திமுகவுக்கு இது முந்தைய தேர்தல்களைப் போல இருக்காது!

‘மனிதநேய ஜனநாயக கட்சி’ மு.தமிமுன் அன்சாரி பேட்டி
தமிமுன் அன்சாரி
தமிமுன் அன்சாரி

சட்டப்பேரவைத் தேர்தலில் நிபந்தனையின்றி திமுக கூட்டணியை ஆதரித்த மனிதநேய ஜனநாயக கட்சி, உள்ளாட்சித் தேர்தலில் தனித்துக் களமிறங்கியிருக்கிறது. இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிப்பதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு திமுகவை வலியுறுத்திவரும் அதன் தலைவர் மு.தமிமுன் அன்சாரியுடன், ஹிஜாப் பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து காமதேனுவுக்காக உரையாடினோம்.

தமிமுன் அன்சாரி என்றாலே தனியரசு, கருணாஸ் ஆகிய பெயர்களும் சேர்ந்தே நினைவுக்குவரும். இப்போதும் அவர்களுடன் தொடர்பைப் பேணுகிறீர்களா?

எங்கள் நட்பு அரசியலைக் கடந்தது. சகோதரத்துவம் கலந்தது. எனவே, அது தொடர்கிறது. வாரம் ஒருமுறை நாங்கள் பேசிக்கொள்வோம். எங்களது அரசியல் நிலைப்பாடுகள் மாறியிருக்கலாம். நல்லெண்ண ரீதியிலான எங்கள் உறவுகள் எந்த பாதிப்பும் இல்லாமல் தொடர்கிறது.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால், பொது சிவில் சட்டம் அவசியம் என்கிறார்கள் பாஜகவினர். கல்வி நிலையங்களில் மாணவர்களிடையே எந்த வித்தியாசமும் தெரியக்கூடாது என்பதற்காகத்தான் சீருடை. அதற்கு மேல் ஹிஜாப்பை அணிவது எப்படி நியாயமாகும் என்று சிலர் கேட்கிறார்களே?

இந்தியா என்பது பல்வேறு இனம், மொழி, பிராந்தியங்களைக் கொண்ட ஒரு துணைக் கண்டம். பல்வேறு துணை தேசியங்களின் ஒன்றியம்தான் இந்தியா. இப்படியான தேசத்தில் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே சட்டம், ஒரே கலாச்சாரம் என்ற கொள்கை நடைமுறைக்குச் சாத்தியமே அற்றது. வழிபாட்டு உரிமை, மத உரிமை, கலாச்சார உரிமை இவை எல்லாம் நம்முடைய அரசமைப்புச் சட்டத்தால் எல்லா மதத்தினருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த அடிப்படையில்தான் பள்ளி - கல்லூரிக்குச் செல்லும் வயதுவந்த மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்கிறார்கள்.

மாணவர்கள் அனைவரும் ஒரே சீருடைதான் அணிய வேண்டும் என்பது கேட்பதற்கு நன்றாக இருக்கலாமே தவிர, நடைமுறைக்குச் சாத்தியமானதல்ல. கிறிஸ்தவ நண்பர் கழுத்தில் சிலுவையும், இந்து சகோதரர் நெற்றியில் விபூதியும், இந்து சகோதரி நெற்றியில் பொட்டும் அணிந்துவருவது அவர்களது உரிமை. சீக்கிய ராணுவ வீரர்களும், போலீஸாரும் தலையில் தொப்பிக்குப் பதில் தலைப்பாகை அணிந்துகொள்ள அனுமதி இருக்கிறது. சீக்கிய எம்பிக்கள், இடுப்பில் சிறுகத்தியுடன் நாடாளுமன்றத்துக்குள்ளே செல்ல நம் சட்டம் அனுமதிக்கிறது. ஜைன மத சாமியார்கள் நிர்வாணமாக நாட்டின் எந்த இடத்திலும் உரையாற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்களா இல்லையா? ஹரியாணா சட்டமன்றத்திலேயே கூட ஒருவர் அப்படி உரையாற்றினாரே? இதெல்லாம் அவரவர் உரிமை, அவரவர் பண்பாடு, அவரவர் கலாச்சாரம் என்கிறபோது, இஸ்லாமிய மாணவிகள் தலையை மறைத்து ஆடை அணிவதை மட்டும் ஏன் தடுக்கிறார்கள் என்பதே என்னுடைய அடிப்படையான கேள்வி.

