இந்தக் கதாபாத்திரம் என்னை மேலும் வலிமையான பெண்ணாக மாற்றியிருக்கிறது!

‘கடாவர்’ அமலா பால் பெருமிதம்
அமலா பால்
அமலா பால்

‘ராட்சசன்’, ‘ஆடை’ படங்களைத் தொடர்ந்து அமலா பால் நடிப்பு மற்றும் தயாரிப்பில் டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது ‘கடாவர்’. இதில் பாத்ரா தங்கவேல் என்கிற தடயவியல் மருத்துவராக முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அமலா பாலுக்கு இதுவொரு ‘கம்பேக்’ படம் என்றே சொல்லலாம். தயாரிப்பாளர் அவதாரம், சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்த அனுபவம் என அமலாவிடம் பேச நிறையவே இருந்ததால் காமதேனுவுக்காக அவருடன் உரையாடினோம்.

இதுவரை மற்றவர்களிடம் சம்பளம் வாங்கி நடித்திருப்பீர்கள். ஆனால், ஒரு தயாரிப்பாளராக மற்றவர்களுக்கு சம்பளம் கொடுத்த அனுபவம் எப்படி இருந்தது?

அதில் மகிழ்ச்சிதான். நல்ல கதாசிரியர், சிறந்த இயக்குநர், தொழில்நுட்பக் கலைஞர்கள் திறமையான நடிகர்களுக்கு உரிய ஊதியம் கொடுக்க முடிந்த சக்தியை கடவுள் எனக்குக் கொடுத்தார். 70 சதவீத படப்பிடிப்பு முடிந்ததும் ஒரு கட்டத்தில் படத்தை முடிக்க 2 கோடிக்கு மேல் தேவைப்பட்டது. அப்போது என் மீது நம்பிக்கை வைத்து நிதியுதவி செய்தவர்களை மறக்கமாட்டேன்.

இந்தப் படத்தில் நான் டெட் பாடிகளையும் புதைகுழிகளையும் தோண்டி எடுத்து போஸ்ட் மார்டம் செய்வதைப் பார்த்திருப்பீர்கள். இரண்டு கோடி தேவை என்றபோது, படத்தை முடிக்க முடியுமா என்கிற நம்பிக்கைபோய், கிட்டத்திட்ட என்னை ஒரு டெட் பாடி போல் உணர்ந்தேன். 2019-ல் இந்தப் படத்தைத் தொடங்கினோம். இடையில் இரண்டு வருடத்தை கரோனா எடுத்துக்கொண்டதில் மிகவும் சிரமப்பட்டேன். இதற்கிடையில், 2020-ல் எனது தந்தை திடீரென இறந்ததும் எனக்கும் அம்மாவுக்கும் மிகப்பெரிய இழப்பு. இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

படத்தைப் பார்த்தால் இது திரையரங்குகளிலும் வரவேற்பைப் பெற்றிருக்கும் எனத் தோன்றியது. நீங்கள் ஏன் ஓடிடி பக்கம் ஒதுங்கினீர்கள்?

விநியோகஸ்தர்களுக்குப் படத்தைப் போட்டுக் காட்டி கருத்துக் கேட்டபோது கலவையான கருத்துகள் வந்தன. சிலர், இது ஓடிடி படம் என்றார்கள். இன்னும் சிலர், மிகக் குறைந்த விலைக்குக் கேட்டார்கள். அந்த சமயத்தில் சில நல்ல உள்ளங்கள் டிஸ்னி + ஹாட் ஸ்டாரின் தரக் கோட்பாட்டுக்கு ஏற்ற படமாக இது உள்ளது எனக் கூறி எனக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தார்கள். நல்ல முறையில் படத்தை விற்று, கடனை அடைத்து கையைச் சுட்டுக்கொள்ளாமல் அளவான லாபத்துடன் கிரேட் எஸ்கேப் ஆகிவிட்டேன்.

இப்படியொரு கதாபாத்திரம் உங்களுக்கு பொருந்தும் என்று எப்படி நம்பினீர்கள்?

