அப்பாவின் இயக்கத்தில் அறிமுகம் ஆகாதது ஏன்?

- ‘விருமன்’ அதிதி ஷங்கர் விறுவிறு பேட்டி
அதிதி ஷங்கர்
அதிதி ஷங்கர்

”விருமன் படத்தைப் பார்த்துவிட்டு மக்கள் என்ன சொல்லப் போகிறார்கள், எப்படி என்னை வரவேற்க இருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன். என் கதாபாத்திரம் நிச்சயம் அவர்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன்” என ஆரம்பித்தார் அதிதி ஷங்கர்.

தமிழ் சினிமாவின் ’கஞ்சா பூ கண்ணழகி’. பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் என்ற ஆர்ப்பாட்டம் இல்லாமல் பக்கத்துவீட்டு துறுதுறு பெண்ணாகவே தெரியும் அதிதி, இப்போதே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார். அவரிடம் காமதேனு மின்னிதழுக்காக பேசினோம்.

அதிதி எப்போதுமே இப்படி துறுதுறுதானா?

ஆமாம்! என்னால் அமைதியாவே இருக்கமுடியாது. எக்ஸாம் ஹால்ல வேணா அமைதியா இருப்பா அதிதி. இல்லைன்னா... என்னைய வெளிய அனுப்பிருவாங்களே! மத்தபடி, எப்பயுமே இப்படி ஜாலியா துறுதுறுன்னு இருக்கக்கூடிய பொண்ணு தான் நான்.

சினிமா குடும்பம் என்பதால் அது பற்றிய அறிமுகம் உங்களுக்கு சிறு வயதிலேயே இருந்திருக்கும். ஆனால், நடிப்பு மீது ஆர்வம் வந்தது எப்போது?

நீங்கள் சொன்னது போல, சிறுவயதிலேயே எனக்கு சினிமா மீது ஆர்வம் இருந்தது. பிறந்ததில் இருந்தே அப்பா படங்களை தானே அதிகம் பார்த்திருக்கிறேன். அப்படி பார்க்கப் பார்க்க எனக்குள்ளே ஒரு ஆசை, சினிமா மீதான காதல் இதெல்லாம் இயல்பாகவே வந்துவிட்டது. நடிப்புக்கான வாய்ப்பு சரியான நேரத்தில் எனக்கு அமைந்ததில் மகிழ்ச்சி.

நடிப்பு, இசை இரண்டிலுமே எனக்கு ஆர்வம் உண்டு. இரண்டையும் சேர்த்தேதான் செய்ய இருக்கிறேன். குறிப்பாக நடிப்பு... ஏனென்றால், அப்பாவின் படங்களைத்தான் சொல்வேன். ஒவ்வொரு படத்திலும் ஒரு கதாபாத்திரம் என்றால் ஒவ்வொரு வாழ்க்கை நான் வாழ்வேன். அது எனக்குப் பிடித்திருக்கிறது. இந்த ஒரு காரணத்திற்காகவும் நான் நடிப்பைத் தேர்ந்தெடுத்தேன்.

நடிகையாக மட்டுமல்லாமல், பாடகியாகவும் ‘விருமன்’ படத்தில் அறிமுகமாகி இருக்கிறீர்கள்... எப்படி கிடைத்தது இந்த வாய்ப்பு?

எனக்கு நடிப்பதில் ஆர்வம் இருக்கிறது என்று வீட்டில் சொன்ன பிறகு அப்பாவின் மேனேஜர் தங்கதுரை அங்கிள் எனக்கு நல்ல கதை தேடினார். அப்போதுதான் ‘விருமன்’ எனக்கு அமைந்தது. ஏனெனில், இந்த படத்தின் இயக்குநர் முத்தையாவும், 2டி புரொடக்‌ஷனும் புதுமுக கதாநாயகியை அந்த சமயத்தில் தேடிக் கொண்டிருந்தார்கள். இயக்குநரிடம் என் புகைப்படத்தை காட்டியதும் அவருக்கு பிடித்துப்போய், சந்தித்தேன். பிறகு அது ஆடிஷனாக மாறி, பின்பு ஃபைனல் ஆகி அட்வான்ஸோடு வீட்டுக்குத் திரும்பினேன்.

சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி உங்களை எப்படி வரவேற்றது?

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் 2டி நிறுவனம் மொத்தமுமே எங்கள் பக்கத்து வீடு தான். சூர்யா சார், 2டி-யின் இணை தயாரிப்பாளர் ராஜா சார் எல்லாருமே என் பக்கத்து வீடு. சின்ன வயதில் இருந்தே என்னைப் பார்த்திருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் நான் சினிமாவில் நடிக்க வருவேன் என எதிர்ப்பார்க்கவில்லை. என்னைப் போலவே அவர்களும் மகிழ்ச்சியாகவே இருந்தார்கள். அவர்களுடன் நேரம் செலவிட்டு அவர்களை இன்னும் நன்றாகத் தெரிந்துகொள்ள எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. இப்போது நாங்கள் எல்லாரும் ஒரு குடும்பம்.

முதல் படம், முதல் கதாபாத்திரம் என்றால் எப்போதுமே அது ஸ்பெஷல் தான். அப்படி, ‘விருமன்’ தேன்மொழி பற்றி சொல்லுங்கள்?

நிச்சயமாக! முத்தையா சார் படத்தில் பெண்கள் கதாபாத்திரத்தை ரொம்பவே அழகாகக் காட்டுவார் என்பது எல்லோருக்கும் தெரியும். படத்தில் என் கதாபாத்திரமும் மிகவும் தைரியமான ஒன்று. நிஜ வாழ்க்கையில் பார்த்துப் பிடித்துப்போன கதாபாத்திரம் இது. படத்தில், தண்ணிக் கேன் போடும் பொண்ணு நான். ‘பொம்பளைக்குப் பொம்பள... ஆம்பளைக்கு ஆம்பள’ என்று இருக்கும் பெண்.

நிஜத்திலும் நான் கொஞ்சம் ரகளை செய்யும் ரவுடி என்பதால் இந்த கதாபாத்திரம் கேட்டதுமே எனக்கு பிடித்துவிட்டது. தண்ணிக் கேன் போடுவது, கோலம் போடுவது, வட்டார வழக்கில் பேசுவது என எல்லாத்துக்கும் பயிற்சி எடுத்தேன்.

நடிகர் கார்த்திக்கு ’பருத்திவீரன்’ கிராமத்துக் கதை போல, உங்களுக்கும் ‘விருமன்’ அமைந்துவிட்டது எனச் சொல்லி இருந்தீர்கள். ‘விருமன்’ படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டதற்கு இதுவும் ஒரு காரணமா?

இந்த சென்டிமென்ட் பற்றி பிறகு தான் யோசித்தேன். கதை, என் கதாபாத்திரம், 2டி என எல்லாமே எனக்கு பிடித்திருந்தது. முக்கியமாக, எனக்கு ஒரு பாடல் கொடுத்த யுவன் சார். யுவனுடன் பாடியது ஜாலியாகவே இருந்தது. பட பூஜையின் போதே யுவனிடம் வாய்ப்புக் கேட்டுவிட்டேன். “எனக்கு இசையில் ஆர்வம் இருக்கிறது. இசையை முறையாகக் கற்றுள்ள நான் நன்றாகப் பாடுவேன். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். உங்கள் இசையில் பாட விரும்புகிறேன்” என்று சொன்னேன். அவரும், “நிச்சயமாக! இது நம்முடைய படம். பாடிவிடலாம்” என்று சொன்னார். அப்படி தான் ‘மதுரை வீரன்’ பாடல் உருவானது.

படப்பிடிப்புத் தளத்தில் என்னவெல்லாம் சேட்டை செய்தீர்கள்?

ஜோக் சொல்கிறேன் என்ற பெயரில் ஒருவர் விடாமல் எல்லோரையும் ரகளை செய்தேன். பிரகாஷ் ராஜ் சாரைக்கூட விடவில்லை. அவர், “ஏம்மா, யார்மா நீ” என்று கேட்டார். ராஜ்கிரண் சாரிடமும் நான் பேசினேன். அவரும் என் ஜோக்கை கேட்டு அப்படிச் சிரித்தார். இதற்கு முன்பு அவர் அப்படிச் சிரித்து யாருமே பார்த்ததில்லை என்று சொன்னார்கள்.