இதற்காக, ஆளும் பாஜகவை ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் கண்டித்திருக்கிறார்கள். ஆனால், கர்நாடக காங்கிரஸோ, மதச்சார்பற்ற ஜனதா தளமோ அதைக் கண்டிக்காதது எதைக் காட்டுகிறது? ஒட்டுமொத்த கர்நாடக மனநிலையும் ஹிஜாப்புக்கு எதிரானதாக இருக்கிறதா?

சமீபத்தில் நடைபெற்ற கர்நாடக உள்ளாட்சித் தேர்தல்களில் காங்கிரஸ் அதிக இடங்களைப் பெற்றதை, ஆளும் பாஜகவால் சகித்துக்கொள்ள முடியவில்லை. காவிரிக்கு குறுக்கே அணை கட்டக்கோரி கர்நாடக காங்கிரஸ் நடத்திவரும் பேரணிக்கு கிடைத்துள்ள ஆதரவும் பாஜகவுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில்தான் பிரச்சினையை திசை திருப்பும் நோக்கத்தோடு, சங் பரிவார் சக்திகள் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கின்றன. இதில் எதிர்க்கருத்து சொன்னால், தங்களைச் சிக்கலில் ஆழ்த்திவிடுவார்கள் என்கிற அச்சத்தின் காரணமாகவே, அங்கே காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் அமைதி காப்பதாக எண்ணுகிறேன்.

அதேநேரத்தில், சித்தாந்த ரீதியாக பாஜகவினரை வலுவாக எதிர்த்தால்தான் மதச்சார்பற்ற சக்திகளுக்கு எதிர்காலம் இருக்கும் என்பதையும் நினைவூட்ட விரும்புகிறேன். பாஜகவினரின் பூச்சாண்டிகளுக்குப் பயந்தால், அது இவர்களுக்குப் பின்னடைவைத்தான் தரும். காங்கிரசும், மஜதவும் அமைதியாக இருக்கலாம். ஆனால், ஒட்டுமொத்த கர்நாடக மக்களும் இந்தச் செயலுக்கு எதிராக கொதித்தெழுந்திருப்பதை நாம் கவனிக்க வேண்டும். அந்த முஸ்லிம் மாணவிகளுக்கு உடன் பயிலும் இந்து மாணவ மாணவிகளே அரணாக இருப்பதையும், இந்துக்களின் ஆதரவுடன் ஹிஜாப்புக்கு ஆதரவான வாசகங்கள் 3 நாட்களாக நாடு தழுவிய அளவில் ட்விட்டரில் டிரண்ட் ஆகியிருப்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இதுதான் இப்போது நமக்கிருக்கிற ஒரே நம்பிக்கை.

நேற்று குஜராத், இன்று கர்நாடகா, நாளை தமிழ்நாடு என்கிறார்கள். இதை எதிர்கொள்வதற்கு தமிழக சிறுபான்மை அமைப்புகள் ஒற்றுமையாக ஓரணியில் திரண்டிருப்பது போல் தெரியவில்லையே?

முஸ்லிம் இயக்கங்களுக்குள் ஒற்றுமை இருக்கிறதா இல்லையா என்பது இங்கே முக்கியமல்ல. இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக இருக்கிறார்களா என்பதுதான் முக்கியம். அந்த வகையில் தமிழ் நிலத்தில் இந்துக்களும், முஸ்லிம்களும் மாமன் மச்சான்களாக உறவுசொல்லிப் பழகுகிறார்கள். ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுப்பதில்லை. அரசியலில் ஆளுக்கொரு கட்சியில் இருந்தாலும், அன்றாட வாழ்வியலில் ஒரே குடும்பமாகத்தான் இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் இந்தியாவுக்கே தமிழ்நாடுதான் எடுத்துக்காட்டு. எனவேதான் இங்கு வாழும் சிறுபான்மை மக்கள், மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருக்கிறார்கள். இந்த நிலை வடமாநிலங்களில் இல்லாததுதான் துரதிருஷ்டம்.

