சட்டையைக் கிழித்துக்கொண்டு போய் மனு கொடுக்க மட்டும் ஆளுநர் தேவையா?

மு.க.ஸ்டாலின் மீது வானதி சீனிவாசன் பாய்ச்சல்
வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன் என்றதும், அவரது புன்னகை தவழும் முகமும், தன்னம்பிக்கையான பேச்சும், மலர் மாலைபோல் தொடுக்கப்பட்ட சொற்கோவையும்தான் நினைவுக்குவரும். இப்போது அவரது பேட்டியிலும் சரி, பேச்சிலும் சரி கொஞ்சம் கோபமும், விரக்தியும் தென்படுகிறது. அவர் காமதேனு மின்னிதழுக்காக கொடுத்த பேட்டி இது.

சட்டப்பேரவை எப்படி நடக்கிறது? உங்களுக்குப் போதிய வாய்ப்புக் கொடுக்கிறார்களா?

4 உறுப்பினர்களைக் கொண்ட பாஜகவுக்கு உரிய வாய்ப்பு கொடுக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், தனிப்பட்ட முறையில், என்னைப் பொறுத்தவரைக்கும் கொடுத்த வாய்ப்பில் முழுமையாகப் பேச விடுவதே கிடையாது. என்னுடைய ஒவ்வொரு உரையின்போதும், அமைச்சர்கள் திட்டமிட்டே குறுக்கிடுகிறார்கள். பதில் அளிக்கிறோம் என்ற பெயரில் மாற்றி மாற்றிப் பேசி, என்னுடைய நேரத்தை எல்லாம் அவர்களே எடுத்துக்கொள்கிறார்கள். சபாநாயகரும் உங்கள் நேரம் முடிந்துவிட்டது என்று உட்காரச் சொல்லிவிடுகிறார்.

அதுமட்டுமின்றி, நான் பேசிய வீடியோ பதிவையும் முழுமையாகக் கொடுப்பதில்லை. கேள்வி நேரத்தை மட்டும்தான் நேரடி ஒளிபரப்பு செய்கிறார்கள். கேள்விகளை எல்லோரும் எழுத்துபூர்வமாகக் கொடுத்தாலும், யார் கேள்வி கேட்கவேண்டும் என்று நேரம் ஒதுக்குவது சபாநாயகர்தான். ஆக, தனிப்பட்ட முறையில் எனக்கு மிகப்பெரிய ஏமாற்றம்தான்.

ஆனால், பாஜக சட்டமன்றக்குழு தலைவர் நயினார் நாகேந்திரன் சபாநாயகர் பற்றி இப்படி எல்லாம் குறை கூறுவதில்லையே? இன்னும் சொல்லப்போனால் அவரும், சபாநாயகரும் கட்சி வேறுபாடின்றி நண்பர்களைப் போல பேசிக்கொள்கிறார்களே?

அவர்கள் இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். ஒரே கல்லூரியில் படித்தவர்கள். இதெல்லாம், அந்த நட்பில் வருவது அவ்வளவுதான்.

காலையில் கமலாலயத்தில் நடந்த பாஜக விழாவில் மோடியைப் புகழ்ந்த பாக்யராஜை, மாலையிலேயே "நான் பாஜககாரன் இல்லை. திராவிட கருத்துகளை உள்வாங்கியவன்" என்று சொல்ல வைத்துவிட்டார்களே..?

இதுதான் தமிழ்நாட்டில் கருத்துச் சுதந்திரம் இன்றிருக்கிற நிலைமை.

இளையராஜா மோடியை ஆதரித்து எழுதியதற்குக் காரணம், அவருக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து நோட்டீஸ் வந்ததுதான் காரணம் என்கிறார்களே... அப்படியா?

தமிழ்நாட்டில் பிரதமர் மோடியை ஆதரித்து யாராவது பேசினால், அவங்க பதவிக்காக பேசுறாங்க, இல்லைன்னா பயத்துல பேசுறாங்க, பின்னணியில் ஆர்.எஸ்.எஸ், பாஜக இருக்குதுன்னு சொல்றீங்க. சரி ஓகே, பிரதமர் நரேந்திர மோடியை எதிர்ப்பவர்களுக்குப் பின்னாடி யாரு இருக்காங்க? பிரதமரை ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான நபர்கள் ரொம்பக் கேவலமாக விமர்சிக்கிறதும், மக்கள் பிரதிநிதிகளே பிரதமருக்கு மரியாதை கொடுக்காமல் நடந்துக்கிறதும் தொடர்கிறதே, இவங்க பின்னாடி யார் இருக்காங்க? இந்த நாட்டுக்கு எதிரான சக்திகள் உங்களுக்குப் பின்னால இருக்கிறதா? அல்லது இப்படியெல்லாம் பேசுவதற்கு ஏதோ பிரிவினைவாத சக்திகள் உங்களைத் தூண்டிவிடுகிறதா? இப்படிப் பேசுவதற்கு அவர்கள் பணம் தருகிறார்களா? மோடியை ஆதரிப்பவர்களுக்குப் பின்னாடி யாரோ இருக்கிறார்கள் என்றால், எதிர்ப்பவர்களுக்குப் பின்னாலும் யாரோ இருக்கணும்ல. அது யாருன்னு சொல்லுங்க.

