அப்பாவின் குரல்வளையை நசுக்க நினைக்கிறார்கள்!

ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன் காட்டம்
ஜெயவர்தன்
ஜெயவர்தன்

திமுகவினரால் 'மைக் மோகன்' என்று கிண்டலடிக்கப்படும் அளவுக்குத் தினந்தினம் பேட்டி கொடுப்பவர், முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார். சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்தாலும்கூட, பிரஸ் மீட்டை மட்டும் விடவே இல்லை அவர். எடப்பாடி பழனிசாமியும், ஓபிஎஸ்சும் கூட கருத்துச் சொல்ல தயங்குகிற விஷயங்கள் பற்றிக்கூட, மணிக்கணக்காக பேசக்கூடிய அவர், இப்போது சிறையில் இருக்கிறார். அவரை எப்படியாவது ஜாமீனில் வெளியே கொண்டுவந்துவிட வேண்டுமென, ராப்பகலாய் சுற்றுகிறார் அவரது மகனும் முன்னாள் எம்பியுமான ஜெயவர்தன். காமதேனு பேட்டிக்காக அழைத்தபோது, “கோர்ட்டில் இருக்கிறேன். பிறகு அழைக்கிறேன்” என்று சொன்னவர், இரவில் அழைத்தார். இனி பேட்டி...

உங்கள் தந்தையின் ஜாமீன் மனு எந்த நிலையில் இருக்கிறது?

வேண்டுமென்றே மிகக் கடுமையான பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்திருக்கிறார்கள். அப்பாவுக்கு ஜாமீன் கேட்டு முதலில் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு போட்டோம். அரசுத் தரப்பில் கடுமையான ஆட்சேபம் தெரிவித்தார்கள். நீதிமன்றமும் மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது. செசன்ஸ் கோர்ட்டில், அந்த நபர் கள்ள ஓட்டுப்போட வந்தது, கல்வீசித் தாக்கியது உள்ளிட்ட ஆதாரங்களை அளித்தோம். ஆனால், திமுக வக்கீலும், மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ, அப்பா பெரிய கொலைக்குற்றம் செய்ததுபோல சித்தரித்துப் பேசினார். எனவே, அங்கேயும் ஜாமீன் கிடைக்கவில்லை. அடுத்து உயர் நீதிமன்றத்தை அணுகுவது குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம்.

திமுககாரரைத் தாக்கி, அரை நிர்வாணப்படுத்திய காட்சியை உங்கள் தந்தையே தனது முகநூல் பதிவில் வீடியோவாகப் போட்டிருக்கிறார். பிறகெப்படி இதைப் பொய் வழக்கு என்று சொல்கிறீர்கள்?

கள்ள ஓட்டுப்போட முயன்று அதிமுகவினரிடம் சிக்கிய அந்த நபர் பெயர் நரேஷ்; சன் ஆஃப் ராஜேந்திரன். அவர் ஒரு சமூக விரோதி. மோசடி உட்பட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் அவர் மீது இருக்கின்றன. சில வழக்குகளில் தண்டனையும் பெற்றிருக்கிறார். சம்பவ தினத்தன்று கூட கள்ள ஓட்டுப்போட வந்த அவர், பயங்கர ஆயுதங்களையும் வைத்திருந்திருக்கிறார். தேர்தல் அதிகாரிகள் நியாயமாக இருந்தால், அதை வீடியோ பதிவுசெய்து, அவர்களே போலீஸில் புகார் செய்திருக்கலாம். அவர்களும் அப்படிச் செய்யவில்லை. போலீஸாரும் அந்த நபர் கள்ள ஓட்டுப்போட ஒத்தாசையாக இருந்திருக்கிறார்கள்.

இதுபற்றி கேள்விப்பட்டதும், முன்னாள் எம்எல்ஏ, முன்னாள் மாவட்டக் கழகச் செயலாளர் என்ற முறையில் என் தந்தை ஸ்பாட்டுக்குச் சென்றார். உடனே அந்த நபர் கல்வீச்சு நடத்தியிருக்கிறார். அதிமுகவினரையும் போலீஸையும் தள்ளிவிட்டிருக்கிறார். கையில் ஆயுதம் வைத்திருக்கிற ஒரு சமூகவிரோதியைப் பிடித்து கழுத்தில் மாலை போட்டு, கையில் மல்லிகைப்பூவை கட்டி மைனர் போலவா போலீஸில் ஒப்படைக்க முடியும்? தற்காப்புக்காகத்தான் அவரது கையைக் கட்டச் சொன்னார். அவரை அடிக்க வேண்டாம் என்று அப்பா சொன்னது வீடியோவில் தெளிவாகப் பதிவாகியிருக்கிறதே?

R Senthil Kumar

அதெல்லாம் சரி, உங்கள் தந்தை வெறும் கட்சிக்காரர் மட்டுமில்லை. சட்டத்தையே இயற்றுகிற பேரவையின் தலைவராக இருந்தவர். அவரே சட்டத்தை மீறி, அந்த நபரை அரை நிர்வாணப்படுத்தியதை எப்படி ஏற்க முடியும்?

