பயந்தாங்கொள்ளி மோடி பதவிக்கே வந்திருக்கக் கூடாது!

திருச்சி வேலுச்சாமி காட்டம்
பயந்தாங்கொள்ளி மோடி பதவிக்கே வந்திருக்கக் கூடாது!

பிரதமர் மோடி, பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகக் கூறிப் பாதி வழியிலேயே திரும்பிச்சென்ற விவகாரம் தொடர்பாக, பஞ்சாப் காங்கிரஸ் அரசிடம் விளக்கம் கேட்டிருக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம். பிரதமரையே நேரில் அழைத்து விசாரித்திருக்கிறார் குடியரசுத் தலைவர்.

பஞ்சாப் சம்பவம் தொடர்பாக நாடு முழுதும் போராட்டம் நடத்துகிறது பாஜக. ஆனால், காங்கிரஸ் தலைமையோ மவுனம் காக்கிறது. அதனால் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பேசத் தயங்குகிறார்கள். இப்பிரச்சினை பற்றிப் பேசத் துணிச்சலான காங்கிரஸ்காரர் ஒருவரைத் தொடர்புகொள்ளலாம் என்று எண்ணியபோது, நினைவுக்கு வந்தவர் திருச்சி வேலுச்சாமி. காங்கிரஸ் மூத்த தலைவரும், செய்தித் தொடர்பாளருமான திருச்சி வேலுச்சாமி 'காமதேனு' மின்னிதழுக்காக அளித்த பேட்டி இது.

பஞ்சாப் சம்பவம் காங்கிரஸ் அரசின் திட்டமிட்ட சதி என்று சொல்லி, ஒருவார கால போராட்டத்தை அறிவித்திருக்கிறது தமிழக பாஜக. இதுபற்றி உங்கள் கருத்து?

தமிழ்நாடு பாஜகவின் தலைவராக இருப்பவர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்று சொல்றாங்க. அவரு உண்மையிலேயே ஐபிஎஸ் ஆபீஸரா, இல்ல டுபாக்கூர் ஆபிஸரான்னு எனக்குத் தெரியல. நாட்டின் பிரதமர் ஒரு மாநிலத்துக்குப் போகிறபோது, அவருடைய பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிப்பது மாநில அரசு அல்ல; மத்திய அரசின் உள்துறை அமைச்சகம்தான். இந்த அடிப்படை அறிவுகூட இல்லாம எப்படி அண்ணாமலை ஐபிஎஸ் ஆபீஸர் ஆகியிருக்க முடியும்? எனவேதான் சொல்கிறேன், உண்மையிலேயே இவரு ஐபிஎஸ் பாஸ் பண்ணியவரா இல்லை டுபாக்கூரா என்று மக்களுக்குத் தெளிவுபடுத்திவிட்டு, அப்புறம் போராட்டத்தை அறிவிக்கட்டும்.

அப்படியானால் அங்கே என்ன நடந்தாக நீங்கள் கருதுகிறீர்கள்?

தன்னுடைய நிகழ்ச்சி என்னவென்பதைப் பற்றி எந்தத் தெளிவான முன்தீர்மானமும் இல்லாமல் போய்விட்டு, குழப்பத்தில் திரும்பிவந்திருக்கிறார் மோடி. அந்தக் கூட்டத்துக்கு 70 ஆயிரம் நாற்காலிகள் போட்டிருக்கிறார்கள் பாஜகவினர். ஆனால், விவசாயிகளுக்கு மோடி அரசு செய்த துரோகம் காரணமாக, ஒட்டுமொத்த பஞ்சாபியர்களும் அந்த நிகழ்ச்சியைப் புறக்கணித்திருக்கிறார்கள். சில ஆயிரம் பேர் கூட கூட்டத்துக்கு வரவில்லை என்றதும், தாமதமாகப் புறப்பட்டிருக்கிறார் மோடி. அப்படியும் கூட்டம் வரவில்லை என்றதும் பாதுகாப்புக் குறைபாடு என்றொரு நாடகத்தை நடத்திவிட்டுத் திரும்பிப்போய்விட்டார்.

அவரைவிட அவரது கட்சிக்காரர்கள் பயங்கரமாக ஸ்டன்ட் அடிக்கிறார்கள். இது மக்களுக்கும் புரிந்துவிட்டது. 12 கோடி ரூபாய் சொகுசுக் காருக்குள் மோடி வெறும் 20 நிமிடம் காத்திருந்ததை, நாட்டின் பிரதமருக்கே ஆபத்து என்று கூப்பாடு போடுகிற பாஜகவினரை நான் கேட்கிறேன். ஒரு வருடமாக எத்தனை லட்சம் விவசாயிகள் வெயிலிலும், மழையிலும், பனியிலும் செத்துக்கொண்டிருந்தார்கள்? அன்றைக்கு நீங்கள் இதேமாதிரி வருத்தப்பட்டிருந்தீர்கள் என்றால், நீங்கள் தின்பது அவர்கள் போட்ட சோறு என்று புரிந்துவைத்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். அதைவிட்டுவிட்டு மோடிக்காக வருந்துகிறீர்கள் என்றால், நீங்கள் யார் என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள்.

பிரதமரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வேண்டும் என்பதே காங்கிரஸின் உள்மன விருப்பமாக இருக்கிறது. எனவே, அவரது ஆயுளை நீட்டிப்பதற்காக அனைத்து முக்கிய கோயில்களிலும் மிருத்யுஞ்ஜய யாகம் நடத்தப்போவதாகவும் அக்கட்சி அறிவித்திருக்கிறதே?

(சிரிக்கிறார்). ஆஹா... அப்படியென்றால் இந்த யாகத்தை வளர்த்துக்கொண்டேயிருந்தால், பிரதமர் சாகாவரம்பெற்று எப்போதும் வாழ்ந்துகொண்டே இருக்கலாமோ? படிப்படியாக அரசியல் விழிப்புணர்வு பெற்றுவரும் மக்களை மீண்டும் மடையர்களாக்குகிற உக்தி இது. மக்களை நல்லவகையில் எஜூகேட் பண்ணுவதைவிட்டுவிட்டு, மக்களை முட்டாள்தனத்தில் ஊறவைக்கப் பார்க்கிறார்கள். தம்பி அண்ணாமலை தலைவராக வந்ததில் இருந்து, தமிழக மக்களுக்கு நல்லாப் பொழுது போகிறது. ஒவ்வொரு நாளும் வித்தியாச வித்தியாசமான காமெடி நாடகங்களை அரங்கேற்றி, மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார். அந்த வகையில் நாம் அவரைப் பாராட்டலாம். (மீண்டும் சிரிக்கிறார்).

ஆனால், பஞ்சாப் குற்றச்சாட்டு குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமை எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லையே? கே.எஸ்.அழகிரி போன்றவர்களும் அமைதி காக்கிறார்களே..?

உங்கள் கேள்வியின் அடிப்படையே தப்பு. இது ஒன்றும் கட்சியின் கொள்கை முடிவல்ல. கொள்கை முடிவைத்தான் தலைமை சொல்வார்கள். பிரதமருக்குப் பாதுகாப்பு கொடுப்பவர்கள் யார் என்கிற அரசியல் அரிச்சுவடியே தெரியாமல் பேசுபவர்களுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம் என்று காங்கிரஸ் தலைமை கருதியிருக்கலாம்.

முதலில், பிரதமர் பதவி என்றால் என்னவென்றே பாஜகவினருக்குத் தெரியவில்லை. முன்பிருந்த பிரதமர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதும் இவர்களுக்குப் புரியவில்லை. ஒவ்வொரு பிரதமரைப் பற்றியும் சொன்னால் நேரமாகிவிடும். சுருக்கமாக ஒன்றிரண்டு உதாரணங்களை மட்டும் சொல்கிறேன். இதே தமிழ்நாட்டுக்கு மொரார்ஜி தேசாய் வந்தபோது சேலத்தில் அவரை எதிர்த்துப் பெரிய ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்வரிசையில் நின்று கத்திய ஒருவரை யாரும் அடித்துவிடுவார்களோ என்று பதறிய பிரதமர், அவரை அழைத்துவரச் சொல்லி, ஆங்கிலம்கூட தெரியாத அந்த இளைஞனிடம் தன் அன்புமொழியால் பேசிப் புரியவைத்து, அவரை பத்திரமாகக்கொண்டுபோய் வீட்டிலேயே விட்டுட்டு வரச்சொல்லி அனுப்பிவைத்தார் என்பது வரலாறு.

உலகத் தலைவரான நேரு தமிழ்நாட்டுக்கு வந்தபோதும் இதேபோல அவருக்கு எதிராகப் போராடி, கறுப்புக்கொடி காட்டினார்கள். அவர் நினைத்திருந்தால் அந்தப் பகுதியை தவிர்த்துவிட்டு வேறுபாதையில் போயிருக்க முடியும். ஆனால், அவர் அதே வழியாகச் சென்றதுடன் போராடியவர்களைப் பார்த்தும் புன்னகையுடன் கையசைத்தார். யாரோ ஒரு தொண்டன் கோபத்தில் அவர் மீது செருப்பை வீசியெறிந்தான். அது அவர் மேலேயே விழுந்தது. அவர் கண்ணசைத்திருந்தால் அந்தக் கூட்டத்தில் 100 பேரின் கையைக் காலை உடைத்திருக்க முடியாதா? இது குழந்தைத்தனமானது என்று சொல்லிக் கடந்துபோய்விட்டார். பெரிய பதவியில் இருப்பவர்களுக்கு பேரறிவும், நிறைய பொறுமையும் இருக்க வேண்டும். அது எதுவுமே மோடிக்கு கிடையாது.

தன்னுடைய கட்சி பிரதமர்களையே காக்கத் தவறிய காங்கிரஸ் என்று இந்தச் சம்பவத்தை இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி படுகொலையுடன் தொடர்புபடுத்திப் பேசுகிறது பாஜக. ராஜீவ் கொலை பற்றி நிறைய பேசியவர், எழுதியவர் என்ற முறையில் இதற்கு உங்கள் பதில் என்ன?

