ஊழல் விஷயத்தில் அதிமுகவுக்கு சரியான மாற்றாக திமுக இல்லை!

ஆம் ஆத்மி மாநில தலைவர் வசீகரன் பேட்டி
ஊழல் விஷயத்தில் அதிமுகவுக்கு சரியான மாற்றாக திமுக இல்லை!

“தேவைப்பட்டால் ஆம்ஆத்மி கட்சியின் தலைமையையும் ஏற்றுக்கொள்வோம்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சொல்லியிருக்கிறார். எப்படியாவது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் ஆஆகவையும் சேர்த்துவிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலினும் விரும்புகிறார். அதற்கு மாறாக கோவையில் நடந்த ஆம் ஆத்மியின் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில், 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் தனித்தே களம்காண்பது என முடிவெடுத்திருக்கிறது ஆம் ஆத்மி. இந்தச் சூழலில் அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரனுடன் ஒரு பேட்டி.

டெல்லியின் தாக்கம் அருகிலுள்ள பஞ்சாப்பிலும் இருந்ததால் அங்கு வென்றீர்கள். எந்த தைரியத்தில் மற்ற மாநிலங்களிலும் தனித்துப் போட்டியிடுகிறது ஆஆக?

அப்படியென்றால் கோவாவில் எப்படி 2 இடங்களில் வென்றோம்? மோடியைப் போல எங்களை நாங்களே விளம்பரப்படுத்திக்கிறது இல்ல. இது மக்கள் புரட்சி. சமீபத்தில் நடந்த சூரத் மாநகராட்சித் தேர்தலில் 27 இடங்களைக் கைப்பற்றி பிரதான எதிர்க்கட்சியாகியிருக்கிறது ஆஆக. இத்தனைக்கும் கேஜ்ரிவால் அங்கே பிரச்சாரத்துக்கே போகவில்லை. இந்த வெற்றிக்குக் காரணம், குஜராத் மாடல் என்று பாஜகவினர் அடித்துவிட்டது எல்லாம் பொய் என்பதை குஜராத்தியர்களே உணர்ந்துவிட்டது தான். டெல்லி மாடல் ஆட்சிதான் வேண்டும் என்று ஒவ்வொரு இந்தியரும் விரும்ப ஆரம்பித்துவிட்டார்கள். எனவேதான் நாங்கள் எங்கள் எல்லையை விரிவுபடுத்துகிறோம்.

வசீகரன்
வசீகரன்

“உபியில் 349 தொகுதிகளில் டெபாசிட் போன கட்சி. நோட்டாவிடம் தோற்ற கட்சி” என்று ஆஆகவை பாராளுமன்றத்திலேயே கேலி செய்திருக்கிறாரே அமித் ஷா?

இதற்கு, “நாங்களாவது இப்போதுதான் உபியில் முதன்முறையாகப் போட்டியிட்டோம். நீங்கள் 1980-லேயே தமிழ்நாட்டில் போட்டியிடத் தொடங்கிவிட்டீர்கள். ஆனால், 9 சட்டமன்றத் தேர்தல்களில் முட்டை வாங்கியிருக்கிறீர்கள். 3 தேர்தல்களிதான் சிங்கிள் டிஜிட் எம்எல்ஏ கிடைத்தார்கள். டெபாசிட் போனதில் உலக சாதனை படைத்த நீங்கள் எல்லாம் எங்களைப் பற்றிப் பேசுகிறீர்களா?" என்று எங்கள் எம்பி சஞ்சய் சிங் அங்கேயே பதிலடி கொடுத்துவிட்டார்.

பாஜகவுக்கு எங்களைக் கண்டு பயம். நாம் 100 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட அஜண்டாவை இப்போதுதான் செயல்பாட்டுக்குக் கொண்டுவர முடிந்திருக்கிறது. இந்த ஆஆக இவ்வளவு வேகமாக வளர்கிறதே என்கிற பயம். எல்லாவற்றுக்கும் மேலாக சாதி, மத அரசியல் பேசாமல் இவ்வளவு ஓட்டு வாங்குகிறார்களே, இவர்களை எப்படிக் கையாள்வது என்கிற பதற்றம். பிரதமர் பதவிக்கு மோடி, ராகுலை விட கேஜ்ரிவாலே தகுதியானவர் என்று மக்கள் முடிவெடுத்துவிட்டார்களோ என்கிற அச்சம். இதெல்லாம் சேர்ந்துதான் அவர்களை இப்படிப் பேச வைத்திருக்கிறது.

பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகளை எல்லாம் காங்கிரஸ் தலைமையில் ஓரணியில் திரட்ட வேண்டும் என்கிறார் மு.க.ஸ்டாலின். டெல்லியில் கேஜ்ரிவாலை சந்தித்தது கூட அந்த நோக்கத்தில்தான் என்கிறார்களே..?