வெளியில் இருந்து என்ன வேண்டுமானாலும் பேசலாம். சம்பவ இடத்தில் இருந்தவர்களுக்குத்தான் அந்தச் சூழ்நிலை புரியும். எதையும் செய்யத் துணிந்த, கையில் ஆயுதம் ஏந்திய குற்றவாளியை எவ்வளவு மென்மையாகக் கையாள முடியுமோ அப்படித்தான் கையாண்டிருக்கிறார்கள். அவர் பிளேடையோ மற்ற ஆயுதத்தையோ மறைத்து வைத்திருந்து தாக்கிவிட்டால் என்ன செய்வது என்றுதான், கையைக் கட்டச் சொன்னாரே தவிர அவமானப்படுத்தும் நோக்கம் அல்ல.

அவரை காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லும் முன்பே போலீஸார் அங்கு வந்துவிட்டார்கள். வந்தவர்கள் அந்த நபரை விடுவித்துவிட்டார்கள். உடனே அந்த நபர், என் தந்தையின் கார் டிரைவர் ஜெகனைத் தாக்கியதில் அவருக்குத் தலையில் காயம் ஏற்பட்டிருக்கிறது. இப்படி அந்த நபர் செய்த அராஜகத்துக்கான வீடியோ எவிடென்ஸ் கூட எங்களிடம் இருக்கிறது. அதைக்கூட நாங்கள் நீதிமன்றத்திடம் சமர்ப்பித்தோம். ஆனால், அந்தக் குற்றவாளியை காப்பாற்றுவதற்காக, திமுக வழக்கறிஞர்கள் எவ்வளவு பொய் சொல்ல முடியுமோ அவ்வளவு பொய்களை நீதிமன்றத்திலேயே சொன்னார்கள். அந்த வீடியோ கிராஃபிக்ஸ் செய்யப்பட்டது, எடிட் செய்யப்பட்டது என்று என்னென்னவோ சொன்னார்கள். அதைவிடக் கொடுமை மாநில முதல்வர் மு.க.ஸ்டாலினே, ஒரு சமூகவிரோதிக்காக குரல் கொடுத்தது.

அதிமுக அமைச்சர்கள் பலர் மீது பெரிய பெரிய குற்றச்சாட்டுகள் எல்லாம் இருக்கிறபோது, உங்கள் தந்தை மீது மட்டும் பொய்வழக்குப்போட வேண்டிய அவசியம் என்ன?

திமுக அரசின் தவறுகளை உடனுக்குடன் சுட்டிக்காட்டுகிறவர் என் தந்தை. அவரது குரல்வளையை நசுக்க வேண்டும். இனிமேல், திமுக ஆட்சியை எதிர்த்து யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்று ஆட்சி அதிகாரத்தையும், காவல் துறையையும் பயன்படுத்திப் பழிவாங்குகிறார்கள். அப்பாவை கைது செய்வதற்கு சம்மன் கூட வழங்கவில்லை. அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து, பெண்கள், குழந்தைகள் முன்னாலேயே அப்பாவை மரியாதைக்குறைவாக நடத்தினார்கள். ஆபீஸ் ரூமில் வெயிட் பண்ணச் சொல்லியும் கேட்காமல் உள்ளே நுழைந்து, கைது செய்தார்கள்.

வக்கீலுடன் பேச அனுமதிக்கவில்லை. கையைப் பிடித்தும், சட்டையைப் பிடித்தும் இழுத்தார்கள். அப்பாவுக்கு சுகர், பிரஷர் எல்லாம் இருக்கிறது. ஒரு டாக்டராக நானும் உடன் வருகிறேன் என்றபோது, அதற்கும் அனுமதி மறுத்துவிட்டார்கள். பின்னால் வேறு காரில் வரச் சொல்லிவிட்டு, என் காரை வேண்டுமென்றே பேரிகாட் போட்டு தடுத்து நிறுத்திவிட்டார்கள். 8.30 மணிக்கு கைது செய்த அப்பாவை இரவு 12.30 மணிக்குத்தான் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அதுவரையில் அப்பாவை எங்கே வைத்திருந்தார்கள் என்ன செய்தார்கள் என்றே எனக்குத் தெரியாது. குடும்பத்தினர் எல்லாம் பரிதவித்துப்போனோம்.

சினிமாவில்தான் பார்த்திருப்போம். ரவுடிகள் யாரையாவது கடத்திக்கொண்டு, இரவு முழுக்க காரிலேயே ஊரைச் சுற்றி பயமுறுத்துவார்கள். அப்படித்தான் காவல் துறை என் தந்தையை நடத்தியது. அப்பாவே சொன்னார், என்னைக் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது என்று. அந்த அளவுக்கு அத்துமீற எங்க அப்பா என்ன ரவுடியா? இது பழிவாங்கும் நடவடிக்கை இல்லாமல் வேறென்ன?

ஜெயலலிதா இருந்திருந்தால், முன்பு வந்த பாலியல் குற்றச்சாட்டு, இன்றைய தாக்குதல் தொடர்பாக உங்கள் தந்தை மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருப்பார் என்று சொல்கிறார்களே?

தேவையில்லாமல் இந்தப் பிரச்சினையை திசை திருப்ப வேண்டாம். காவல் துறை அத்துமீறல் பற்றி மட்டுமே நான் பேச விரும்புகிறேன். மற்ற கேள்விகள் குறித்து பிறகு பேசுகிறேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in