பெரும்பாலும் என்னைத் தேடி த்ரில்லர் கதைகளே கடந்த சில ஆண்டுகளாக வந்துகொண்டிருக்கின்றன. அது ஏன் என்று தெரியவில்லை. இந்தக் கதையை எழுதிய அபிலாஷ் பிள்ளையின் சகோதரர் சென்னையில் சாலை விபத்தில் சிக்கி ஸ்பாட்டிலேயே இறந்துவிட்டார். அவரது உடலை சென்னை ஸ்டான்லி அரசு பொதுமருத்துவமனையின் பிணவறையில் அடையாளம் கண்டு வாங்கிச்செல்ல அபிலாஷ் அங்குள்ள பிணவறைக்குச் சென்றுள்ளார். அப்போது பிணவறை ஊழியர் ஒருவர் அங்கேயே தனது மதிய உணவை சாப்பிடுவதைப் பார்த்து அதிர்ந்துபோன அபிலாஷ், அந்த சம்பவத்தையே பொறியாக வைத்துக்கொண்டு எழுதிய கதைதான் இது. அதில் வந்த ஃபோரன்ஸிக் சர்ஜன் கேரக்டர் எனக்காவே எழுதப்பட்டதுபோல் இருந்ததாக உணர்ந்தேன்.

இந்தக் கதாபாத்திரத்துக்காக ஒரு போலீஸ் சர்ஜனுடன் இரண்டு வாரம் பல போஸ்ட் மார்டங்களில் நானும் உடன் இருந்து கவனித்தேன். அவர் யார் என்பதை வெளிப்படுத்த விரும்பவில்லை. அதன்பின்னர் என்னுடைய இயக்குநர் சில பொது மருத்துவமனைகளின் பிணவறைகளுக்கு என்னை அழைத்துச் சென்றார். அங்கெல்லாம் போய், விபத்தில் அடிபட்டு இறந்தவர்கள், தற்கொலை செய்து கொண்டவர்கள், அநாதையாக இறந்து இன்னும் வாங்கிச் செல்ல ஆள் வராதவை என பலவித சடலங்களைப் பார்த்தபோது வாழ்க்கையின் அர்த்தம் புரிந்தது. மரணம் குறித்து மனம் யோசித்தது. இந்தக் கதாபாத்திரம் என்னை மேலும் வலிமையான பெண்ணாக மாற்றியிருக்கிறது. கதாபாத்திரத்துக்காக தலைமுடியையும் வெட்டிக்கொண்டேன்.

தமிழ்நாட்டில் பல நட்சத்திரங்கள் தங்கள் உடலை, உடல் உறுப்புகளை தானம் செய்திருக்கிறார்கள். நீங்கள் அப்படிச் செய்யும் எண்ணம் உண்டா?

பல வருடங்களுக்கு முன்பே என்னுடைய கண்களை நான் தானம் செய்திருக்கிறேன். உடல்தானம் பற்றி இன்னும் யோசிக்கவில்லை.

இனி பெண் மையக் கதைகளில் மட்டுமே நடிப்பது என முடிவு செய்துவிட்டீர்களா?

நிச்சயமாக இல்லை. ‘மைனா’ படத்தில் நடித்தபோது எனக்கு 18 வயது. அதன்பிறகு சில ஆண்டுகள் எனக்குக் கதைகளைக்கூட சரியாகத் தேர்வு செய்யத் தெரியாமல்தான் படவுலக்குள் நான் சர்வைவ் ஆனேன். என்னுடைய தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டு முன்னேறினேன். எனக்கு நடிப்புத் திறமை இருக்கிறது என்று நான் உணர்ந்தபோது நல்ல கதாபாத்திரங்கள், சவாலான கதாபாத்திரங்கள் என இரண்டுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தே ‘ஆடை’ படத்தை ஒப்புக்கொண்டேன். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடையாத படமாக இருக்கலாம். ஆனால், ‘அமலா பால் கலைக்காக கதாபாத்திரத்துக்காக துணிந்திருக்கிறார்’ என்று விமர்சகர்கள் எழுதினார்கள் அல்லவா? அதுதான் பெண் மையக் கதைகள் என்னை நோக்கி வரக் காரணம். பெண் மையக் கதையாக இருந்தாலும் இதுவரை செய்யாத கதாபாத்திரங்கள் என்றால் மட்டுமே ஏற்பேன். இந்த ‘கடாவர்’ பாத்ரா தங்கவேல் போல.

தற்போது நடித்துவரும் படங்கள் பற்றி..?

‘அதோ அந்த பறவை போல’ அடுத்து ரிலீஸ் ஆக இருக்கிறது. மலையாளத்தில் ’தி டீச்சர்’ என்கிற படம் ரிலீஸ் ஆகிறது. இவை தவிர ‘த்ரிஜா’ என்றொரு படத்திலும் மம்மூட்டி ஜோடியாக ஒரு படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in