வடமாநிலத் தேர்தல்களில் இன்றும்கூட இஸ்லாமியப் படையெடுப்புகள் நினைவூட்டப்படுகின்றன. அரசியலில் மதவெறியை மட்டுப்படுத்த வேண்டுமெனில், நாம் எதை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

நம்முடைய பாடப் புத்தகத்திலேயே விஷமத்தனம் இருக்கிறது. முஸ்லிம் மன்னர்களைப் பற்றிச் சொல்லும்போது, இந்தியாவுக்கு முஸ்லிம்கள் படையெடுத்துவந்தார்கள் என்றும், ஆரியர் படையெடுப்பைப் பற்றிச் சொல்லும்போது ஆரியர் வருகை என்றும் குறிப்பிடுகிறார்கள். பாபர் இந்தியாவுக்குப் படையெடுத்துவந்து யாருடன் மோதினார்? ஏற்கெனவே டெல்லியை ஆண்ட இப்ராகிம் லோடி என்ற இன்னொரு முஸ்லிம் மன்னருடன்தான் மோதினார். அந்த இப்ராகிம் லோடிக்கு எதிராகப் போரிடவாருங்கள் நாங்கள் ஆதரிக்கிறோம் என்று அழைத்ததே ராஜபுத்தை ஆண்ட இந்து மன்னர்தான். ஆக, இதெல்லாம் அந்தக் காலத்தில் நடந்த அரசியல் நடவடிக்கைகள்; மதம் சார்ந்த பிரச்சினையல்ல. ஔரங்கசீப்பும், சிவாஜியும் மோதிக்கொண்டார்கள் என்றால், மதத்துக்காகத்தான் சண்டையிட்டார்கள் என்று சொல்வது முட்டாள்தனம். அவர்களது நிலப்பரப்புக்காக, அரசியலுக்காகத்தான் சண்டையிட்டார்கள். சிவாஜியின் படையில் முஸ்லிம்கள் இருந்திருக்கிறார்கள், ஔரங்கசீப் படையில் இந்துக்கள் இருந்திருக்கிறார்கள் என்கிற உண்மையை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, மாணவர்கள் மத்தியில் இனியும் விஷத்தைப் பரப்பாதீர்கள் என்று நாம் கேட்டுக்கொள்ள வேண்டும்.

மதவாதத்தில் இருந்து வரும் தலைமுறையை மீட்டெடுக்க வேண்டுமென்றால், பாடப் புத்தகங்களில் ஜனநாயக தத்துவங்களைச் சேர்த்து ஒவ்வொருவர் மனதிலும் முற்போக்கு சிந்தனைகளை விதைக்க வேண்டும். மதம் என்பது வீட்டுக்குள்ளும், வழிபாட்டுத்தலங்களிலும் மட்டும்தான் இருக்க வேண்டும். வீதியிலே நாம் மனிதர்களாக, சகோதரர்களாக இருக்க வேண்டும் என்கிற உயரிய பண்பை பள்ளிக்கூடங்களில் இருந்தே நாம் வளர்த்தெடுக்க வேண்டும். அதேபோல மதச்சார்பின்மை, சமூக நீதி பேசும் அரசியல் கட்சிகள், நாட்டின் நலனைக் கருத்தில்கொண்டு ஓரணியில் திரள வேண்டும்.

ஆனால், சிறுபான்மையினர் தரப்பில் இருந்தும் சிலர் - சில அமைப்புகள் - வகுப்புவாதத்தைத் தூண்டும் வகையில் பேசத்தானே செய்கிறார்கள்?