நீங்கள் முதலில் நடிக்க விருப்பம் தெரிவித்ததும் அப்பா, அம்மா என்ன சொன்னார்கள்?

படித்து முடித்துவிட்டு உங்களுக்கு பிடித்ததைச் செய்யுங்கள் என அம்மா முழு சப்போர்ட். அப்பா கேட்டதும் பயங்கர ஷாக். நான் ஐந்து வயதில் இருந்தே பாட்டு கற்றுக்கொண்டிருக்கிறேன். நான் என்னதான் டாக்டருக்கு படித்தாலும் பாட்டும் பாடுவேன் என அவர் நினைத்திருந்தார். அப்பாவும் மிகப்பெரிய இசைக் காதலன் என்பதால் இசை தொடர்பாக அவர் என்னை ஊக்குவித்தார்.

படித்து முடித்துவிட்டு, எனக்கு இரண்டு வருடங்கள் டைம் வேண்டும் என அப்பாவிடம் கேட்டேன். “மியூசிக்குக்கு எதுக்கு இரண்டு வருஷம்?” என அவர் கேட்க, அப்போது தான் என் நடிப்பு விருப்பத்தை சொன்னேன். இவ்வளவு பெரிய குண்டை அவர் மேல் போட்டால் என்ன செய்வார். நான் சொன்னதை ஏற்றுக்கொள்ளவே அவருக்கு அவகாசம் தேவைப்பட்டது.

பிறகு அம்மாவுடன் கலந்துபேசிவிட்டு, அடுத்த நாள் என்னிடம் வந்து, “ஒரு அப்பாவாக இந்த விஷயத்தில் நான் முடிவெடுப்பது கஷ்டம் அதிதி. ஆனால், ஒரு இயக்குநராக யோசித்தால் நீ கண்டிப்பாக இந்த சினிமா துறைக்கு பொருத்தமானவள். அதனால், இயக்குநராக உனக்கு நான் நோ சொல்லமாட்டேன். நீ நடி” என்று சொன்னார்.

காலேஜ் படிக்கும்போது ரகளை செய்து வீட்டில் மாட்டிக்கொள்வீர்களா?

கிளாஸ் கட் அடிச்சுட்டு தலைவருடைய ‘பேட்ட’, ‘தர்பார்’ படத்துக்குப் போய்விடுவேன். அப்படிச் செய்துவிட்டு வீட்டில் நானே வந்து சொல்லியும் விடுவேன். “அம்மா, இப்படி படத்துக்கு நான் போனேன். நீ இப்பயே திட்டிவிடு. நான் கொஞ்சம் நிம்மதியாக இருப்பேன்” எனச் சொல்லிவிடுவேன்.

அப்பாவின் இயக்கத்திலேயே அறிமுகமாகாதது ஏன்?

அப்பாவுக்கும் எனக்கும் அதில் விருப்பமில்லை. ஏனெனில், என் திறமையை நிரூபித்து, எனக்கான ஒரு இடம் கிடைத்ததும் அது தானாகவே நடக்க வேண்டும் என்று விரும்பினோம். ஆனாலும், அப்பாவிடம் வாய்ப்புக் கேட்டிருக்கிறேன். “ஆடிஷன் வெச்சு, உங்களுக்கு செட் ஆனா எடுத்துக்கோங்க சார்” என்று கேட்டுவிட்டு ஓடிவிட்டேன். சீக்கிரம் அது நடக்கும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.

படங்கள்: கிரண் ஷா

பெட்டிச் செய்தி:

அதிதி சீக்ரெட்ஸ்...

சினிமாவில் பெற்றது இழந்தது?

பெற்றது- பலர் காட்டும் அளவுகடந்த அன்பு; இழந்தது- பிஜி படிக்க முடியாமல் போனது.

வீக்கெண்ட் எப்படி இருக்கும்?

லாங் வாக், என் பெட்டுடன் விளையாட்டு, வீட்டில் லூட்டி

அப்பாவின் எந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ரெடி?

’இந்தியன்2’, ‘அந்நியன்’ மற்றும் ‘சிவாஜி’

கார்த்தி, சிவகார்த்திகேயன்... எப்போது சூர்யாவுடன்?

எனக்கும் ஆசைதான். சீக்கிரமே நடக்கும் என நம்புகிறேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in