சீதக்காதி’ படத்தில் பணிபுரிந்தேன். பாலாஜி தரணிதரனின் செட்டில் நான் கற்றுகொண்டது நிறைய. அமைதியான படைப்பாளி. யார் மனதையும் புண்படுத்தமாட்டார். அவர் சொல்லித் தராமலேயே நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. முக்கியமாக, பொறுமையையும் படப்பிடிப்புக்கு முந்தைய திட்டமிடலையும் அவரிடம் தான் கற்றுக்கொண்டேன்.

சரியான கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் காயத்ரிக்கு சிக்கல் இருக்கிறதா?

கதைகளில் சிக்கல் இல்லை. உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு உதவப்போய் மாட்டிக்கொண்ட படங்கள் சில உண்டு. அது அவர்களுக்கு உதவியதே தவிர, எனக்கு உதவவில்லை. இப்போதிருக்கும் பக்குவம், கதையறிவு போன்றவை அப்போது இல்லை என்பதும் ஒருவகையில் உண்மைதான்.

இப்போது வெளியாகியிருக்கும் உங்களுடைய போட்டோ ஷூட் படங்களைவைத்து, நீங்கள் கிளாமருக்கும் தயார் என்று புரிந்து கொள்ளலாமா?

இதற்கு முன்பு கிளாமராகத் தோன்றக்கூடிய வயதோ, தோற்றமோ எனக்கு இல்லை. இப்போது அதற்கான வயதும் பக்குவமும் எனக்கு இருப்பதாக நினைக்கிறேன். உண்மையைச் சொல்லப்போனால், என்னை டைப் காஸ்ட் செய்வதிலிருந்து தற்காத்துக் கொள்ள, என்னால் எந்தவொரு புதுமையான கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்க முடியும் என்பதைக் கூற விரும்புகிறேன். கதைக்கான கிளாமருடன் கமர்ஷியல் கதாநாயகியாகவும் நடிக்க நான் தயார்! உறுத்தாத, ஒரு தேவதைக்கான கிளாமரில் தோன்றுவதும் அழகானதே; அதை நான் எப்போதும் ரசிப்பேன்.

தற்போது நடித்து வரும் படங்கள் பற்றி கூறுங்கள்?

சீனு ராமசாமி சார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷுடன் ‘இடி முழக்கம்’ படத்தில் நடிக்கிறேன். முதல்முறையாக ஒரு ஃபீல் குட் த்ரில்லர் படத்தை எடுத்திருக்கிறார் சீனு ராமசாமி சார். அடுத்து, ஆதிக் இயக்கத்தில் பிரபு தேவாவுடன் 6 கதாநாயகிகளில் ஒருத்தியாக, நான் இதுவரை ஏற்காத ஒரு சவாலான கேரக்டர் செய்திருக்கிறேன். கமல் சாரின் ‘விக்ரம்’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இப்போதைக்கு அதைப்பற்றி நான் எதையும் வெளிப்படுத்த முடியாது.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் பார்த்தது போலவே இருக்கிறீர்கள். உங்கள் ஆரோக்கிய அழகின் ரகசியம் பகிருங்களேன்…

நான் கல்லூரியில் சேர்ந்த புதிதில் குடும்ப டாக்டரிடம் செக்-அப்புக்காக அம்மா சென்றபோது, நான் துணைக்குப் போயிருந்தேன். அப்போது டாக்டர் என்னைப் பார்த்துவிட்டு ஒன்றைச் சொன்னார். “இன்று நூற்றுக்கு 80 சதவீத பெண்களுக்கு ‘பிசிஓடி’ பிரச்சினை வருகிறது. அதற்கு மருத்துவம் என்று எதுவும் கிடையாது. அதனால், நொறுக்குத் தீனி சாப்பிடும் வழக்கம் இருந்தால் விட்டுவிடு. உனது டயட்டை ஒழுங்குபடுத்திக்கொள். உடற்பயிற்சி செய்.. பிசிஓடியிலிருந்து எஸ்கேப் ஆகிவிடலாம்” என்பதுதான் அந்த அட்வைஸ். அப்போது பயந்துபோனவள்தான். நொறுக்குத் தீனிக்கு குட்பை சொல்லி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. உடற்பயிற்சியை விரும்பிச் செய்கிறேன். இவற்றுடன் எனது பெற்றோருடைய ஜீனும் எனது ஆரோக்கியமான அழகுக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in