மதவெறிக்கு நிறமில்லை, மொழியில்லை, மதமும் இல்லை. எனவே, எந்த மதத்தினர் அதை முன்னெடுத்தாலும் நாம் அனைவரும் சேர்ந்து முறியடிக்க வேண்டும். சிறுபான்மை மதவெறி பெரும்பான்மை மதவெறிக்குத் தீனிபோட்டு வளர்த்துவிடும். உண்மையாகவே பெரும்பான்மை மதவாதத்தை முறியடிக்க வேண்டுமென்றால், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஜனநாயக சக்தியோடும் சமூக நீதி சிந்தனையுடனும் இணைந்து செயல்பட வேண்டுமே தவிர, தங்கள் தரப்பில் இருந்து இன்னொரு வகுப்புவாத சக்தியை வளர்த்துவிட்டுவிடக் கூடாது. அது தங்களுக்கே கேடாக முடிந்துவிடும் என்கிற எச்சரிக்கை உணர்வு முஸ்லிம் மக்களுக்கு இருக்கிறது என்பதை சகோதரர்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சிறுபான்மையினர் வாக்குகள் திமுகவுக்குக் கிடைத்தன. இந்த முறை அப்படி நடக்கும் என்று நினைக்கிறீர்களா?

வடஇந்திய அரசியல் படையெடுப்பு, தமிழ்நாட்டின் அரசியலையும், கலாச்சாரத்தையும் கெடுத்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில்தான் எங்களுடைய மனிதநேய ஜனநாயக கட்சி உட்பட அனைத்து சிறுபான்மை அரசியல் இயக்கங்களும் அந்தத் தேர்தலில் ஒரே அணியாகத் திமுகவை ஆதரித்தோம். வரலாறு காணாத அளவுக்கு 90 சதவீத முஸ்லிம்கள் திமுகவுக்கு வாக்களித்தார்கள். உள்ளாட்சித் தேர்தலில் இந்திய யூனியன், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி போன்ற கூட்டணியில் இருக்கிற கட்சிகளுக்கு மட்டுமின்றி, தங்கள் கட்சியில் இருக்கிற சிறுபான்மையிருக்குக்கூட திமுக உரிய பிரதிநிதித்துவமும், வாய்ப்பும் கொடுக்கவில்லை. அதனால் இணைந்து செயல்பட விரும்பிய நாங்களும், இப்போது தனித்துப் போட்டியிடுகிறோம்.

நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலைக்கு முயற்சிப்போம் என்று தன்னுடைய தேர்தல் அறிக்கையில் சொன்ன திமுக, இப்போது அதையும் செய்யவில்லை என்பதும் சிறுபான்மை மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரையில், உள்ளூர் முகங்களுக்கே மக்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பதையும் பார்க்க வேண்டும். எனவே, பாராளுமன்ற, சட்டமன்றத் தேர்தலைப் போலவே உள்ளாட்சித் தேர்தலும் இருக்கும் என்று நாம் சொல்ல முடியாது.

நீட் விவகாரத்தில் திமுக, அதிமுக இரு கட்சிகளும் மாறிமாறி குற்றம் சாட்டிக்கொள்கின்றன. நேரடி விவாதத்துக்குத் தயார் என்று ஸ்டாலினும் பழனிசாமியும் முண்டா தட்டுகிறார்கள். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

நீட் தேர்வு விவகாரத்தில், பாஜகவைத் தவிர தமிழ்நாட்டில் உள்ள எல்லாக் கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில்தான் இருக்கின்றன. எனவே, இதை முன்வைத்து கருத்து மோதலில் ஈடுபடுவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. எப்படியாவது ஒன்றுபட்டு இதிலிருந்து நாம் விலக்கு பெற வேண்டும் என்பதுதான் எங்களைப் போன்றோரின் விருப்பம். அதேநேரத்தில், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்தான் இதற்குத் தீர்வு கிடைக்கும், அதுவரையில் அதற்கு வாய்ப்பில்லை என்கிற புரிதலுடன் நாம் ஒன்றுபட்டுப் போராட வேண்டும் என்பதே என்னுடைய கருத்து.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in