அதற்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாதுங்க. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். இப்படியான பயந்தாங்கொள்ளிகள் எல்லாம் பதவிக்கோ, பொதுவாழ்க்கைக்கோ வந்திருக்கக்கூடாது. சீக்கியர்களால் ஆபத்து வரலாம் என்று தெரிந்தும், தன்னுடைய மெய்க்காப்பாளர்களை மாற்றாதவர்தான் இரும்புப் பெண்மணி இந்திரா காந்தி. தன் தாய் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகும்கூட, மக்களோடு மக்களாகத்தானே இருந்தார் ராஜீவ் காந்தி. மரணமடைந்த அன்றுகூட அந்த மக்கள் தலைவன் மக்களோடு மக்களாகத்தானே இருந்தார்? வீரனுக்கு ஒருமுறை தான் சாவு. கோழைகள்தான் தினந்தினம் பயந்து சாவார்கள்.

பாஜக ஆளாத மாநிலங்களில் எல்லாம் ஆளுநர்களுக்கும், முதல்வர்களுக்கும் இடையே உரசல் ஏற்பட்டுவருகிறது. ஆளுநர்களின் இந்தத் தலையீட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஆளுநர்களை ஆளுநர்களாக அல்லாமல், தங்களுக்குப் பிடிக்காத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தங்களது உள்மன அரிப்பைத் தீர்த்துக்கொள்ளும் கருவியாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அதுதான் பிரச்சினை. மத்திய பாஜகவின் சிந்தனை மாறினால் ஒழிய, இந்தப் பிரச்சினை தீராது.

ஆளுநர்கள் பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக இருக்கும் தற்போதைய நடைமுறையைத் திருத்தி, வேந்தர்களாக முதல்வரே இருக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப் போவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறாரே?

தமிழக ஆளுநர் தன்னுடைய அதிகார எல்லையை மீறி, தன்னிச்சையாக சில துணைவேந்தர்களை நியமித்ததன் எதிர்வினையாகத்தான் இதைப் பார்க்கிறேன். வரவேற்கத்தகுந்த புதிய சிந்தனைதான் இது. சட்டம் என்பது ஒன்றும் கல்வெட்டு சாசனம் அல்ல. மக்களுக்காகத்தான் சட்டம். அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துகிறபோது சில சிக்கல்கள் வருகிறதென்றால், அதைத் திருத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு இருக்கிறது.

மம்தாவுடன் ஒப்பிட்டால், காங்கிரஸ் தலைமை வலுவானதாக இல்லை என்று பாஜகவுக்கு எதிரான மம்தாவின் அணி திரட்டலை சிலர் சிலாகித்துப் பேசுகிறார்களே?

பைத்தியக்காரத்தனமான பேச்சு. இந்தியாவில் காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரைக்கும் இருக்கிற ஒரே கட்சி காங்கிரஸ்தான். மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் கிளையாவது இருக்கிறதா? ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஒடிஸா என்று எந்த மாநிலத்தில் அந்தக் கட்சி இருக்கிறது? அவரைப் போய் செயற்கையாக பிரம்மாண்டப்படுத்தி சிலர் பேசுகிறார்கள் என்பதற்காக நான் அதற்குப் பதில் சொல்ல முடியாது.

எந்தப் புரட்சியும் மக்கள் மத்தியில் இருந்துவந்தால்தான் அது நிலைத்திருக்கும். சமீப காலத்தில் எனக்கு கிடைத்த அனுபவங்களின்படி, படித்த இளைஞர்கள், யுவதிகள் மத்தியில் காங்கிரஸ் கட்சி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. நாட்டில் நல்ல மாற்றம் நடக்கப்போவதற்கான அறிகுறியாகவே அதை நான் பார்க்கிறேன்.

தமிழ் தேசியம் பேசுகிற சீமான் பாஜகவைவிட, காங்கிரசையும் திமுகவையும் மிகக்கடுமையாக விமர்சிக்கிறாரே?

அந்தக் காலத்தில், நாலணாவுக்குத் தாயத்து விற்பதற்காக பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடுவதாக வித்தை காட்டுவான் பாம்பாட்டி. வித்தையைப் பார்க்க கூட்டம் கூடிய பிறகு, நாலணா தாயத்தை நைசாக விற்றுவிட்டுப் போய்விடுவான். சீமான் பேசுகிற தமிழ் உணர்வு, தனித் தமிழ்நாடு எல்லாமே காசு பறிப்பதற்கான வித்தைதான். அதை அம்பலப்படுத்துவதால்தான், திமுக, காங்கிரஸ் மீது அவர் பாய்கிறார். ரொம்ப நாளைக்கு அவரது வித்தை எடுபடாது. மக்கள் முழுமையாகப் புரிந்துகொண்டுவிட்டால், அதன் பிறகு அவர் வெளியிலேயே தலைகாட்ட முடியாது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in