அம்பேத்கர் குறித்த விவாதத்துக்கு வருமாறு அழைத்த பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, ”மோடியை வேண்டுமானால் என்னுடன் விவாதிக்க அனுப்புங்கள். அரசியலில் அண்ணாமலை ஒரு சப்ஜூனியர், அவரோடு விவாதிக்க அவரைப் போல ஒரு சப் ஜூனியரை வேண்டுமானால் விசிகவில் இருந்து அனுப்பிவைக்கிறேன்” என்று சொல்லிவிட்டாரே திருமாவளவன்?

அம்பேத்கரின் நிறைய கனவுகளுக்கு வடிவம் கொடுத்துக்கொண்டிருப்பவர் மோடிதான். இல்லை என்று மறுப்பதற்கு உண்மையாகவே அவர்களிடம் ஏதாவது கருத்து இருந்திருந்தால் விவாதத்துக்கு வந்திருப்பார்கள். நாங்க அவர்கிட்ட தான் பேசுவோம், இவர்கிட்டதான் பேசுவோம் என்று சொல்வதே அவர் தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொண்டதற்கு சமம்தான்.

மயிலாடுதுறையில் ஆளுநர் மீது தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை என்று ஸ்டாலின் விளக்கமளித்திருக்கிறாரே?

உண்மையை ஓரளவுக்கு மேல மறைக்கவே முடியாது. அன்றைக்கு என்ன நடந்தது என்பதற்கான வீடியோ ஆதாரங்களே வெளியாகிவிட்டது. தமிழக முதல்வர் ஸ்டாலின் வேண்டுமென்றே ஆளுநருடன் மோதல் போக்கைக் கடைபிடிக்கிறார்; அவரை அவமதிக்கிறார். தேநீர் விருந்துக்கு தேதியும் கொடுத்துவிட்டு, பிறகு சட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டிருப்பதால் அந்த விருந்தை புறக்கணிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். தேதி கொடுக்கும்போது சட்ட மசோதாக்கள் கிடப்பில் இருப்பது முதல்வருக்குத் தெரியாதா?

சட்டப்பேரவையில், “நானும் ஆளுநரும் நண்பர்கள்தான். எங்களுக்குள் நல்ல உறவிருக்கிறது” என்று சொல்லிவிட்டு மறுநாளே தனது கூட்டணி கட்சிக்காரர்களை விட்டு ஆளுநர் கார் மீது தாக்குதல் நடத்துவது என்ன மாதிரியான அரசியல் விளையாட்டு? பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுகிற வேலையை முதல்வர் ஸ்டாலின் கைவிட வேண்டும். எதிர்க்கட்சியாக இருக்கும்போது சட்டையைக் கிழிச்சிக்கிட்டுப் போய் மனு கொடுக்கிறதுக்கு ஆளுநர் வேணும். ஆளுங்கட்சியாகிட்டா ஆளுநர் வேண்டாம்ங்கிறது என்ன மாதிரியான அரசியல் நிலைப்பாடு?ன்னு மக்களே கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. வன்முறையைக் கையில் எடுக்காதீங்க. அப்படி வன்முறையை கையில் எடுத்தவர்கள் அந்த வன்முறையாலேயே அழிந்திருக்கிறார்கள் என்பதுதான் வரலாறு.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தொடர் மின்தடைக்கு மத்திய அரசுதான் காரணம் என்கிறார்களே?

10 வருடமாக அதிமுக ஆட்சியில் மின்வெட்டு இல்லையே, அவர்கள் எப்படிச் சமாளித்தார்கள்? இதற்கு மட்டும் என்ன புதுசா விளக்கம் கொடுக்கிறார்கள்? திமுக ஆட்சி என்றாலே மின்வெட்டு என்பதை மறுபடியும் நிரூபித்திருக்கிறது இந்த அரசு அவ்வளவுதான். இது திராவிட மாடல் அரசு. நாங்களே எல்லாத்தையும் பண்ணிக்கிட்டு இருக்கிறோம். எங்களைப் பார்த்துத்தான் எல்லா மாநிலங்களும் பின்பற்றுகின்றன என்று சொல்கிறார்களே. நாங்க எஃபிசியன்ஸி கவர்மென்ட் என்று சொல்பவர்கள் எவ்வளவு பிரச்சினை வந்தாலும் மேனேஜ் பண்ண வேண்டாமா? அதுதானே எஃபிசியன்ஸி?

எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் பொருட்படுத்தாமல், இஸ்லாமியர்களின் வீடுகளை குறிவைத்து இடிப்பது மனிதாபிமானமற்ற செயல் இல்லையா? இதைப் பாஜகவினரால் புல்டோசர் ஆட்சி என்று எப்படிப் பெருமையாகச் சொல்லிக்கொள்ள முடிகிறது?

அங்கே இருக்கும் மாநில அரசாங்கம் எவை ஆக்கிரமிப்புகள், எவை சட்டவிரோதக் கட்டிடங்கள் என்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்கிறார்கள். இதை இங்கிருந்துகொண்டு விமர்சிப்பது எப்படிச் சரியாக இருக்கும்? ஆக்கிரமிப்பு செய்து கட்டியிருந்தால் கோயிலாக இருந்தாலும் இடிக்கலாம் என்று சொல்பவர்கள், இதை மட்டும் ஏன் அரசியலாக்குகிறார்கள் என்று தெரியவில்லை.

பாஜகவோடு சேர்ந்து 3 தேர்தல்களைச் சந்தித்த பாமக இப்போது திமுகவுடன் நெருக்கம் காட்டுகிறதே?

தேர்தல் கூட்டணி என்பது அந்தந்த தேர்தலுக்குத்தான். அதற்குப் பின்பு ஒவ்வொரு கட்சியும் ஒரு நிலைப்பாட்டை எடுப்பது இயல்புதான். இப்போதைக்கு அவர்கள் பாஜக கூட்டணியில் இருந்து வெளியே போயிருப்பதாகச் சொல்கிறார்கள். அடுத்த தேர்தல் வரும்போது பார்ப்போம், என்ன நிலைப்பாட்டை எடுக்கிறார்கள் என்று.

பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் சேரப் போவது பற்றி பரபரப்பாக விவாதிக்கிறார்களே... அவர் அப்படி சேர்ந்துவிட்டால் காங்கிரஸ் கட்சி பலப்பட்டுவிடுமா?

(சத்தமாகச் சிரிக்கிறார்). நானும் பத்திரிகைகளில்தான் பார்த்தேன். கூடவே, காங்கிரஸ் கோஷ்டி மோதல்கள் பற்றிய செய்திகளையும் பார்த்தேன். அடுத்த தேர்தல் வரைக்கும் காங்கிரஸ் கட்சின்னு ஒண்ணு இருந்து அது தேர்தலைச் சந்தித்தால் அப்புறம் இதுபற்றி பேசுவோம்.

தமிழ்நாட்டில் 1970-களிலேயே குடிசை மாற்று வாரியம் வந்துவிட்டது. குஜராத் மாடல் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பாஜக, வெளிநாட்டுத் தலைவர்கள் வரும்போதெல்லாம் சுவர் கட்டியும், வெள்ளைத் துணியை கட்டியும் குடிசைகளை மறைத்துக்கொண்டிருப்பது பற்றி என்ன சொல்கிறீர்கள்?

ஒரு வெளிநாட்டுத் தலைவர் வருகிறபோது நம் நாட்டில் உள்ள கலாச்சார தலங்கள், முக்கியமான இடங்களுக்கு அழைத்துச்சென்று காட்டுகிறோம். ஒரு துணியைக் கட்டிவிட்டால் குடிசையே இல்லை என்று ஆகிவிடுமா? அப்படி எல்லாவற்றையும் மறைக்கத்தான் முடியுமா?

அப்புறம், அந்த வெள்ளைத்துணிக்கு என்ன அவசியம் வந்தது?

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வெளிநாட்டுத் தலைவர்கள் யாரையும் இவர்கள் டெல்லியைத் தாண்டி வெளியே செல்லவோ, பார்க்கவோ அனுமதித்ததில்லை. அவர்களைப் போல வெளிநாட்டுத் தலைவர்களை டெல்லியை மட்டும் சுற்றிகாட்டிவிட்டு அனுப்பிவைக்காமல், எல்லா மாநிலங்களுக்கும் கூட்டிக்கொண்டு போகிறார் பிரதமர். இதுவே மாநிலங்களுக்கு கொடுக்கிற முக்கியத்துவம்தானே?

எச்.ராஜா கேரள ஆளுநர் ஆகப்போவதாக வரும் செய்திகள் உண்மையா?

எங்கள் கட்சியில் யாருக்கு எந்தப் பதவி கொடுக்க வேண்டும் என்று தலைமைக்குத் தெரியும். அவர்கள் முடிவெடுப்பார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in