டெல்லியில் அரசுப் பள்ளிகளும், அரசு மருத்துவமனைகளும் செயல்படுகிற விதத்தைப் பார்க்க பல்வேறு மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் வருகிறார்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் டெல்லி அரசின் கல்வி, மருத்துவத்துறையின் செயல்பாட்டை பார்த்தறியச் சென்றதாகவே நாங்கள் நினைக்கிறோம். அவர் எந்த நோக்கத்தில் போனார் என்று எனக்குத் தெரியவில்லை. தேர்தல் நெருக்கத்தில்தான் இதுபற்றி கருத்துச் சொல்ல முடியும்.

தேவைப்பட்டால் ஆஆகவின் தலைமையையும் ஏற்போம் என்று ப.சிதம்பரம் சொல்லியிருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

முதலில் எங்களை பாஜகவின் ‘பி டீம்’ என்றும், ஸாப்ட் இந்துத்துவா என்றும் விமர்சித்தார்கள் காங்கிரஸ்காரர்கள். “2019 மக்களவைத் தேர்தலில் டெல்லியில் பாஜகவின் வெற்றியைத் தடுப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்ல நாங்கள் தயார்” என்று கேஜ்ரிவால் சொன்னார். அதன்படி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையையும் தொடங்கினோம். ஆனால், எங்களை அவர்கள் மதிக்கவே இல்லை. இப்போது தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையை ஏற்றுக்கொண்டதுபோல, தேவைப்பட்டால் கேஜ்ரிவால் தலைமையையும் ஏற்றுக்கொள்வோம் என்கிறார்கள். ஆனால், காலம் கடந்துவிட்டதாகவே கருதுகிறேன். உபி தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் மீதான நம்பிக்கை ரொம்பவே குறைந்துவிட்டது.

எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆட்சி ஒப்பிடுக...

அதிமுக ஆட்சியை டெல்லியின் அடிமை அரசாகவே மக்கள் பார்த்தார்கள். பாஜக இன்னும் எதை எல்லாம் திணிக்கப் போகிறதோ என்கிற அச்சமும் இருந்தது. திமுக ஆட்சியில் அந்த அச்சமெல்லாம் இல்லை. ஆனால், ஊழல் விஷயத்தில் அதிமுகவுக்கு சரியான மாற்றாக திமுக இல்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தனி நீதிமன்றம் அமைத்து ஊழல் அமைச்சர்களை உள்ளே தள்ளுவோம் என்றார்கள், லோக்பால் கொண்டுவருவோம் என்றார்கள். எதையும் செய்யவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, சம்பளமே இல்லாத கவுன்சிலர் பதவிக்கு எப்போது கோடிகளை முதலீடு செய்து வென்றார்களோ, அப்போதே திமுக ஊழலைப் பற்றிப் பேசும் தகுதியை இழந்துவிட்டது என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டார்கள்.

நேற்றுவந்த அண்ணாமலைகூட அடித்து ஆடுகிறார். செயல்படாத கட்சியாக இருக்கிறது ஆஆக. உங்கள் முகம்கூட மக்களுக்குத் தெரியாதே?

நாங்க செயல்படலைன்னு எதை வெச்சிச் சொல்றீங்க? 8 வழிச்சாலைக்கு எதிராகப் போராடி நானே 10 நாள் ஜெயிலில் இருந்திருக்கேன். விவசாயிகள் மாநாடு நடத்தியிருக்கோம். அடுத்து பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சொத்து வரி உயர்வைக் கண்டிச்சும் போராட்டம் வெச்சிருக்கோம். அண்ணாமலை செய்வது பப்ளிசிட்டி அரசியல். திமுகவை அவர் தீவிரமாக எதிர்ப்பதே, தமிழ்நாட்டில் நாங்களும் இருக்கோம் என்று காட்டிக்கொள்ளத்தான். மற்றபடி, ஏதாவது மக்கள் பிரச்சினைக்காக உண்மையாகப் போராடியிருக்கிறாரா?

கட்சி பலத்தைவிட, வாக்காளர்களை அதிகம்கொண்ட கட்சியாக ஆஆக இருக்கிறது. தேர்தல் நடத்துகிற மாநிலங்களில்தான் கட்சி கவனம் செலுத்துகிறது. இப்போது தமிழ்நாட்டில் தேர்தல் இல்லை. தேர்தல் நேரத்தில் எங்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு கேஜ்ரிவால் தமிழ்நாட்டை ஒரு சுற்று சுற்றினால், போதாதா? வேண்டுமென்றால் பாருங்கள், 2024 தேர்தலில் தமிழகத்தில் பாஜகவைவிட அதிக இடங்களில் வெல்கிறோமா இல்லையா என்பதை.

Related Stories

No stories found.